27 April 2018

ஒரு பயணம் -2.

Posted by Vinoth Subramanian | Friday, April 27, 2018 Categories: , , ,


ஒரு ஐந்து நிமிடம் கழிந்திருக்கும். பாட்டியிடமிருந்து பதில் வந்தது. அந்த முதியவரும் சகஜமாக பேச ஆரம்பித்தார். ஒன்று அந்த பாட்டி பாக்கை அவசர அவசரமாக விழுங்கி இருக்க வேண்டும். இல்லையேல் தற்செயலாக சென்று தொண்டையிலும் மார்பிலும் சிக்கியிருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

25 April 2018

ஒரு பயணம்.-1.

Posted by Vinoth Subramanian | Wednesday, April 25, 2018 Categories: , , ,


ஒரு பயணம் பாதையை மட்டுமல்ல, சில நேரங்களில் வாழ்க்கையையும் நமக்கு காட்டுகிறது. 

அதில் இருக்கும் சின்னச் சின்னத் திருப்பங்களும் ஸ்வாரசியமாக அமையும்போது பிறரிடத்தில் பகிர்ந்துக் கொள்ளத் தோன்றுகிறது. இந்தப் பதிவும் அப்படிப்பட்டதுதான்.

கடந்த ஏப்ரல் எட்டாம் தேதி கார் திரளணியில் கலந்துக்கொள்ள ஒரு பார்வையற்றோர் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. ஆங்கிலத்தில் car rally என்று சொல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு திருவிழா போன்று நடக்கும் ஒரு பந்தையம்தான் இந்த கார் திரளணி/பேரணி. இதைப்பற்றி ஆங்கிலத்தில் எழுதி இருந்தாலும் தமிழில் எழுத ஏற்பட்ட ஒரு சிரு ஆசையின் காரனமாக எழுதுகிறேன். பங்குபெரும் ஒவ்வொரு பார்வைத்திறன் குறையுடையவரும் அகமகிழ்ந்து அனுபவிக்கும் ஒரு திருவிழாதான் இது. அதில் நானும் ஒருவன். பரிசுகள் கிடைக்கிறதோ இல்லையோ, ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு அனுபவத்தை வீட்டிற்கு கொண்டுவர முடியும். அதற்காகவே இந்த கார் ராலியை எந்தக்காரனத்திற்காகவும் தவறவிடுவதில்லை.

கடந்த எட்டாம் தேதி நான் தனியாகத்தான் சென்றேன். பொதுவாக நண்பர்களுடன் செல்வேன். இதற்கு முன்பு ஒருமுறைமட்டும் தனியாக சென்ற அனுபவம். அப்போதுகூட தெரிந்த சிலரை பார்க்க முடிந்தது. ஆனால் இது முற்றிலும் வேறு மாதிரியான அனுபவம். சென்னை கிண்டியில் உள்ள ஒலிம்பியா டெக் பார்க் என்னும் இடத்தில்தான் கார் ராலி நடப்பதாக அறிவிக்கப்பட்டது. காலை எட்டு மணியிலிருந்து எட்டறை மணிக்குள் அங்கிருக்கவேண்டும் என்று சொன்னார்கள். தாமதமானால் கார் கிடைக்காது. அதனாலேயே காலை நான்கு மணிக்கு எழுந்து ஐந்தறை மணிக்கெல்லாம் வீட்டை விட்டு கிளம்பினேன். எங்கள் ஊரிலிருந்து சென்னை கடற்கரைக்கு அந்த நேரத்திற்கு ரயில் கிடையாது என்பதால் ஆவடிவரை அப்பா வந்து வண்டி ஏற்றினார். எங்கள் ஊரிலிருந்து ரயிலில் கிண்டி செல்ல இரண்டு மார்கம் உண்டு. ஒன்று சென்னை சென்ரலில் இறங்கி அங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்து சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து செல்ல வேண்டும். இன்னொன்று சென்னை கடற்கரை ரயில் நிலையம் சென்று அங்கிருந்து இன்னொரு ரயில் பிடித்து செல்ல வேண்டும். எனக்கு எப்போதுமே இரண்டாம் மார்கம்தான். சென்னை செண்ட்ரலில் இருந்து சாலையை கடந்து செல்லவெல்லாம் எனக்கு இன்னொருவர் தேவை. அதனால் தனியாக செல்வதென்றால் கடற்கரை ரயில் நிலையம்தான்.

அப்பா ஆவடியில் என்னை சென்னை கடற்கரை செல்லும் ரயிலில் ஏற்றிவிட்டு கிளம்பினார். காலை ஆறு பத்து மணிக்கு ரயில் புரப்பட்டது. எப்படியும் எட்டு மணிக்கு சென்றுவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரயிலில் சொல்லிக்கொள்ளும்படி கூட்டமில்லை. திடீரென்று ஒரு தாத்தாவும் பாட்டியும் ஏறினார்கள். வேறேதோ பாஷையில் பேசிக்கொண்டார்கள். நான் அமைதியாக அமர்ந்துகொண்டு எதையோ யோசித்துக்கொண்டே வந்தேன். வண்ணாரைப்பேட்டை அருகே வண்டியை நிருத்தினார்கள். அவ்வளவுதான் பதினைந்து நிமிடங்களுக்கு வண்டி நகரவில்லை. பிறகு எடுத்தான். எதிரிலிருந்த அந்த பாட்டி இரும ஆரம்பித்தார். வழக்கமான இருமல்தான் என நினைத்துக்கொண்டு அமைதியாக வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தேன். இருமல் கடுமையானது. கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தேன். இன்னும் மோசமானது. பாட்டியால் பேச இயலவில்லை. எதுவோ தொண்டைக்குள் சிக்கியதுபோல் இருமினார். கிட்டத்தட்ட இரண்டு நிமிடம். ஆனாலும் நிற்கவில்லை. இப்போது மூச்சும் விடமுடியாததுபோல சிரம பட்டார். தாத்தா மட்டும் ஏதோ அந்த பாஷையில் கத்திக்கொண்டிருந்தார். பாட்டியிடமிருந்து எந்த பதிலும் இல்லை. சொல்லப்போனால் இழுத்துக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்திற்குமேல் இருமவும் முடியவில்லை.
”தண்ணி குடிங்க! தண்ணி குடுங்க!” என்று ஒரு குரல் எனக்கு பின்னால் இருந்து கேட்டது. அது ஒரு பென்ணின் குரல். அதுவரை இருந்த நிசப்தம் ஓடும் ரயிலில் இருந்து இரங்கியது போலிருந்தது.
நான் எனது பையைத்திரந்து தண்ணீரை எடுத்தேன்.
”இந்தாங்க.” என்று நீட்டினேன்.
வாங்கவில்லை. ஒருவேளை அவர்களிடமே இருக்கிறதோ என்னமோ என்று நினைத்துக்கொண்டு தண்ணீர் பாட்டிலை மடிமீது வைத்துக்கொண்டேன். ஒரு சில நொடிகள் மட்டும் அமைதியாக இருந்த அந்த பாட்டி மீண்டும் இடைவிடாது இருமி பின்பு ஏதோ வித்தியாசமான சத்தத்தை ஏற்படுத்தி பயத்தை ஏற்படுத்தினார். இந்தமுறை தாத்தாவிற்கும் என்ன செய்வது என்று புரியவில்லையா? அல்லது ஏதாவது செய்துகொண்டிருந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்பதை மட்டும் பாட்டியின் நிலை தெரிவித்தது.
”மார பிடிச்சு உருவுங்க! சீக்கிரமா!” என்று அதே பெண்ணின் குரல் எனக்கு பின்னால் இருந்து வர. கம்பாட்மெண்ட் கொஞ்சம் கலங்கித்தான் போனது.
சில நொடிகள்தான் தாமதம். அந்த பெண்ணே விரைந்து வந்து பாட்டியின் மார்பையும் முதுகையும் நீவிக்கொண்டிருந்தார். இப்போது பாட்டியால் மூச்சுவிட முடிந்தது. ஆனால் இருமல் மட்டும் நிற்கவில்லை.
வண்டி ராயபுரத்தை தாண்டியது. நன்றாக பேசிக்கொண்டு வந்த பாட்டிக்கு என்ன ஆனது என்று என்னைப்போல் எல்லோருக்கும் குழப்பம்தான். ஒருவழியாக விஷையத்தைக் கண்டு பிடித்த அந்த முதலுதவி செய்த பெண்,
”பாக்கு சாப்டாங்களா? அதுதான் சிக்கிடுச்சா?” என்று கத்தினார்.
”எதுக்குதான் இதெல்லாம் பண்ணுராங்களோ? தேவையா? இல்ல தேவையானு கேக்குரேன். பாக்கு போடுரது, தண்ணி அடிக்குரது, சிகுரட் பிடிக்குரது அப்புரம் இப்பிடி கஷ்ட படுரது. இதெல்லாம் தேவையா?” என்று பின்னால் இருந்து கத்திக்கொண்டிருந்தார்.
இந்த முறை பாட்டி ஒரு பத்து வினாடிகள் இருமிவிட்டு பிறகு ”உ” என்று இழுக்க, தாத்தாவின் எந்த கேள்விக்கும் பதில் வரவில்லை.
மீண்டும் ஒரு இனம் புரியாத நிசப்தம் வண்டிக்குள் ஊடுருவியதை உணர முடிந்தது.
தொடரும்.
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube