ஒருவழியாக
மேலே பாக்குவாரும் சடங்கு முடிந்திருந்தது.
நானும் கீழே இறங்க கிளம்பிவிட்டிருந்தேன். அதே
சமையம் அந்தப் பாட்டியின் நிலைமை என்னவென்ற தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. கீழெ சென்று பார்த்தால் பாட்டியை மாத்திரை கொடுத்து நித்திரையில் ஆழ்த்தி இருந்தார்கள்.
அர்ச்சனாவின்
கட்டிலில் ஹாயாக உறங்கிக் கொண்டிருந்தாராம் அவர். அப்படினா இன்னைக்கு அண்ணனின் திருமணத்தில் நடந்தது
போன்ற எண்டர்டைன்மெண்ட் கிடையாதா? என்று நினைத்தவாறே எனது அறைக்கு
சென்றேன். அது ஒருவகையில் எனக்கு ஆருதலாகவும் இருந்தது.
இல்லையென்றால் அந்த பாட்டி அந்த இடத்தையே ஒரு வழி செய்து இருப்பார். ஏனென்றால் அண்ணனின் திருமணத்தில் நடந்தது அப்படி.
அண்ணனுக்கு
திருப்பதியில் திருமணம் வைத்திருந்தோம்.
திருமணம் முடிந்தவுடன் மணமகளும் மணமகனும் தங்களது பெற்றோருடன் சேர்ந்து
சுவாமி தரிசனம் செய்துவிட்டு வரவேண்டும். ஆனால் திருமணம் முடிந்தவுடனே
அந்த பாட்டிக்கு நெஞ்சுவலி வந்துவிட்டது. அவ்வளவுதாண்.
அத்தையும் மாமாவும் அத்தனையையும் விட்டுவிட்டு மாமாவின் அம்மாவை தூக்கிக்கொண்டு
மருத்துவமனை சென்றனர். மருத்துவர்கள் நன்கு பரிசோதித்துவிட்டு
’நத்திங் டு வரி. ஷீ இஸ் கம்ப்லீட்லி நார்மல்.’
என்று சான்றுதல் கொடுத்துவிட்டனர்.
அது பாட்டி
நடத்திய ஒரு பக்காவான நாடகம் என்று பின்னாளில் நன்கு விவரம் அறிந்தவர்கள் கூற கேள்விப்பட்டேன். அதற்கெல்லாம் ஒரே காரணம்தாண்.
அண்ணனுக்கு அண்ணியை கொடுப்பதில் அந்த பாட்டிக்கு விருப்பமில்லை.
அவனது திருமணத்தின்போது
நடந்ததை ஒப்பிடும்போது என்னுடையதெல்லாம் ஒன்றுமே இல்லை.
அதனால்தான் அந்த பாட்டி எனது திருமணத்திற்கு வரும்போது சிலருக்கு உள்ளூர
ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது.
எப்படியோ
எனது அத்தையின் முதல் இரண்டு மகள்களுக்கும் பாரபட்சம் பார்க்காமல் அவர்களது பாட்டி
வெற்றிகரமாக மயங்கி விழுந்திருக்கிறார்.
இனி அத்தையின் மூன்றாவது மகளின் திருமணத்தின்போதும் ஒருமுறை மயங்கி விழுந்தால்
கணக்கு சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்.
எது எப்படியோ
அன்று அர்ச்சனாவின் அவளது பாட்டி அவளது கட்டிலில் அமைதியாக தூங்கிக்கொண்டிருந்தது ஒருவகையான
ஆருதலை அளித்திருந்தாலும் ஏனோ எனக்கு அன்று உறக்கம் வரவில்லை. படுத்தவுடனே உறங்குவதெல்லாம் ஒரு கொடை.
அது நிறைய பேருக்கு வாய்க்காது. எனக்கும் அப்படித்தாண். திருமணத்திற்கு முந்தைய இரவிலும்
அதே நிலைதான்.
கண்கள்
விழித்துக்கொண்டே இருந்தன.
காதுகள் அங்கிருந்த அனைத்தையும் கவனித்துக்கொண்டே இருந்தன. சிலர் உறங்க சென்று கொண்டிருந்தனர். சிலர் அங்கும் இங்கும்
அலைந்து கொண்டே இருந்தனர். எனக்காக ஒதுக்கப்பட்ட அந்த அறையில்
முதலில் நான், சந்தோஷ் மற்றும் ராதா ஆகிய மூவர்தான் உறங்கிக்கொண்டிருந்தோம்.
கொஞ்சநேரம் கழித்து கஸ்தூரி மாமியும் விமலாவும் வந்து சேர்ந்து கொண்டனர்.
வெளியில் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததால் கதவுகளை தாழிடாமல் சாத்திக்கொண்டோம்.
நிமிடங்கள்
நகர்ந்து கொண்டிருந்தன. நினைவுகள் சுழன்று கொண்டிருந்தன. எனது அண்ணனின் திருமணத்திற்கு
முந்தையநாள் இரவு நானும் அவனும் ஒன்றாக படுத்துக்கொண்டிருந்தோம். ஆனால் எனது திருமணத்திற்கு முந்தையநாள் இரவில் நான் மட்டும் தனியே கட்டிலில்
படுத்துக்கொண்டிருந்தது வாழ்க்கையின் எதார்த்தத்தை உணர்த்திக்கொண்டிருந்தது.
அவன் அண்ணியுடனும் தீக்க்ஷன்யாவுடனும் மேலே இருந்தான். அவள் அப்போது ஐந்தறை மாதக் குழந்தை. அவள் உறங்கினால்தான்
இவர்கள் உறங்குவதைப் பற்றி நினைக்க கூட முடியும்.
உண்மையிலேயே
தூக்கம் என்பதெல்லாம் திருமணம் ஆகும் வரைக்கும்தான். அதன் பிறகு அந்தத் தூக்கமே பெரும்பாலானோருக்குக்
கனவாகிப் போய்விடுகிறது. எதிர்மறையாக சொல்லவில்லை. ஒரு திருமணம் எத்தனை எத்தனை பொருப்புகளை போரபோக்கில் தோளில் வைத்துவிடுகிறது?
அதை நினைத்துப்பார்த்துக்கொண்டிருந்த அந்தக் கணம் அச்சம்தான் மேலெழுந்து
பின் அடங்கியது.
அது அன்று
இரவு திடீரென்று வந்த அச்சம் அல்ல.
எனக்கு அர்ச்சனாவை நிச்சையம் செய்த அன்றிலிருந்தே இருந்த அச்சம்.
சொல்லப்போனால் திருமணம் என்ற சொல்லைப் பற்றி எப்போதெல்லாம் நினைத்தேனோ
அப்போதெல்லாம் எனக்கு உள்ளத்தில் உதித்த அச்சம். நிச்சையத்திற்கு
பிறகு அதற்கு மனரீதியாக தயாராக வேண்டியது கொஞ்சம் சவாலாக இருந்தது.
ஒரு பார்வைத்
திறன் குறையுடையவனாகிய நான் ஒரு பெண்ணுடன் அதுவும் என்னைப்பற்றி உளவியல் ரீதியாக அந்த
அளவிற்கு அதுவரை புரிதல் இல்லாத பெண்ணுடன் வாழ்க்கை முழுதும் பயணம் செய்வதென்பது எவ்வளவு
பெரிய சவால்? இதற்குமுன்புவரை எங்கள் வீட்டிற்கு அத்தைப்பெண்ணாக ஆடிமாதம் கூழ் ஊற்றுவதற்கும்
அக்டோபர் மாத தீபாவலிக்கும் வந்தது என்பது வேறு, ஆயுள் முழுக்க
மனைவியாய் உடன் வருவதென்பது வேறு. முதலில் திருமணம் செய்யவேண்டும்,
பிறகு அவளைப் பற்றி நான் புரிந்து கொள்ளவேண்டும், அவளுக்கு என்னைப் பற்றி புரியவைக்கவேண்டும், குறிப்பாக
பார்வைத்திறன் குறையுடையவனாகிய என்னைப் பற்றி புரியவைக்கவேண்டும், இன்னல்கள் நிறைந்த எனது அந்த வாழ்க்கையில் அவளை இன்னல்களில்லாமல் இணைத்துக்கொள்ளவேண்டும்,
கொஞ்சம் கொஞ்சமாக அதில் அவளைப் பழக்கப்படுத்தவேண்டும், அந்த வாழ்க்கைமுறை அவளை சோர்வடையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும், என்மீதான நம்பிக்கையை உறுதி செய்யவேண்டும், எல்லாவற்றிற்கும்
மேலாக அந்த நம்பிக்கையை காலம் முழுக்க தக்கவைத்துக்கொள்ளவேண்டும். இவையெல்லாம் அடுத்தநாள் விடிந்தவுடன் தாலியை கட்டியபின் தொடங்கவேண்டிய வேலைகள்.
ஆனால் என்று முடியும் என்று தெரியாது.
இரவு பண்ணிரண்டாக
இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன.
நெருங்கிய நண்பண் விவேக பிரியனின் நினைவு வந்தது. அவனுக்கு நவம்பர் ஒன்றாம் தேதி பிறந்தநாள். கொஞ்சநேரம்
விழித்திருந்து வாழ்த்திவிட்டு உறங்கிவிடலாம் என்று நினைத்திருந்தேன். நேரம் பண்ணிரண்டாகி இருந்தது. அழைத்தேன். எடுத்தாண். வாழ்த்தினேன். அவனும்
திரும்ப வாழ்த்தினான். அலைபேசியை வைத்துவிட்டு அப்படியே கட்டிலில்
கிடந்தேன்.
ஆனால்
எனது உறக்கம் மட்டும் எங்கே கிடந்ததோ தெரியாது. அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் கோவிலுக்கு சென்றால்தாண்
பாத பூஜை செய்யமுடியும் என்று புரோகிதர் சொன்னதாக அப்பா சற்றுமுன் சொல்லியிருந்தது
நினைவுக்கு வந்தது. தவிர மூன்றறை மணிக்கு என்னை எழுப்பி விடுவதாகவும்
சொல்லி சென்றிருந்தார். நான் மூன்று மணிக்கெல்லாம் அலாரம் வைத்திருந்தேன்.
முழுதாக மூன்று மணிநேரம் கூட இருந்திருக்கவில்லை. கொஞ்சமாவது தூங்கிக்கொள்ளலாம் என்று தோன்றியது. ஆனாலும்
கண்களை மூட மனம் வரவில்லை.
வரண்டாவில்
ஏதோ கொலுசொலி கேட்டது. கூடவே இருவரின் பேச்சு சத்தமும் கேட்டது. அது யாரென்று
கண்டறிய எனக்கு நேரம் பிடிக்கவில்லை. என் தாயும் அந்தப் பெயர்
சொல்லவிரும்பாத பெண்ணும்தாண் அந்த நள்ளிரவில் ஒன்றாக சுற்றிக்கொண்டிருந்தனர்.
அப்படியே மணமகளின் அறைக்குள் சென்று பார்த்திருக்கின்றனர். சில நிமிடங்களிலேயே வெளியில் சத்தமும் சலசலப்பும் உருவானது. கொஞ்ச நேரத்திலேயே அப்பா, பாலாஜி அண்ணா மற்றும் சிலர்
வந்துவிட்டிருந்தனர். ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது.
பாட்டிதான் ஏதோ பர்ஃபார்மன்ஸ் செய்திருக்கிறார் என்ற எண்ணத்தை ஒருநொடி
கூட நீடிக்கவிடவில்லை இவர்கள்.
பிரச்சனை
அர்ச்சனாவுக்கு. அவள் காலில் அணிந்திருந்த மெட்டி இருகி விரல் வீங்க ஆரம்பித்திருக்கின்றது.
எனது அம்மா தற்செயலாக அவளின் அறையின் உள்ளே செல்ல இவளின் முகத்தை பார்த்து
என்ன பிரச்சினை என்று கேட்க இவள் விஷையத்தை சொல்லியிருக்கிறாள். மெட்டியை அணியும்போது சாதாரனமாகத்தான் இருந்திருக்கிறது. அளவும் சரியாக இருக்கவே இவர்களும் வாங்கி அணியவைத்திருக்கின்றார்கள்.
ஆனால் போகப் போக விரலில் ரத்த ஓட்டம் தடைபட்டு விரல் வீங்க ஆரம்பித்திருக்கின்றது.
கொஞ்சம் கொஞ்சமாய் வலியும் அந்த நள்ளிரவில் உதயமாகி இருக்கிறது.
இதை இப்படியே
விட்டால் அடுத்தநாள் நடப்பதே சிறமம் என்ற முடிவுக்கு ஏக காலத்தில் வெளியில் இருந்த
அனைவரும் வந்திருந்தனர். அதை உள்ளே படுத்துக்கொண்டிருந்த எனது மாமி கஸ்தூரியும் பிரதிபலித்தார்.
சிலநாட்களுக்கு
முன்பு எங்களது உரவு காரப்பெண் ஒருவருக்கு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அந்தப் பெண்ணுக்கு அளவு
சரியாகவே மெட்டி வாங்கி இருக்கிறார்கள். அந்தப் பெண்ணும் அணிந்து
அடுத்தநாள் காலை எழும்போது வலி உயிர்போய்விட்டதாம். காலை கீழே
வைக்க இயலாத அளவுக்கு விரல் வீங்கி இருந்ததாம். தவிர அந்த மெட்டியின்
கூர்மையான பகுதி விரலுக்குள்ளேயே போய்விட்டிருந்ததாம். அந்த மெட்டியை
விரலைவிட்டு எடுப்பதற்குள் வலியில் கதரி துடித்திவிட்டிருந்தாளாம் அந்த மணப் பெண்.
இந்த கதையை உள்ளிருக்கும் கஸ்தூரி மாமி சொல்லிக்கொண்டிருக்கும்போதே அர்ச்சனாவுக்கு
என்ன செய்யலாம் என்ற கலந்துரையாடல் எனது அறைக்கு வெளியே நடந்து கொண்டிருந்தது.
முதலில்
வெரும் கையாலேயே எடுத்துவிடலாம் என்று எண்ணி விரலைத் தொட்டபோதே துடித்தாள். முதலில் அர்ச்சனாதான் சோப்புப் போட்டு
முயன்றிருக்கிறாள். வரவில்லை. பிறகு அப்பா எண்ணெய் தெய்த்து மெட்டியை மெதுவாக எடுக்க்
முயன்றிருக்கிறார். வரவில்லை. பிறகு எண்ணெய் போட்டு இன்னொருமுறை
எடுக்க முயன்றபோதும் முடியவில்லை. பிறகு பாலாஜி
அண்ணாதான் பக்குவமாக முயன்றுகொண்டிருந்தார். தொட்டாலே துடிக்கிறாளே
இவள் என்று அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். விரல்களில் ஏற்படும்
வலி அப்படிப்பட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தனர்.
கட்டிங் ப்லெய்டு இருந்தால் கட் செய்துவிடலாம் என்ற யோசனையை முன் வைத்தனர்.
ஆனால் மண்டபக்காரர்களிடம் அது இல்லை. மற்றவர்களிடம்
கேட்பதில் பயனில்லை என்று உணர்ந்திருந்ததால் முயற்சியை கைவிட்டனர். கல்யானத்திற்கு வருபவர்களிடம் கட்டிங்கை வேண்டுமென்றால் எதிர்பார்க்கலாம்.
கட்டிங் பிலெய்டு வாய்ப்பில்லை.
மீண்டும் ஒருமுறை
மெதுவாக எண்ணெய் தெய்த்து எடுத்துவிடலாம் என்று பாலாஜி அண்ணா முயன்றால் வேலைக்காகவில்லை.
இதையெல்லாம் அறையிலிருந்தபடியே கேட்டுக்கொண்டிருந்த எனக்கு இருப்பு கொள்ளவில்லை. வெளியே
செல்லலாம் என்று நினைத்தால் கதவின் அருகிலேயே மனிதர்கள் படுத்துக்கொண்டிருந்தார்கள்.
தெரியாமல் சென்று மிதித்துவிட்டால் அர்ச்சனாவுக்கு பதில் வேறு யாராவது ‘ஐயோ!’ என்று
கத்தக்கூடும். அதையும் மீறி முயன்றால் தேவையில்லாமல்
யாராவது ஏதாவது சொல்லக்கூடும். ஆகையால் அமைதியாக படுத்துக்கொண்டே நடப்பவற்றை கவனித்துக்கொண்டிருந்தேன்.
என் மனதில் ஒரு
எண்ணம் உதித்தது. அதை வெளியிலிருந்து அப்பா செயல்படுத்திக்கொண்டிருந்தார்.
’ஏ ப்பா பாலாஜி.
எதப்பத்தியும் யோசிக்காத. எண்ணெய தேய்ச்சிட்டு இழுத்துரு. ரெண்டு நிமிஷம் வலிக்கும்.
வலிச்சா வலிக்கட்டும். இல்லனா நாளைக்கு எதுவுமே செய்யமுடியாம போயிடும்.’ என்று சொல்லி
முடித்தார். அதைத்தான் நானும் யோசித்துக்கொண்டிருந்தேன். முதலில் சற்றே தயங்கிய பாலாஜி
அண்ணா களத்தில் இறங்கினார். நானும் மனதளவில் ஆயர்த்தமாகிக்கொண்டேன். எனது மனம் இமைக்கும்
நொடியில் அவளது விரலில் சென்று விழுந்திருந்தது. அண்ணா மெட்டியை பிடித்து இழுக்கப்போகிறார்.
அவள் அலரித்துடிக்கப்போகிறாள். இன்னும் சில நொடிகளில் அதுதான் அங்கு நடக்கப்போகிறது
என்று புரிந்தது. இதோ அவர் கையை வைத்துவிட்டார். அவள் அலர ஆரம்பித்துவிட்டாள். விடுவதாக
இல்லை. இனி இழுக்கவேண்டியதுதான் பாக்கி. இன்னும் சில நொடிகள்தான். வெகு சில நொடிகள்தான்.
விரலில் உருவாகி இருந்த வலி அவள் பாதம் கடந்து, கனுக்கால் கடந்து, அடிவயிற்றை ஆக்கிரமித்து
பின் அறை நொடியில் அதைக் கடந்து, முதுகுத்தண்டின் மூலமாக அவளது பின்னந்தலையில் பதுங்கி
இருக்கும் ஏதோ ஒரு நறம்பில் படார் என்று பாய்ந்திருக்கவேண்டும். பாலாஜி அண்ணா மெட்டியை
பிடித்து இழுத்த அந்த கணத்தில் ‘அம்மா’ என்ற ஒரு அலறல். அதைக்கேட்டு அந்த இரவு நேரத்து
ஆந்தைகள் மட்டுமல்ல. காலையில் நிதானமாக கரைந்து கொள்ளலாம் என்று கூடுகளுக்குள் கண்
அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த காக்கைகள் கூட சற்று கலங்கித்தான் போயிருக்கும்.
அவள் அப்படி அழுது
நான் அதுவரை பார்த்ததில்லை. என்னை மாதிரி ஒருவனை திருமணம் செய்து கொள்ளுபவள் காலம்
முழுதும் சிந்த வேண்டிய கண்ணீருக்கு ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்று நினைத்தேன்.
ஆனால் சில நிமிடங்கள்தான். எல்லாம் சகஜ நிலைக்கு வந்திருந்தது.
அனைவரும் அவரவர்
இடங்களுக்கு சென்றிருந்தனர். என்னையும் அறியாமல் எனது கண்கள் மூடி பின் சரியாக மூன்று
மணிக்கெல்லாம் திறந்து கொண்டது. கொஞ்ச நேரத்தில் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக எழுந்துகொண்டனர்.
நானும் அம்மாவின் உதவியுடன் பல் துலக்க சென்று பின் அறைக்கு திரும்பினேன்.
திருமணத்திற்கு
முன்பு நடக்கும் மிக முக்கிய சடங்கு மணமக்கள் இருவருக்கும் எண்ணெய் நலங்கு வைப்பது.
வைத்தவுடன் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளை சலவைத் தொழில் செய்பவர்களுக்கு கொடுத்துவிடவேண்டும்.
நான் மேலே சென்றேன். அர்ச்சனாவும் மேலே வந்தாள். இருவரும் முதல்முறையாக ஒரே மனையில்
அமர்ந்தோம்.
அர்ச்சனாவின் உரவினர்களும்
எனது உரவினர்களும் ஒருவர் பின் ஒருவராக எண்ணெய் நலங்கு வைத்தனர். அவர்களை கையெடுத்து
கும்பிடும்போதும் அர்ச்சனா பக்கத்திலிருந்தபடியே என்னை தட்டிக் கொண்டிருந்தாள். நானும் அவள் சிக்னல் கொடுக்கும்போதெல்லாம்
கையெடுத்து கும்பிட்டேன். நலங்கு முடிந்தது. இப்போது மனையை சுற்றிவர வேண்டும். இருவரும்
எழுந்தோம். எனது சுட்டுவிரலால் அவளது சுட்டுவிரலை பிடித்துக்கொள்ளவேண்டும். பிடித்துக்கொண்டோம்.
நிதானமாக நடந்தோம். அந்தப் பெயர் சொல்லவிரும்பாத பெண்ணின் அண்ணந்தான் எனது கையைப் பிடித்துக்கொண்டு
முன்னே எங்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு நடந்தான். மனையைச் சுற்றிமுடித்ததும் கீழே
இறங்கி குளிக்க சென்றோம்.
குளியலறைக்குள்
அட்டைகள் நடமாட்டம் அதிகம் என்று முந்தையநாளே கேள்வி பட்டிருந்தேன். அந்த ஒரு குறையைத்
தவிர மண்டபத்தை மிகத் தூய்மையாக வைத்திருந்தார்கள். கதவின் ஓரத்தில் ஒரு அட்டைப் பூச்சி
இருப்பதாக பாலாஜி அண்ணா சொன்னார். அது மட்டும் கொஞ்சம் பயமாக இருந்தது. எப்படியோ குளித்து
முடித்து வெளியே வந்தேன்.
அறைக்குள் சென்றவுடன்
முகூர்த்த துணியை கொடுத்தார்கள். காலில் விழுந்து ஆசிர் பெற்று பின் துணியை பெற்றுக்கொள்ளவேண்டும்.
பாலு மாமாவிடமும் சத்தியா மாமி இடமும்தான் பெற்ற ஞாபகம். ஆனால் முழுதாக காலில் எல்லாம்
என்னை விழவிடவில்லை அவர்கள். தலையை மட்டும் சற்று தாழ்த்தி பிறகு முகூர்த்த துணியை
வாங்கிக்கொண்டேன். வாங்கிய உடனே என்னை வெளியே மணமகன் அறையைவிட்டு விரட்டிவிட்டார்கள்.
பாலாஜி அண்ணாதான்
எனது மேக்கப் மேன், மேனேஜர் எல்லாம். எனது திருமணம் முடியும்வரை என்னைவிட்டு எங்கும்
நகர கூடாதென்று ஏற்கனவே ராதா அவரிடம் உத்தரவிட்டிருந்தார். அதே உத்தரவுதான் அன்று காலையும்.
மனைவிகள் எல்லாம் மத்திய மாநில அரசுகள் போன்றவர்கள். அங்கு வார்த்தைகள் என்ற ஒன்று
இல்லை. வருபவை எல்லாம் உத்தரவுகள்தான். வெளியே வந்து நின்று கொண்டிருந்த என்னை பாலாஜி
அண்ணா மணக்கோலத்திற்கு மாற்றிக்கொண்டிருந்தார்.
எனது நிலைமை இப்படி
இருக்க அர்ச்சனாவின் நிலை வேறு மாதிரி இருந்தது. மணமகனை மணமகன் வீட்டார் தயார்செய்வது
போல, மணப்பெண்ணை பெண் வீட்டார் ஆயர்த்தம் செய்து அழைத்துவரவேண்டும். ஆனால் அங்குதான்
திடீரென்று ஒரு சிக்கல் எழுந்தது.
திருமணம் முடிந்து
கடைசிவரை உடனிருக்கவேண்டிய எனது மாமாவின் தங்கைகளான அர்ச்சனாவின் அத்தைகள் மூவரும்
எங்களுக்கு எண்ணெய் நலங்கு வைத்த கையோடு யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் மண்டபத்தைவிட்டு
எஸ்கேப்!
அவர்கள்தான் மணப்பெண்ணை
அலங்கரித்து தயார் செய்திருக்கவேண்டும். திருமணத்திற்கே வராமல் இருந்திருந்தாலாவது
ஏதாவது முன் ஏற்பாடு செய்திருக்கலாம். அந்த அவசரகதியில் என்ன செய்வது? மணப்பெண்ணை யார்
தயார் செய்வது? என்ற கேள்வி எழுந்தது. உடனே அத்தையோடு என் பக்கத்து உரவினர்களும் கைகோர்த்து
வேலையை முடித்தனர். பாதபூஜை செய்ய புரோகிதர் குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து இருந்தோம்.
நேரம் ஐந்தறையை தொட்டிருந்தது. அதே சமையம் அர்ச்சனாவின் உரவினர்கள் ஏன் சொல்லாமல் கொள்ளாமல்
அவசர அவசரமாக அங்கிருந்துக் கிலம்பினர் என்ற காரணம் அங்கிருந்த யாருக்கும் விளங்கவில்லை.
என்னைத் தவிர.
அண்ணா வணக்கம் நான் தொடர்ந்து படித்துக் கொண்டு வருகின்றேன் மிகவும் நன்றாக இருக்கின்றது உங்களுடைய நிஜ கதை இதனை நீங்கள் வருங்காலத்தில் புத்தகமாக கூட வெளியிடலாம் அந்தளவுக்கு சுவைமிக்க வார்த்தைகளை பயன்படுத்தி நன்றாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் தொடருங்கள் உங்கள் எழுத்து பணியை நன்றி
ReplyDeleteமிகவும் நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. புத்தகம் வெளியிடும் அளவிற்கு இருக்குமா என்று தெரியாது. ஆனால் இந்தப் பதிவு முழுவதும் முடியும்போது அதற்கான தகுதி உருவானால் முயன்று பார்க்கலாம். மிக்க நன்றி. தொடர்ந்து படியுங்கள்.
Deleteஐய்யோ எத்தனை எத்தனை சம்பவங்கள் உன்னோட திருமணத்தில் நடந்திருக்கிரது.
ReplyDelete- தொடர்கிரேன்.
மிக்க நன்றி மகேஷ். நம்மை போன்ற பார்வைத் திறன் குறையுடைவர்களின் திருமணங்கள் பெரும்பாலும் பல பல சம்பவங்களால் நிறைந்ததாகத்தான் இருக்கிறது என்று தோன்றுகிறது. தொடர்ந்து படி.
Deleteகண்டிப்பா நீங்க இதை ஒரு புத்தகமா வெளியிடனும் வினோத். பார்வையுள்ளவர்களுக்கு பார்வையற்றவர்கள்மேல் ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்தும்.
ReplyDelete