’வினோத்தும் ஒரு பார்வைத் திறன் குறையுடைய பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்துக்
கொண்டிருக்கிறார்கள். நீ மட்டும் விளகி இருந்தால் அந்தப் பார்வைத்
திறன் குறையுடைய பெண்ணைத் தாண் அவர் மணம் முடித்திருப்பார்.’ என்று அர்ச்சனாவிடம் ஒரு நெருங்கிய உரவினரால் திரும்பத் திரும்ப சொல்லப் பட்டது.
நிச்சயம் ஆனதிலிருந்து திருமணத்திற்கு முந்தய நாள் வரை அவளிடம் அதை சொல்லிக்
கொண்டிருந்தார் அவர்.
இதைப்
பற்றிய விளக்கத்தை நிச்சயத்திற்கு முன்பே மிகத் தெளிவாக அத்தையிடமும் அங்கிருந்த மற்றவர்களிடமும்
எடுத்துரைத்திருந்தேன். ஆனால் அந்த உரவினர் அதை ஏன் செய்தார் என்றுதாண் எனக்கு விளங்கவில்லை.
திரும்பத் திரும்ப ஒன்றை சொல்லும்போது
அது விளையாட்டுக்காகவே என்றாலும் அது வினையாகிவிடும். பொய்யாகவே
இருந்தாலும் கேட்பவர் மனதில் ஒருவேளை இது உண்மையாக இருக்குமோ என்ற ஐயத்தை ஏற்படுத்திவிடும்.
நிச்சையம் முடிந்த சில நாட்களிலேயே அத்தையின் விக்கட்டை வீழ்த்தி இருந்தார்
அந்த உரவினர்.
என்னைப்
போன்ற பார்வைத் திறன் குறையுடைய பெண்ணை நான் திருமணம் செய்தால் எந்தக் காலத்திலும்
ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று மிகக் கண்டிப்பாக சொல்லிக்கொண்டிருந்த எனது அத்தையே கூட ’அவனுக்கு அதுதான் விருப்பம்
என்றால் நாம் விளகி விடலாம்.’ என்று அர்ச்சனாவிடம் சொல்லி இருக்கிறார்.
அதற்கு அர்ச்சனா ’ஒரு வேளை அது உண்மையாக இருக்கும்
பட்சத்தில் அவர் இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொண்டிருக்க மாட்டார். அவரே அமைதியாக இருக்கும்போது நீங்கலெல்லாம் ஏன் தேவையில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
அமைதியாய் இருங்கள்.’ என்று சொல்லி அத்தையை அமைதிப்
படுத்தி இருக்கிறாள் இவள்.
அந்த நம்பிக்கைதான்
இன்று இந்த உரவை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேண். நம்பிக்கையும் வெளிப்படைத்தன்மையும் இருந்தால் போதும். எந்த உரவையும் தக்கவைத்துக்கொள்ளலாம். அவள் என் மீது
நம்பிக்கையாக இருந்தாள். நான் அவளிடம் வெளிப்படையாக இருந்தேன்.
நிச்சயத்திற்கு முன்பே அனைத்தையும் வெளிப்படையாக தெளிவு படுத்தி இருந்தேண்.
நான் மேட்ரிமோனியில் பெண் தேடிக்கொண்டிருந்ததுவரை.
ஆனால்
இந்த விவகாரத்தில் எனது நலனில் மிக அக்கரை கொண்டிருக்கும் அந்த நெருங்கிய உரவினர் திரும்பத் திரும்ப
அர்ச்சனாவிடம் அதையே சொல்ல,
தன்னை
பிடிக்கவில்லையோ, ஒரு காதலுக்கு இடையூறாக இருக்கிறோமோ, தேவை இல்லாமல் தான்
ஒருவரின் வாழ்வில் தினிக்க படுகிறோமோ என்ற எண்ணத்தை அவளது மனதில் விதைக்க முயன்றிருக்கிறார்.
விதை மரமாக
வேண்டுமென்றால் மண் ஒத்துழைக்கவேண்டும்.
விருப்பங்கள் காதலாகவேண்டுமென்றால் மனங்கள் ஒத்துழைக்கவேண்டும்.
ஆனால் அந்த உரவினர் போட்ட விதை மரமாகும் திறனை இழந்திருந்தது.
காரணம் அர்ச்சனாவின் மௌனம். அவள் அனைத்தையும் கேட்டுக்
கொண்டு அமைதியாக இருந்து கொண்டாள். பொதுவாக கணவன் மனைவிக்குள் ரகசியங்கள் இருக்க
கூடாது என்பது எனது நிலைப்பாடு. நாம் எதையாவது மறைக்கப்போய், அது யார் மூலமாக வெளியில்
வர, அது பெரும் தலைவலியைக் கொண்டுவரும் என்பது எனது எண்ணம். அதற்கு பதில் வெளிப்படையாகவே
இருந்துவிடலாம். நிம்மதியாவது மிஞ்சும்.
இதைப்
பற்றி அந்த உரவினரிடம் கேள்வி எழுப்பினால் விளையாட்டாக சொன்னேன் என்று கூட சொல்லக்
கூடும். ஏனென்றால்
அவரின் சுபாவம் அப்படி. நான் இன்றுவரை அதைப் பற்றி அந்த
உரவினரிடம் ஏதும் கேட்கவில்லை. சில கேள்விகளை கேட்காமல்
இருப்பதே நல்லது. பதில்களைத் தேடிக்கொண்டு செல்லும் வழியில் உரவுகள்
தொலைந்துவிடும் வாய்ப்புகளும் சிலநேரம் அதிகம். எல்லாவற்றிற்கும்
மேலாக நான் அவரை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அதே சமையம் அந்த
உரவினர் மீது பழிபோடுவதும் அவ்வளவு முறையல்ல. ஏனென்றால் அப்படி
ஒரு நிலையை உருவாக்கியிருந்ததே நாந்தான்.
அண்ணனின்
திருமணம் முடிந்தபின் விரும்பத் தகாத சில நிகழ்வுகளுக்குபின் பெண் பார்க்கும் படலத்தைத்
தொடங்கி இருந்தோம் என்று சொல்லி இருந்தேன் அல்லவா? அதன் விளைவாக நான் தேர்ந்தெடுத்த பெண் தான்
அந்த உரவினர் குறிப்பிட்டிருந்த அந்த பார்வைத் திறன் குறையுடைய
பெண். எனது இந்த வலைதலத்தை முழுவதுமாகப் படித்திருந்ததால் ஏற்கனவே
என்னைப் பற்றி நன்கு அறிந்திருந்தாள் அவள். முதலில் தேவைக்காகப்
பேசிக் கொண்டிருந்தோம். பிறகு தேவை இல்லாமல் சண்டைப் போட்டுக்
கொண்டிருந்தோம். என்னைப் பற்றி அவளுக்கும் அவளைப் பற்றி எனக்கும்
நன்கு தெரிந்திருந்தது. நாளடைவில் மிக நெருங்கிய நண்பர்களாகிப்
போயிருந்தோம் நாங்கள்.
ஓரளவு
பார்வைத் தெரிந்த அந்தப் பார்வைத் திறன் குறையுடைய பெண் ஒருநாள் தனது விருப்பத்தையும்
தனது குடும்பத்தின் விருப்பத்தையும் என்னிடம் தெரிவித்திருந்தாள். நானும் அர்ச்சனா பற்றியும்
அத்தையைப் பற்றியும் அந்தப் பெண்ணிடம் மேலோட்டமாக சொல்லியிருந்தேன். என்னிடம் விருப்பம் தெரிவித்திருந்த அந்தப் பெண்ணைப் பற்றி எனது தந்தையிடம்
பேசியிருந்தேன். அந்தப் பெண், அவளது குடும்பம்,
அவளது வேலை என அனைத்தையும் சொல்லி வைத்திருந்தேன். அந்தப் பெண்ணிற்கு ஓரளவு பார்வைத் தெரியும் என்பதால் அப்பாவும் சரி என்றுதாண்
சொல்லி இருந்தார்.
ஒருநாள்
வேறு வேலையாக ஜோதிடரிடம் சென்றிருந்த எனது அப்பா கையோடு எனக்கும் அர்ச்சனாவிற்கும்
ஜாதகப் பொருத்தம் பார்த்துவிடலாம் என்று முடிவெடுத்திருந்தார். எங்கள் குடும்பத்தின் லிஸ்டில்
அர்ச்சனா ஏற்கனவே இருந்ததால் இந்த திடீர் முடிவு. அதே சமையம்
நான் சொன்ன அந்தப் பெண்ணின் பெயர், பிறந்த தேதி, நேரம் என்று எல்லாவற்றையும் அப்போதே அலைபேசியில் என்னிடம்
கேட்டுக் குறித்து கொண்டு
ஜோதிடரிடம் அந்தக் கணமே சொல்லி இருக்கிறார். அப்பாவின் அந்த செயல்
எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. அர்ச்சனாவுடைய ஜாதகத்தோடு சேர்த்து
அந்தப் பெண்ணின் ஜாதகத்தையும் என் ஜாதகத்தோடு ஒப்பிட்டு பார்த்ததில் பொருத்தம் நன்றாக
இருப்பதாக ஜோதிடர் சொன்னார். இப்படி அடுத்தடுத்து எதிர் பாராத
சம்பவங்கள் எனது வாழ்வில் நடக்க, அதற்குபின் உடனே நடந்ததுதான்
அந்த ஊத்துக் கோட்டை சம்பவம். வேறு என்ன செய்ய? எல்லாம் அர்ச்சனாவின் கையில்தாண், இல்லை இல்லை.
அவளது வாயில்தான் இருக்கிறது என்று புரிந்தது.
இப்படிப்
பட்ட நிலையில்தான் அந்தப் பார்வைத் திறன் குறையுடைய பெண்ணை நேரில் சந்திக்க வாய்ப்பு
கிடைத்தது. அதுதான்
எங்களது முதல் சந்திப்பு. அதுவரை அவளைத் தோழியாக மட்டுமே பாவித்திருந்த
எனது மனம் தடுமாற ஆரம்பித்திருந்தது. அவளும் என்னைப் போன்று பார்வைத்
திறன் குறையுடையவள் என்பதாள் உளவியல் ரீதியாகவும், அவளுக்கு ஓரளவு
பார்வைத் தெரியும் என்பதால் வாழ்வியல் ரீதியாகவும் இவளோடு இருதிவரைக்கும் வாழ்ந்துவிட முடியும் என்று தோன்றியது.
ஆனால் அப்படி செய்வதல்ல, நினைப்பது கூட முறையல்ல
என்பது மூலைக்கு தெரிந்திருந்தது. ஏற்கனவே எனக்காக கிட்டத்தட்ட
ஏற்பாடு செய்யப் பட்ட ஒரு பெண்ணை புறம் தள்ளிவிட்டு இன்னொரு பெண்ணைப் பற்றி சிந்திப்பதற்கு
நான் ஒன்றும் சந்தோஷ் சுப்பிரமனியமும் அல்ல, இது ஒன்றும் சினிமாவும்
அல்ல. இருந்தாலும் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு ஒரு முடிவுக்கு
வந்திருந்தேன். வீட்டில் உள்ளோரிடம் ஒன்றை மட்டும் தீர்க்கமாகச்
சொன்னேன்.
’ஏற்கனவே அத்தை உறுதியாக இருப்பதாலும், அந்த ஊர் முழுக்க
இருக்கும் நிலைமையும் புரிகிறது. அர்ச்சனா
என்னை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் எனக்கு இந்தத் திருமணத்தில் சம்மதம். ஒரு வேளை அர்ச்சனா என்னை நிராகறித்தால் வேறு எந்த பெண்ணையும் வெளியில் சென்று
தேடக் கூடாது. நான் அந்தப் பார்வைத் திறன் குறையுடைய பெண்ணைத்
தான் திருமணம் செய்து கொள்வேன். உங்களால் முடிந்தால் அர்ச்சனாவிடம்
சம்மதம் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நான் தேர்ந்தெடுத்த
அந்தப் பெண்ணை எனக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டும்.’ என்று
நான் சொல்ல அப்பாவைத் தவிர அனைவரும் அதிர்ந்து போயினர். அம்மாவுக்கெல்லாம்
அன்று இரவு தூக்கமே இல்லை. அடுத்தநாள் எதிர் வீட்டுக்கெல்லாம்
விஷையம் பரவ. அவர்கள் பங்கிற்கு அட்வைசை ஆரம்பித்திருந்தார்கள்.
எனது அம்மா போதுமான அளவிற்கு அவர்களிடம் புலம்பித்
தள்ளி இருந்தார். ’நான் இப்போதும் சொல்கிறேன். அர்ச்சனாவைத் திருமணம் செய்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. முதலில் அவளிடம் பதிலை வாங்குங்கள். ஆனால் அவள் என்னை
வேண்டாம் என்று சொன்னால் நான் தேர்ந்தெடுத்த அந்தப் பெண்ணைத்தான் மணப்பேன்.
என்னை என் விருப்பத்திற்கு விட்டுவிடவேண்டும்.’ என்று மீண்டும் சொல்லி இருந்தேன்.
அதற்கு
என்னிடம் உளவியல் ரீதியாக காரணம் இருந்தன.
முதலில் இன்னொரு பார்வை உள்ள பெண்ணைத் தேடி செல்ல விருப்பமில்லை.
சொந்தங்களால் நிராகரிக்கப்படும்போது வெளியில் இருந்து வருபவர்களை நான்
நம்பத் தயாராக இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அந்தப் பார்வைத்
திறன் குறையுடையவளின் குணம் எனக்குப் பிடித்திருந்தது. இயல்பாகவே பிறருக்கு
உதவும் அவளது அந்த மனப்பான்மை பிடித்திருந்தது. அவளின் தன்னலமற்ற அந்தத் தன்மைப் பிடித்திருந்தது.
அவளைப் போன்ற ஒரு பெண்ணை இன்னொரு முறை வாழ்வில் சந்திப்பது கடினம் என்று
தோன்றியது. அப்படிப் பட்டவள் கிடைப்பது அபூர்வம் என்று தோன்றியது.
அதனால்தான் அந்த முடிவுக்கு வந்திருந்தேன்.
இதை அனைவருக்கும்
புரியவைக்க இயலாது என்பதால் நான் சொன்னதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி புரிந்து கொண்டனர். அதில் அந்த நெருங்கிய உரவினரும்
அடக்கம். அதைத்தான் அவர் அர்ச்சனாவிடம் அவருக்கே உரிய
பானியில் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்திருக்கிறார். இதெல்லாம் எனக்கே திருமணத்திற்கு பிறகுதான் தெரியும். அவற்றை எல்லாம் கேட்கும்போது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.
ஆனால்
ஒன்று மட்டும் உண்மை. எனது திருமணத்தைப் பொருத்தவரையில் நான் எல்லா வகையான மனிதர்களையும் கடந்து
வந்திருக்கிறேன் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஒரு புறம் துரோகிகள்.
ஒரு புறம் தியாகிகள். இதற்கிடையில்தாண் எனது திருமணம்
என்னும் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது.
திருமணத்திற்கு
முந்தைய நாள் மாலை அந்த மண்டபத்தில் எனக்காக ஒதுக்கப்பட்ட அறையில்தான் அனைவரும் அமர்ந்து
கொண்டிருந்தோம். எனது பக்கத்திலிருந்து வந்த உரவினர்களெல்லாம் அங்குதான் வந்து கூடினார்கள்.
எனக்கு இருப்பு கொள்ளவில்லை. அங்கிருந்து எங்காவது வெளியில் செல்லலாமா என்று யோசித்துக்
கொண்டிருந்தேன். உடனே தம்பி சந்தோஷ் உடன் வர, பக்கத்திலிருந்த கோயிலுக்கு நடக்க ஆரம்பித்தோம்.
அங்குதான் எனக்கு
அடுத்தநாள் திருமணத்திற்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கோயிலில் கொஞ்சநேரம் சுற்றிக்கொண்டிருந்தோம்.
திரும்பிப் பார்த்தால் எல்லோரும் அங்குதான் வந்துகொண்டிருந்தார்கள். வந்தவர்கள் எல்லாம்
திரும்பிவிட நான், தம்பி சந்தோஷ் மற்றும் தம்பி சசி மட்டும் கோயிலில் இருந்த ஒரு தின்னையில்
அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.
சுமார் ஆறு மணிக்கு
வந்து ஏழு மணிக்குதாண் மண்டபத்திற்கு திரும்பினோம். சிறிது நேரத்தில் பெண் வீட்டாரும்
பெண்ணுடன் வந்து சேர்ந்தனர். அதில் அண்ணனும் அண்ணியும் அடக்கம். அண்ணி பெண்ணிற்கு அக்கா
என்பதால் அங்கிருந்துதான் பெண்ணை அழைத்துக்கொண்டு வரவேண்டும். அதனால் அண்ணாவும் அவர்களுடன்
வரவேண்டியதாயிற்று. வந்தவர் எல்லாம் என்னிடம் பேசிவிட்டுதாண் சென்றனர். அர்ச்சனாவைத்
தவிர. எங்களது நிச்சையத்தன்றும் நானும் அவளும் ஒரு வார்த்தைக் கூட பேசிக்கொள்ளவில்லை.
அதன் பிறகும் அலைபேசியில் எல்லாம் பேசிக்கொள்ளவே இல்லை. இருவரும் நன்கு பரிட்சையமானவர்கள்
என்பதால் எங்களுக்கு பேசிக்கொள்ள எதுவும் இருந்திருக்கவில்லை. இருந்தாலும் மண்டபத்திற்குள்
வந்தவள் ஏதாவது பேசிவிட்டு செல்வாளா என்று நினைத்தால் ஊஹும். நான் பாட்டிற்கு அமைதியாக
அமர்ந்து கொண்டிருந்து காதில் விழுபவற்றை எல்லாம் வேண்டாவெருப்பாக கேட்டுக்கொண்டிருந்தேன்.
பொது இடங்களில்
பார்வைத் திறன் குறையுடையவர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை எதுவென்றால் நடமாடுதல்.
ஓரிடத்தில் அமர்ந்தால் பிறகு எழுந்திருக்கவே கூடாது. மற்றவர்கள் மட்டும் இங்கும் அங்கும்
திரிந்து கொண்டிருப்பார்கள். நாம் மட்டும் அப்படி எழுந்துவிட கூடாது. எழுந்தால் அவ்வளவுதாண்
என்ன! என்ன! என்று வந்துவிடுவார்கள். ஒன்றுமில்லை சும்மாத்தாண் நிற்கிறேன் என்று சொன்னால்
கூட கேட்க மாட்டார்கள்.
சிவனே என்றூ அங்கு
உட்கார்ந்திருக்கும் எவனையாவது எழுப்பி அந்த நாற்காலியை நம்மிடம் கொடுத்து மீண்டும்
அமர சொல்லிவிடுவார்கள். அப்படி எழுந்தவர் அப்போதுதான் அங்கு வந்து அமர்ந்திருப்பார்.
இதைக் கூட இவர்களுக்கு புரியவைக்க இயலாது. எனது சிறுவயதில் என்னை போன்ற சிறு பிள்ளைகள்
திருமண மண்டபங்களில் ஓடி ஆடி தாவி விளையாடுவதை மிகுந்த ஏக்கத்துடன் பார்த்திருக்கிறேன்.
அன்றும் அமரவைத்து விட்டார்கள், இன்றும் அமரவைத்துவிடுகிறார்கள் என்று தோன்றுவதில்
எந்த தவறும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. இதுபோன்ற இடங்களில் பார்வைத் திறன் குறையுடையவர்களைப்
பொருத்தவரையில் நாற்காளிகளும் மண்டபங்களும் மட்டுந்தான் மாறுகின்றன.
சில நிமிடங்களுக்குள்
திடிரென ஒரு சலசலப்பு. பெண் வீட்டார் ஒரு பையை வண்டியிலேயே தவறவிட்டு இறங்கிவிட்டிருந்தனர்.
பிறகென்ன? அந்த வண்டிக்காரனை அலைபேசியில் அழைத்து பை இருக்கிறதா என்று கேட்க அவன் இருக்கிறது
ஒரு மணி நேரத்தில் வந்து தருகிறேன் என்று சொல்லியிருந்தான். எப்படியோ சில நேரம் கழித்து
பை கைக்குவந்து சேர்ந்தது. அதே நேரத்தில் இரவு உணவும் தயாராகி வந்து மண்டபத்தில் இறங்கியது.
என்னை கொண்டுபோய் அமர வைத்தார்கள். வலது பக்கத்தில் அர்ச்சனா.
எனது வரவேற்பில்
ஒருவேளை உணவிற்கு சுமாரைநூறு பேருக்கு ஒன்றறை லட்சம் செலவு செய்திருந்தோம். ஆனால் திருமணத்திற்கு
இரண்டு வேளைக்கும் சேர்த்து வெரும் ஐந்தாயிரத்து ஐநூறுதான் செலவானது. இரவு ஒரு ஐம்பது
பேர் காலை ஒரு நூறு பேர் அவ்வளவுதான். ஒப்பிட்டுப் பார்த்தால் ஆட்கள் குறைவுதான். ஆனால்
வரவேற்பன்று சாப்பிட்ட உணவைவிட திருமணத்திற்கு முந்தையநாள் உணவுதான் மிக ருசியாக இருந்தது.
மிகக் குறைந்த விலையில் மிக சுவையான உணவு என்றால் எப்போதும் எனது தேர்வு சுருட்டப்பள்ளி.
சந்தேகம் இருப்பவர்கள் சென்று சாப்பிட்டுப் பாருங்கள். சாதாரன உணவு வகைகள்தாண். ஆனால்
சாகும்வரை மறக்க இயலாது.
சாப்பிட்டு முடித்துவிட்டு
வெளியில் சென்று நடந்துவிட்டு வரவேண்டும் போலத் தோன்றியது. அண்ணாவும் நானும்தான் நடக்கலானோம்.
மிகக் குருகிய
சாலை. கூட்டம் கூட்டமாய் லாரிகள். காதுகளை உரசிச் செல்லுவதைப் போன்ற ஒரு சத்தம். மிக
அருகில் எங்களை உரசிச் சென்ற வாகனங்கள். ஓரமாய் சென்றாலும் கூட ஒருவர் பின் ஒருவர்
செல்வது போல இருந்த அந்த குருகிய சாலை ஓரம். இரவு ஒன்பதை தாண்டி இருந்த அந்த நேரம்.
அவை எல்லாம் ஏதோ ஒரு பயத்தை நெஞ்சில் பரவ விட்டுக்கொண்டிருந்தன. நானும் அண்ணனும் பேசிக்கொண்டே
அந்த சாலை ஓரமாய் சென்று கொண்டிருந்தோம்.
மாமாவின் அம்மாவும்
அவரது தங்கைகளும் வந்திருப்பதாக நான் கேள்வியுற்றச் செய்தியை அண்ணனிடம் உறுதிப்படுத்திக்கொண்டேன்.
ஆரம்பத்திலிருந்தே இந்தத் திருமணத்தை கடுமையாக எதிர்த்தவர்கள் திருமணத்திற்கு வந்திருந்தது
ஆச்சர்யமாக இருந்தது. அந்தக் குறுகிய சாலையில் ஐந்தாறு லாரிகள் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தன.
நாங்கள் பேசிக் கொண்டே செல்லும்போது பின்னால் ஒரு லாரி எங்களுக்கு வெகு சமீபத்தில்
வருவது போலிருந்தது.
பொதுவாக என்னை
தனது இடது பக்கத்தில் வைத்து கூட்டிச் செல்பவன் அன்று என்னை அவனுக்கு வலது பக்கமாக
நடக்கவைத்து கூட்டிச் சென்றுகொண்டிருந்தான். அந்த லாரி மிக அருகில் வர நான் எனது இடது
பக்கத்தில் என் கையைப் பிடித்துக்கொண்டு நடந்துகொண்டிருந்த எனது அண்ணனை ஒரு அடி முன்னே போகவிட்டு எனது இடது புரமாக
நகர்ந்தேன். சாதாரனமாக நடந்து சென்றிருந்தால் கூட எதுவும் ஆகி இருக்காது. ஆனால் எனக்கே
உரித்தான பயத்தில் இடப்பக்கம் நகர அங்கிருந்த ஒரு இரண்டடி அளவு இருக்கக் கூடிய சிறிய
பள்ளத்தில் எனது கால் சென்று புதைந்தது.
அவ்வளவுதான்! அண்ணனுக்கு
பகீரென்று ஆகிப்போனது. பொதுவாக காயங்களைக் கண்டு அஞ்சுபவன் அல்ல அவன். ஆனால் அன்றைய
தேதியில் எனக்கு ஏதாவது சிறு காயம் ஏற்பட்டால் கூட அது தேவயற்ற சிக்கல்களைக் கொண்டுவந்து
விடுமென்று நினைத்திருந்தான். ஆனால் எனக்கு ஒரு சிறு அடி கூட படவில்லை என்று நான் சொன்னதை
அவ்வளவு எளிதில் நம்பவில்லை அவன். பாதம் முழுக்க சேறாகிப் போயிருந்தது. இந்த வேலையே
வேண்டாம் என்று மீண்டும் மண்டபத்திற்கு திரும்பினோம். நான் கால் கழுவிவிட்டு செறுப்பை
கழட்டிவிட்டிருந்தேன்.
சுமார் பத்து மணி
இருக்கும். அனைவரையும் பாக்குவாரும் சடங்கிற்கு மேலே அழைத்திருந்தார்கள். பாக்கு வாருதல்
என்பது எங்களின் வட்டார வழக்கு சொல். இது திருமணத்திற்கு முந்தையநாள் இரவு நடக்கும்
சடங்கு. எல்லா சமூகத்திலும் நடக்குமா என்று தெரியாது. எங்களது நிச்சயதார்த்தம் இரு
வீட்டாரின் முந்நிலையில் மட்டுமே நடந்ததால் அனைவரின் முந்நிலையிலும் நிச்சயதார்த்தத்திற்கு
நிகரான இந்த சடங்கை திருமணத்திற்கு முந்தையநாள் நடத்துவார்கள்.
அதன்படி மணப்பெண் அதற்கான ஆடைகளை அணிந்துகொண்டு,
அங்கு அமைக்கப்பட்டுள்ள மனையில் வந்து அமரவேண்டும். பிறகு அங்குள்ள பெண்கள் எல்லாம்
அந்தப் பெண்ணுக்கு நலங்கு வைப்பார்கள். அவர்கள் நலங்கு வைத்து முடிக்கும்போது ஒரு கையில்
தட்டிலிருக்கும் பாக்குகளை எடுத்து நலங்கு வைத்தவரின் கையில் கொடுக்கவேண்டும். முதல்முறை
மட்டும் இரண்டு கைகளில் எடுத்து வேறொரு தட்டில் வைத்துவிட வேண்டும். அது அடுத்தநாள்
திருமணப் பூஜையில் வைக்கப்படும் என்று நினைக்கிறேன்.
மேலோட்டமாகப் பார்த்தால்
இந்த சடங்கு சாதாரனமாகத்தானே தெரிகிறது? ஆனால் அப்படி இல்லை. அந்த பாக்கானது அனைவருக்கும்
வரவேண்டும். கொஞ்சமாக கொடுத்தால் பெண்ணை கருமி என்று நினைத்துக்கொள்வார்கள். அதிகமாக
கொடுத்தால் கடைசியில் வருபவருக்கு இல்லாமல் போய்விடும். அப்படி இல்லாமல் போனால் என்ன
நடக்கும் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். எப்படி இருந்தாலும் மணமகள் சற்றே கவனமாக
இருக்கவேண்டிய இடம்தான் அது.
அப்படி என்றால்
மணமகன் என்ன செய்யவேண்டும்? இருப்பதிலேயே எந்த மின்விசிரி வேகமாக சுற்றுகிறதோ அதன்
அடியில் ஒரு நாற்காலியைப் போட்டு அமரவேண்டும். அர்ச்சனாவுக்கு அந்த சடங்கு நடந்து கொண்டிருந்தது.
நான் அங்கு அப்படித்தான் அமைதியாக அமர்ந்துகொண்டிருந்தேன்.
சடங்கு நடந்து
கொண்டிருக்கும்போதே அத்தைக்கு ஒரு அவசர தகவல் வந்தது. மாமாவின் அம்மாவிற்கு வாந்தி
வந்துவிட்டதாம். மயக்கமும் கூடவே வந்துவிட்டதாம். இப்போது அத்தை உடனே கீழே இறங்கி வரவேண்டுமாம்.
செய்தி எனது செவிகளை எட்டி இருந்தது. அந்த பாட்டி வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு திருமணத்திற்கு
வந்தபோதே எனக்குத் தெரியும் ஏதாவது நடக்கும் என்று. ’இன்னைக்கு நைட்டு நமக்கு நெரைய
எண்டர்டைன்மெண்ட் இருக்கு’ என்று நினைத்தபடியே அங்கு அமர்ந்துகொண்டிருந்தேன்.
படித்ததில் பிடித்தது..
ReplyDeleteவிதை மரமாக வேண்டுமென்றால் மண் ஒத்துழைக்கவேண்டும். விருப்பங்கள் காதலாகவேண்டுமென்றால் மனங்கள் ஒத்துழைக்கவேண்டும்
படைப்பு மிக அருமை பார்வையற்றோரின் வாழ்வை படம் பிடித்துக் காட்டுவதாக இருக்கிறது வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமை அருமை படிக்கப்படிக்க ஆர்வத்தைத் தூண்டுகிற வார்த்தை பயன்பாடுகள் உங்கள் எழுத்தில் தெரிகிறது
ReplyDeleteபாக்கு சடங்கு சூப்பராிருக்கே.
ReplyDelete