28 April 2020




அந்த குரல் யாருடையது என்று கணிக்க இயலவில்லை. ஆனால் அது ஒரு பெண்ணின் குரல் என்று மட்டும் இப்போது நினைவில் இருக்கிறது. நான் அவர் அந்தவார்த்தையை உச்சரித்த உடனே ஏதோ ஒரு அதிர்ச்சி என்னை ஆட்கொண்டதாக உணர்ந்தேன். அதற்கு காரணமும் இருக்கத்தான் செய்தது.

அண்ணனைப் பொருத்தவரையில் முகூர்த்த நேரம் துவங்கி சுமார் முக்காள் மணிநேரம் கழித்துதான் தாலி கட்ட சொன்னார்கள். ஆனால் எனது திருமணத்தில் உள்ளே வந்த பதிநைந்தே நிமிடத்தில் என்னை தாலி கட்ட எழுந்திருக்க சொன்னது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. அதற்குள்ளேயே முகூர்த்த தட்டு எல்லோரிடமும் காட்டப்பட்டு, ஆசிர்வாதம் செய்யப்பட்டு அதிலிருந்து அட்சதை அனைவரிடம்உம் கொடுக்க பட்டிருந்தது.
இவையெல்லாம் துரித கதியில் நடந்தது கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது எனக்கு.
அதுக்குள்ளேயா?” என்று மனதில் நினைத்தவாறே எழுந்திருக்க தயாரானேன்.
வினோத் இப்போ நீ தாலி கட்டனும். ஒன்னும் அவசர படாத. பயப்படாம பொருமையா கட்டு .” என்றார் பாலாஜி அண்ணா எனது இடது புரத்தில் நின்றபடி.

நான் எழுந்தேன்.

அய்யர் குடுப்பாரு பொருமையா வாங்கி கட்டு.” என்றார் நான் எழுந்த உடன்.
நான் எழுந்து அர்ச்சனாவின் எதிரே சென்று நின்றேன். இல்லை இல்லை நிற்கவைக்கப்பட்டேன். அவளை நாங்கள் அமர்ந்திருந்த மனையின்மீதே எழுந்து நிற்கவைத்தனர். எங்கள் வழக்கப்படி நின்றபடி தாலி கட்டவேண்டும். நாங்கள் அமரும்போதே எங்களை கிழக்கு திசையை பார்த்தமாதிரிதான் அமர வைத்திருந்தார்கள். இப்போது அவள் மட்டும் கிழக்கு திசையை பார்த்தபடி மனையின்மீது நின்று கொண்டிருந்தாள். நான் அவளின் முன்னே மேற்கு திசையை நோக்கியபடி எதிரில் நின்று கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில் எனது இடது பக்கத்தில் இருந்து விருவிருவென்று வந்த லலிதா மாமி எனது கையில் ஏதோ ஒன்றை கொடுத்து வாயில் போட்டுக்கொள்ள சொன்னார். தாலி கட்டும்போது அதை வாயில் வைத்திருக்கவேண்டும் என்று சொன்னார்.

வாயில் போட்டேன். போட்ட உடனேயே வாந்தி வருவதுபோல இருந்தது. சீறகமும் வெல்லமும் கலந்த கலவையாம் அது. பின்னாளில்தான் சொன்னார்கள். அதை விழுங்கவும் முடியவில்லை  துப்பவும் முடியவில்லை. இதற்கிடையில் அந்த சீறகம் கலந்த வெல்லத்தை கொடுத்த லலிதா மாமி அருகில் வந்து,
தாலிய வாங்கி பொருமையா கட்டு. எல்லோரும் அவசர படுத்துவாங்க.” என்றார். நான் அவர் சொன்னதை கேட்டபடி நின்றேன். ஏற்கனவே எனக்குள் இருந்த அச்சம் அதன் உச்சத்தை எட்டிக்கொண்டிருந்தது.

எனது திருமணத்தைப் பொருத்தவரையில் நான் இரண்டு விஷையத்திற்காக அஞ்சியதாக குறிப்பிட்டிருந்தேன். நகை அணிவது என்பது மூன்றாவதாக சேர்ந்த அச்சம். இரண்டாவதாக இருந்த அச்சம் அந்த மழை காலத்தில் அவர்கள் செய்யும் சடங்குகளால் உடலில் ஏற்படும் ஜலதோஷம் மாதிரியான பிரச்சனைகள். நல்லவேளையாக அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

இதோ முதல் அச்சம்! தாலி கட்டுவது. ஏதேனும் சிறு தவறு செய்தால் கூட காலத்துக்கும் பேசுவார்கள். பொதுவாகவே தாலி கட்டும்போது ஒரு சிலரை தவிர பெரும்பாலான ஆண்களுக்கு கைகள் நடுங்குமாம். அல்லது கண்ணீர் வந்துவிடுமாம். பலமுறை பல திருமணங்களில் தாலி கட்டும் நிகழ்வுகளை பார்த்திருக்கும் பார்வை உள்ள சாதாரன ஆண்களுக்கே இப்படி என்றால் எனது நிலைமை?

அர்ச்சனாவின் எதிறே இன்னும் வெகு சிலநொடிகளிலேயே அவளுக்கு தாலிகட்டுவதற்காக நின்றுகொண்டிருந்த எனது வலது காலை தூக்கினார் அவளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த நந்தினி அக்கா. எனது வலது காலின் பெருவிரலை அர்ச்சனாவின் வலதுகால் பெருவிரலின்மீது வைத்தார்.

அது சம்பர்தாயம். எனக்கும் தெரியும். ஆணின் வலது காளின்  பெருவிரல் பெண்ணின் வலது காளின் பெருவிரலின்மீது தாலி கட்டும்போது வைக்கப்பட்டிருக்கவேண்டும். அதைத்தாண் அவளுக்கு பின்னால் இருந்த நந்தினி அக்காவும் செய்தார். அப்படி வைக்கப்பட்டிருக்கும் ஆணின் வலது கால் பெருவிரல் பெண்ணின் பெருவிரலை அழுத்தியபடி இருக்கவேண்டும் என்று சொல்வார்கள். நான் அப்படியாகவெல்லாம் ஏதும் செய்யவில்லை. எனது பெருவிரலை வைத்தது மாதிரியும் வைக்காதது மாதிரியும் மிக லேசாக அவளின் பெருவிரல்மீது வைத்திருந்தேன். தப்பி தவறி கூட கால் அவளது பெருவிரலின் பக்கத்து விரலில் பட்டுவிடக்கூடாது என்ற எண்ணம் மட்டும் அந்த அச்சம் நிறைந்த நிமிடத்திலும் எனது மூலையில் ஓடிக்கொண்டிருந்தது.

அந்த மெட்டியால் முந்தையநாள் ஏற்பட்ட வலியானது பெரிய அளவில் சரியாகவில்லை என்று அன்று காலையிலேயே அவளை நான் கேட்டபோது அவள் சொன்ன பதிலில் இருந்து தெளிவாகத் தெரிந்தது. ஏற்கனவே தாலி கட்டவேண்டுமே என்ற அச்சத்தோடு தெரியாமல் கூட இவளது மெட்டி இடப்பட்டிருக்கும் விரலை மிதித்துவிட கூடாது என்ற அச்சமும் சேர்ந்து கொண்டது.

எங்களது வழக்கப்படி மெட்டி போடும் சடங்கை திருமணத்திற்கு முந்தையநாள் பெண் வீட்டிலிருந்து மண்டபத்திற்கு கிளம்பும்போதே முடித்துவிடுவார்கள். இப்போது என் விரல் பட்டு அவள்அம்மா!” என்று கத்தினாள் என்னை முடித்துவிடுவார்கள்.
தொந்நூற்று ஒன்பது ரன்களில் கிரிக்கெட் மைதானத்தில் நின்று கொண்டிருக்கும் டெண்டுல்கரை போல ஆகிப்போயிருந்தது எனது நிலைமை.

புரோகிதர் தாலியை எடுத்தார்.
வாங்கிக்கோ வாங்கிக்கோ.” என்று சில குரல்கள். ”வாங்கிக்கோங்க.” என்றார் புரோகிதர்.
அய்யர்களுக்கு பார்வை இல்லாதவங்களோட சைக்காலஜி எல்லாம் தெரியாது. நாமதாண் கேர்ஃபுல்லா தாலிய வாங்கி அதோட எண்ட தேடி பிடிச்சி பொண்ணோட கழுத்துல கட்டனும்.” என்று எனது பார்வையற்ற நண்பர்கள் சிலர் சொன்னதும் நினைவில் இருந்தது. அந்த பயம் வேறு ஒரு பக்கம். தெரியாமல் தவற விட்டோமென்றால் அவ்வளவுதான்.

ஆனால் இந்த புரோகிதர் அந்த கஷ்டத்தை எனக்கு கொடுக்கவில்லை. மிக அழகாக நான் அந்த திருமாங்கல்யத்தை இரண்டு பக்கங்களையும் பிடித்துக்கொள்ளும்படி வசதியான முறையில் எனது கையில் கொடுத்தார்.
நான் வாங்கிக் கொண்டேன்.
கட்டுங்க.” என்றார்.
நான் அர்ச்சனாவின் தோள் அருகே அந்த திருமாங்கல்யத்தை கொண்டு சென்றேன். யாரோ எனது இடது கையை மிக லேசாக பிடித்தும் பிடிக்காமலும் அவளது தோளின்மீது வைப்பதுபோல இருந்தது. அப்படியே திருமாங்கல்யத்தின் இரு முனைகளையும் பற்றிக்கொண்டு அவளது கழுத்தின் பின்புரம் கொண்டு சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு குரல் கெட்டியாக ஒலித்தது.
கெட்டி மேளம் கெட்டி மேளம்!”
புரோகிதர்தான். அவர் அவர் வேலையை சரியாகத்தான் செய்துகொண்டிருந்தார். ஆனால் அப்படி சொன்னவுடன் எனக்குதான் பயமாகி போனது.
அட இரு யா இந்த ஆளு வேற. நானே .... .” என்று முனகியேவிட்டேன். தவிர மேளமும் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர் மந்திரமும் சொல்ல ஆரம்பித்து விட்டார். நான் இன்னும் முதல் முடிச்சைக்கூட போடவில்லை. அதே சமயத்தில் தலையில் ஏதேதோ வந்து விழுந்தது. அட்சதை போடுகிறார்கள். அது அதன் பங்கிற்கு ஒரு அறைநொடி பயத்தை ஏற்படுத்தியது போலிருந்தது.

அங்கு நடப்பவை எதையும் காதில் வாங்க கூடாது என்று ஒரு நொடியில் முடிவெடுத்தேன். மஞ்சள் தெய்த்திருப்பதால் இரு பக்கங்கலில் இருக்கும் இரட்டை கயிறுகள் ஒன்றாகிவிடும் என்று அப்பா சொன்னது நடக்கவில்லை. இரட்டை கயிறுகளாகவேதான் அவை இருந்தன. பதற்றத்தில் பயம் மட்டுமல்ல சில நேரத்தில் துணிச்சலும் வந்துவிடும். முதல் முடிச்சை போட்டேன்.

நேரம் ஆறு இருவத்து ஏழு.

முதல் முடிச்சை போடும்போது இருந்த பயம் இரண்டாம் முடிச்சை போடும்போது சற்று தணிந்திருந்தது. மணப்பெண்ணின் கழுத்தில் மணமகன் தாலிகட்டும்போது அதன் மையப்பகுதியை மணப்பெண்ணின் வைற்றில் இருக்கும்படி யாராவது ஒரு பெண்மணி பிடித்துக்கொள்ளவேண்டும். அப்படிநான் தாலிகட்டும்போது யாரோ அர்ச்சனாவின்  வைற்றில் அந்த மாங்கல்யத்தின் மையப் பகுதியை வைத்தபடி பிடித்துக்கொண்டிருந்தார். ஒருவழியாக மூன்றாம் முடிச்சையும் போட்டுமுடித்தேன்.

தாலி கட்டியவுடனேயே எந்த காரணத்துக்கொண்டும் கையை எடுத்துவிட கூடாது என்று அப்பா சொன்னது நினைவிலிருந்தது. அதன்படி வலது கையை அந்த மாங்கல்யத்திலேயே  வைத்திருந்தேன். இடது கையை நீட்டினேன். நான் நீட்டியவுடன் குங்குமம் கொடுத்தார்கள். பிறகே அப்பா சொல்லியிருந்தபடி அந்த வலது கையை சற்றெ எடுத்து குங்குமத்தை இடது கையிலிருந்து எடுத்து நான் முடி போட்ட அந்த இடத்தில் எனது வலது கை விரலால் வைத்துவிட்டு இரு கைகளையும் மொத்தமாக எடுத்திருந்தேன்.

திருமணம் முடிந்திருந்தது. ”உன் பொண்ணா இருந்தா இந்த மாதிரி பார்வை இல்லாதவனுக்கு குடுப்பியா?” என்ற கேள்விக்கு விடை கிடைத்திருந்தது.

நான் தாலி கட்டி கையை எடுத்தவுடன் மூனு போட்டியாடா? மூனு போட்டியாடா?” என்று கஸ்தூரி மாமி அர்ச்சனாவின் பின்னால் இருந்து கேட்கஆம்.” என்று தலையாட்டினேன் நான்.

தாலிகட்டி முடித்த அந்த தருனத்தில் அத்தையின் கண்களிலும் மாமாவின் கண்களிலும் கண்ணீர் ஒருபுறம் என்றால், எனது அப்பாவின் கண்களிலும் அம்மாவின் கண்களிலும் இருந்து வெளியேறிக்கொண்டிருந்த கண்ணீர் துளிகள் மறுபுறம் என்றூ அந்த இடத்தையே உணர்ச்சி மிக்கதாக ஆக்கிவிட்டிருந்தன. பக்கத்திலிருந்த பாலாஜி அண்ணாவின் கண்களும் அதன் பங்கிற்கு கலங்க, சற்று தூரத்திலிருந்த தாய்மாமா விஜயகுமாரும் ஆநந்தத்தால் அழுதுவிட்டார் என்ற தகவல் கிடைத்தது. எங்கே தாலியை கட்டும்போது கீழே விட்டுவிடுவேனோ என்ற அச்சத்தில் அர்ச்சனாவும் அழுதாளாம். அவள்தான் பின்னாளில் சொன்னாள்.

தாலிகட்டியவுடன் இன்னொரு கயிறை கொடுத்து கட்டச் சொன்னார்கள். சிறிய கயிறு. நூல் மாதிரி இருந்தது. எங்கள் வழக்கத்தில் அதை கிண்ணி பொட்டு என சொல்லுவார்கள். அர்ச்சனாவின் தொண்டைப் பகுதி முடியும் இடத்தில்  அந்தக் கயிறின் மையத்தை யாரேனும் வைத்து பிடிக்க நான் கழுத்தில் மூன்று முடி போடவேண்டும். முதல் முடிச்சை போட்டுவிட்டு கயிறை இழுத்தால் வரவில்லை.
லெந்த் பத்தல! லெந்த் பத்தல! லெந்த் பத்தல!” என்று மூன்று முறை கத்தினேன். அவளுக்கு பின்னால் இருந்த நந்தினி அக்காவும்கயிறு ரொம்ப சின்னதா இருக்கு.” என்றார் அந்த சமயத்தில். நாம் பாட்டுக்கு இழுத்தால் அவள் தொண்டையில் சென்று இருகிவிடும் என்ற பயத்தில் போட்ட ஒரு முடிச்சுடன் கையை எடுத்துவிட்டேன்.
மூனு போட்டியாடா? மூனு போட்டியாடா?” அதே கஸ்தூரி மாமிதான். இந்த முறை கையை தூக்கி ஆள் காட்டி விரலை மட்டும் மேலே உயர்த்தி ஒன்றுதாண் என்று சமிக்னை செய்தேன். அது புரிந்ததா இல்லையா என்றெல்லாம் தெரியாது. பிறகு அவளது தொண்டைக்கு கீழே அழுத்திப்பிடித்திருந்த கையை எடுத்தவுடன் கயிறு தலர்ந்த உடன் அது சரி செய்யப்பட்டது.

சில நிமிடங்களில் மாலை மாற்றும் சடங்கு நடந்தது. அவள் அவளது கழுத்திலிருந்த மாலையை என் கழுத்திலும் நான் எனது கழுத்திலிருந்த மாலையை அவள் கழுத்திலும் மாறி மாறி அணிவித்து கொண்டோம். பிறகு அவள் தலைமேல் இரண்டு கையால் எடுத்து அரிசி போட சொன்னார் அர்ச்சகர். முதல் இரண்டு முறை அவள் தலையில் பட்டு பின்னால் போய் விழுந்தது. பிறகு அடுத்தமுறையிலிருந்து அவளது முன்னந்தலையிலேயே போட்டு அது அவள் உடல் முழுக்கவிழும்படி போட்டேன்.
இம். அப்படித்தான்.” என்றார் புரோகிதர். அதற்கு இரண்டுமூன்று முறை போட்டபின் அவளது கையில் அரிசியை எடுத்து என் தலைமேல் போட சொன்னார்கள்.

சற்று உயரம் குறைவாக இருக்கிறாளே என்று நான் நாற்காலியில் அமர்வது போல் நின்றநிலையில் அமர்ந்து தலையை தாழ்த்த,
குணிய கூடாது! குணிய கூடாது!” என்று ஒருசேர இரண்டு மூன்று பெண்கள் கத்தி என்னையும் நிமிர்த்துவிட்டனர். பிறகு அவள் என் தலைமீது அரிசி போட்டாள்.

ஒருவழியாக எங்களை அமர சொல்லி உத்தரவு வந்தது. அதுவரை வைத்திருந்த வலதுகாலின் பெருவிரலை அவளின் பெருவிரலின்மேலிருந்து எடுத்தேன். பிறகு இருவரும் பழைய மாதிரி அதேநிலையில் அமர்ந்தோம். எனது கைகள் மட்டும் அப்போதும் கூட நடுங்கி கொண்டிருந்தன. ஆனால் அதை என்னாலேயே உனர முடியவில்லை. அண்ணிதான் கேட்டார். “என்ன உன் கை இன்னும்கூட நடுங்கிட்டே இருக்கு?” என்று கேட்டபோதுதான் தெரியும் அது இன்னும் நடுங்கி கொண்டிருக்கிறதென்று.

நாங்கள் அமர்ந்துகொண்டிருக்கும்போது எனது வேட்டியையும் அர்ச்சனா அணிந்திருந்த புடவையையும் ஒன்றாக முடி போட்டார் புரோகிதர்.

தாலி கட்டி முடித்து நாங்கள் அமர்ந்திருக்கும்போது அப்பா என்னருகே வந்து  எனது வங்கி மேளாலர் வந்திருப்பதாக சொன்னார். நான் யாரென்று யோசித்தேன். ”லேடி மேனேஜர்.” என்றார்.
லேடி மேனேஜரா?” “தேன்மொழி மேடமா!” என்றேன் ஒரு நொடி யோசித்துவிட்டு. ”ஆமாம்.” என்றார் அப்பா.
ஆச்சர்யமாக இருந்தது எனக்கு. எங்கள் ஊரான வேப்பம்பட்டில் நடக்கவிருக்கும் வரவேற்புக்குதான் வருவார் என்று நினைத்தேன். அதுதான் அவருக்கு பக்கம். ஆனால் சென்னையிலிருந்து சுமார் ஐம்பத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் எனது திருமணம் நடக்கும் சுருட்டப்பள்ளி கோவிலுக்கு வந்தது அதுவும் அவ்வளவு காலையில் முகூர்த்தத்திற்கு வந்தது எனக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.

தேன்மொழி மேடம் எனது முன்னால் வங்கி மேளாலர். அவர் மேளாலராக இருந்த காலத்தில் எனது வங்கி கிளையே கோவில் மாதிரிதான் இருந்தது எனக்கு. அவர் மாறுதலாகி மூன்று வருடம் ஆகிறது. ஆனால் ஹெல்ப் டெஸ்கில் அமர்ந்திருக்கும் என்னிடம் வரும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் இன்னும் அவரை புகழ்ந்துவிட்டுதான் செல்வர். வாரத்திற்கு இருவராவது வந்துஅந்த அம்மா மாதிரி வராது பா.” என்று சொல்லிவிட்டு செல்வர். எந்த ஒரு அதிகாரி தனக்கு கீழிருக்கும் ஒரு மனிதரை சக மனிதராக நடத்துகிறாரோ, அவரை அகிலத்தின் அனைத்ததிகாரமும் பெற்ற அந்த கடவுள் கூட தன்னைவிட உயர்வான கடவுளாக பாவித்து யோசிக்காமல் தொழுவார் என்பது எனது நிலைப்பாடு.

தன் கணவருடன் நாங்கள் அமர்ந்திருக்கும் மனைக்கு  வந்து அன்பளிப்பை என் கையில் கொடுத்துவிட்டு என்னையும் அர்ச்சனாவையும் வாழ்த்தினார் தேன்மொழி மேடம்.
உடனே திருப்பதியிலிருந்து வந்த எனது நண்பன் மஹேஷ் அவனது குடும்பத்தோடு வந்திருந்தான். நான் ஆறு இருவத்து ஏழுக்கு தாலி கட்டியதை அப்பா மட்டும் குறித்துவைத்திருக்கிறார் என்று நினைத்தேன். ஆனால் அவனும் குறித்துவைத்திருந்ததை சொல்லியபோது வியப்பாகவும் இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது. அன்பளிப்பை அளித்து அவனும் நாங்கள் மனையில் அமர்ந்திருக்கும்போதே வாழ்த்தினான்.
பிறகு நண்பர்கள் மோஹன்ராஜ் சந்த்ரு வினோத் ஆகியோரும் சென்னையிலிருந்து வந்தனர். எங்களை வாழ்த்திவிட்டு மனையின் பின்னாலேயே சில நேரம் நின்று கொண்டிருந்தனர். மோஹன்ராஜ் வருவான் என்று தெரியும் ஆனால் சந்த்ருவும் வினோத்தும் வந்தது ஆச்சர்யமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது எனக்கு.

இதற்கிடையில் அரிசி போடும் சடங்கு தொடங்கியது. அங்கே விரிக்கப்பட்ட ஒரு துணியில் என் பெற்றோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக ஜோடி ஜோடியாக வந்து அரிசி போட நாங்கள் அனைவரையும் கை எடுத்து கும்பிட்டோம்.

பிறகு எங்கள் இருவரையும் மனையைவிட்டு எழச்சொல்லி அந்த மனையை  சுற்றிவர சொன்னார்கள்.

அந்த மனையைச் சுற்றிவருவதற்காக அர்ச்சனாவுடன் திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக கை கோர்த்தபோது சுமார் இரண்டு வருடத்திற்கு முன் நான் கேட்ட அந்த வார்த்தை ஒருமுறை நினைவில் தோன்றி மறைந்தது.

அந்த வார்த்தைதான்! அதே வார்த்தைதான்!

”என் மகள கல்யானம் பண்ணிக்குரவன் இவளோட கைய பிடிச்சிட்டு போரவனா இருக்கனும். இவ அவனோட கைய பிடிச்சிட்டு போரா மாதிரி இருக்க கூடாது.”
திருமணம் என்னும் அத்தியாயத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சமம் என்பதை உணரவேண்டும். இங்கு யார் கையை யார் பிடித்துக்கொண்டு செல்கிறார்கள் என்பது முக்கியமல்ல. பிடிக்கப்பட்ட அந்த இரண்டு கைகளும் இணைபிரியாமல் இருதிவரைக்கும் செல்கிறதா என்பதுதான் முக்கியம்.

நாங்கள் இருவரும் கைகோர்த்து செல்ல எங்களுக்கு முன்னும் பின்னும் அனைவரும் சேர்ந்துகொண்டனர். தங்கை வனஜாதான் விளக்கை ஏந்தி முன்னே சென்றாள். அனைவருமாய் சேர்ந்து மனையை சுற்றி முடித்தோம். பிறகு புரோகிதர் வந்து எனது வேட்டியில் முடிபோட்டிருந்த அவளது புடவையை பிரித்துவிட்டு அருந்ததி பார்க்கும் சடங்கை கூட செய்யாமல் ஓடிவிட்டார். அவருக்கு அதே முகூர்த்தத்தில் மூன்று திருமணங்களாம். யோசித்துக் கொள்ளுங்கள்.

திருமணம் முடிந்த கையோடு மணமக்களை புரோகிதர் அவர்களது உரவினர்களோடு கூடி வெளியே அழைத்துவந்து வானத்தில் இருக்கும் அருந்ததி என்ற நச்சத்திரம் தெரிகிறதா? என்று கேட்பார். உரவினர்களும் அவர்கள் பங்கிற்கு கேட்பர். அதற்கு மணமக்கள் குறிப்பாக மணமகள் தெரிகிறது என்று சொல்லவேண்டும். அந்த சடங்கை அந்த அய்யருடன் சேர்ந்து அனைவரும் மரந்திருந்தனர்.

வெளியில் வந்திருந்தவர்களுடன் புகைப்படம் எடுத்துவிட்டு பிறகு சுவாமி தரிசனம் செய்ய எங்கள் இருவரை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.
அம்மன் சன்னதியில் நின்று கொண்டிருந்த அர்ச்சகர் ஒருவர் எங்களைப் பார்த்துவிட்டு
”உங்களுக்கு அழகான சம்சாரம் கெடச்சு இருக்காங்க.” என்று சொல்லி குங்குமத்தை என் கையில் கொடுத்து அவளது நெற்றியில் வைக்க சொன்னார். நான் வைத்தேன். பிறகு அங்கிருந்து பள்ளிக்கொண்டேஷ்வரர் சன்னதிக்கு சென்றோம்.
”யூ ஆர் வெரி டெடிகேட்டட் பர்சன் You are very dedicated person.” என்றார் அங்கிருந்த அர்ச்சகர் அர்ச்சனாவைப் பார்த்து இரண்டு முறை.
அதற்கு அர்ச்சனா எதுவும் சொல்லவில்லை. ராதா மட்டும் ”ஓக்கே சாமி. ஓக்கே சாமி.” என்று சொல்லிவிட்டு அர்ச்சனாவை கூட்டிக்கொண்டு நகர்ந்தார்.

வெளியே வந்தவுடன் திருமண பதிவேட்டில் இருவரும் கையெழுத்திட்டோம். பிறகு திருமணம் செய்யும் பெண்களுக்கு உதவித்தொகை தரும் அம்மாநில முதல்வர் ஜகன்மோகன் ரெட்டியின் பெல்லி கானுகா திட்டத்திலிருந்து வந்த பெண்மணி எங்கள் இருவரையும் புகைப்படம் எடுத்துவிட்டு சென்றார். 

அங்கிருந்து சாப்பிட கிளம்பினோம். காலை உணவும் நன்றாகவே இருந்தது. சாப்பிடும்போதே மோஹன்ராஜ் சந்த்ரு வினோத் ஆகியோர் உடன் பேசிக்கொண்டுவிட்டு பிறகு சாப்பிட்டு முடித்துவிட்டு அவர்களை வழியனுப்பி வைத்தேன்.

அங்கிருந்து திரும்ப நாங்கள் தங்கிய மண்டபத்திற்கு போய் சேர்ந்ததும் சற்றும் தாமதிக்காமல் அந்த மண்டபத்திலிருந்து என்னையும் அர்ச்சனாவையும் காரில் ஏற்றி துணைக்கு இன்னும் சிலரையும் ஏற்றி விட்டிருந்தனர்.
பெரியப்பாலையத்திற்கு சென்று அதன் பிறகு எங்களது வீட்டிற்கு எங்களை செல்லும்படி அம்மா ஓட்டுனரிடமும் அங்கிருந்த மற்றவர்களிடமும் சொல்லிக்கொண்டிருந்தார். நேராக வீட்டிற்கு சென்றால் போதும் என்று தோன்றீயது எனக்கு. ஒரு கோவிலில் திருமணத்தை முடித்துவிட்டு இன்னொரு கோவிலுக்கு செல்வதில் எனக்கு விருப்பமில்லை. இருந்தாலும் எதிர்ப்பேதும் தெரிவிக்காமல் அமைதியாய் இருந்தேன்.

ஆனால் அப்போது எனக்கு தெரியாது. நான் என் இருதி மூச்சு இருக்கும்வரை எப்போதும் மறக்காமல் நினைத்து பார்க்கவேண்டிய சம்பவம் ஒன்று பெரியப்பாலையத்தில் எனக்காக காத்திருக்கிறது என்று.

கார் கிளம்பியது.

2 comments:

  1. வினோத் இந்த அத்தியாயத்தை படிச்சதிலிருந்து பெண்ணாக பிறப்பதை நினைத்து ஜாலியா இருக்கு. பெண்கள் எந்தக் கஷ்டமும் இல்லாம அழகா கட்டுற தாலிய வாங்கிக்கிறாங்க. பாவம் ஆண்களுக்கு அல்லவா இந்த அழகான இம்சைகள் எல்லாம். அனுபவிங்க.

    ReplyDelete
  2. உண்மையாகவே ரொம்ப அருமையாக தெளிவாக எழுதறீங்க
    திருமணம் என்ற நிகழ்வை என் வாழ்வில் நான் சந்திக்கவில்லை அதனால் இப்படியான பல விஷயங்கள் நீங்கள் சொல்லி தான் தெரிகிறது
    அதுக்கப்புறம் தாலி கட்டும்போது மூன்றாவது முடிச்சு மாப்பிள்ளை வீட்டில் உள்ள அக்கா தங்கை யாராவது தான் போட வேண்டும் என்பதே எங்கள் ஊர் வழக்கம்

    ReplyDelete

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube