15 May 2018

ஒரு பயணம் -5.

Posted by Vinoth Subramanian | Tuesday, May 15, 2018 Categories: , , ,


குட் மார்னிங் எவெரி படி!!! (Good morning everybody)“ திரு அரோராவின் குரல்தான் அது. முழுப்பெயரை மரந்துவிட்டேன். கார் திரளணியின் விதிமுறைகளையும் வழிமுறைகளையும் விளக்க மேடையில் வந்து நின்றார்.
Click her to read the previous post
மிதமாக குளிரூட்டப்பட்ட அரங்கில் திடமாக ஒலித்தது அவரது குரல். ஒவ்வொரு படிக்கட்டிலும் வரிசையாக போடப்பட்டிருந்த குஷன் நாற்காளிகள், அதை ஒரு திரை அரங்கு போலவே என்னை உணரவைத்தது. திரு அரோரா எப்போதும் ஆங்கிலத்தில்தான் பேசுவார். தமிழ் தெரியாது. நான் சுமார் நான்கு வருடங்களாக இந்த கார் திரளணிக்கு சென்று கொண்டிருக்கிறேன். எப்போதும் அதே விதிமுறைகள், அதே வழிமுறைகள் என்றாலும், அதே அரோரா, அவரின் அதே துடிப்பு, அதே பொருமை, இதெல்லாம் என்னை இன்னொருமுறை அவரது சுருக்க உரையை கேட்க வைத்தது. சற்று நேரத்தில் அரங்கம் தன் அமைதியை வெளிப்படுத்த அவர் விதிமுறைகளை ஆங்கிலத்தில் விளக்கினார்.

கார் பேரணி என்பது ஒவ்வொரு ஆண்டும் பார்வையற்றோர்களை மையமாக கொண்டு மட்ராஸ் மோட்டர் ஸ்போர்ட்ஸ் கிலபால் (Madras motor sports club) நடத்தப்படுகிறது. முதலில் ஒன்று புரிந்து கொள்ளுங்கள். இது பந்தையம் அல்ல. திஸ் ராலி இஸ் நாட் யெ ரேஸ். (This rally is not a race) இது முற்றிலும் மாறுபட்ட, திறமையை வெளிப்படுத்தும் விளையாட்டு.” என்று சொல்லி தொடர்ந்தவர்,

ஒவ்வொரு காரிலும் ஒரு பார்வை திறன் குறையுடைய வழிகாட்டி (navigator) இருப்பார், இருக்கவேண்டும். சரியாக 40 கிலோமீட்டர் பயணத்தை அந்த பார்வையற்ற வழிகாட்டியின் மூளமாகத்தான் நீங்கள் முடிக்கவேண்டும். இந்த பயணம்  எங்கு தொடங்குகிறதோ அங்கேயே முடியும். அதாவது இங்குதான் முடியும்.

ஒவ்வொரு பார்வையற்ற வழிகாட்டியிடமும் ஒரு பிரெயிலில் அச்சிடப்பட்ட வழிவரைபடம்/விளக்கப்படம் (route map) வழங்கப்படும். அதில் பாதையைப் பற்றிய அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டிருக்கும்.
அந்த பிரெயில் வடிவிலான வரைபடத்தில் மொத்ததூரம், (Total distance) பகுதி தூரம், (Part distance) பிறகு அறிவுரை (Instruction) ஆகியவை இடம்பெரும். அதைத்தான் அந்த பார்வையற்ற வழிகாட்டி படித்து வழிநடத்துவார்.

மொத்ததூரம் என்பது பயணம் துவங்கும் இடத்திலிருந்து கணக்கிடப்படும் தூரம். பகுதிதூரம் என்பது பயணத்தின்போது நீங்கள் இருக்கும் இடத்திற்கும் அடுத்து நீங்கள் போகவேண்டிய இடத்திற்கும் இடையே இருக்கும் தூரம். அரிவுறை என்பது எவ்வாரு போகவேண்டும் என்ற குறிப்பு. எவ்வாரு போக வேண்டும் என்ற குறிப்பில் அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். அதாவது: எங்கு திரும்ப வேண்டும், எதுவரைக்கும் நேரே செல்லவேண்டும், எங்கு வேகத்தடைகள் இருக்கும், எத்தனை கிலோமீட்டரிலிருந்து எத்தனை கிலோமீட்டர் வரைக்கும் எவ்வளவு வேகத்தில் செல்லவேண்டும் என்று எந்த சந்தேகமும் எழாத வண்ணம் விளக்கப்படம் கொடுக்கப்பட்டிருக்கும். முக்கியமான விஷையம். இந்த விளக்கப்படம் பிரெயிலில் மட்டும்தான் கொடுக்கப்பட்டிருக்கும்.

நான் ஏற்கனவே சொன்னது போல இது கார் பந்தையம் அல்ல. கார் பேரணி. ஒவ்வொரு காரும் ஒரு நிமிட இடைவேளியில் இங்கிருந்து கிளம்பும். அந்த கார் அதற்காக நிர்னைக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து சேரவேண்டும். உதாரனத்திற்கு, நண்பகல் பன்னிரண்டு மணிக்கு ஒரு கார் கிளம்புகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த கார் சரியாக இரண்டு மணிக்கு இந்த இடத்தை அடைய வேண்டும் என்பது போட்டியின் விதி என்றால் இரண்டு மணிக்கு வந்திருக்கவேண்டும். அடுத்த கார் பன்னிரண்டு ஒன்றுக்கு கிளம்புகிறது என்றால், அது சரியாக இரண்டு ஒன்றுக்கு இந்த இடத்தை அடையவேண்டும் என்று நிர்னைக்கப்பட்டிருந்தால் அந்த நேரத்திற்கு இந்த இடத்தை அடைய வேண்டும். போட்டியில் கடைசியாக பதிவு செய்யப்பட்டிருக்கும் கார், ஒரு மணிக்கு கிளம்புகிறது என்றால், அந்த காருக்கு இங்கு வந்து சேரும் நேரம் மூன்று மணி என்று நிர்னைக்கப்பட்டிருந்தால் மூன்று மணிதான் இலக்கு. மீரும் கார்களுக்கு தண்டனைப்புள்ளிகள் (penalty points) அளிக்கப்படும். அந்த தண்டனைப்புள்ளிகள் அடிப்படையில் வெற்றியாலர்கள் தீர்மானிக்கப்படுவார்கள்.” என்று சொன்னவர், போட்டியின் முக்கியமான வழிமுறையை சொல்ல துவங்கினார்.

தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லப்போவது நீங்கள் முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய விதிமுறை. இது மார்ஷல்களை (marshals) பற்றியது. பயணத்தின்போது வழியில் பதாகையுடன் நின்று கொண்டிருப்பவரே மார்ஷல் என்று அழைக்கப்படுவர். பயணம் துவங்கும்போது உங்கள் கையில் ஒரு அட்டை (card) கொடுக்கப்படும். அதை நீங்கள் உங்களின்  பயணத்தின்போது வழியில் நின்றுகொண்டிருக்கும் மார்ஷல்களிடம் கான்பிக்கவேண்டும். அவர்கள் நீங்கள் அவர்களை சந்தித்த நேரத்தை குரித்துவிட்டு கையெழுத்திட்டு அனுப்புவார்கள். அதே சமையத்தில் அவர்கள் கான்பிக்கும் அட்டையில் வண்டியின் ஓட்டுனர் கையெழுத்து போட்டு கொடுக்கவேண்டும். மார்ஷல்கள் எப்போதும் உங்களுக்கு இடது புரத்தில்தான் ஒரு பதாகையுடன் இருப்பார்கள். ஒருவேளை அவர்கள் வலது புரத்தில் இருந்தால் நீங்கள் தவறாக போகிறீர்கள் என்று அர்த்தம். ஒவ்வொரு காரும் சரியான நேரத்திற்கு அந்தந்த மார்ஷல்களை அடைய வேண்டும். வழியில் எத்தனை மார்ஷல்கள் இருப்பார்கள் என்பது ரகசியம். நீங்கள்தான் கண்டுபிடிக்கவேண்டும். விளக்கப்படத்தில் குரிப்பிட்டுள்ள தூரம், நேரம் மற்றும் வேகம் ஆகியவற்றை சரியாக கடைபிடித்தால் நீங்கள் சரியான நேரத்திற்கு சரியான மார்ஷலை அடையலாம்.

இந்த கார் பேரணியே நேரம், வேகம் தூரம் ஆகியவற்றைக்கொண்டுதான் இயங்குகிறது. இந்த மூன்றும் சாலையின் தன்மை, நெரிசல் ஆகியவற்றை கணக்கிட்டுதான் நிர்னைக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் கடைபிடிக்கும் நேரம், தூரம் மற்றும் வேகம் ஆகியவற்றைவைத்துதான் தண்டனைப் புள்ளிகள் வழங்கப்படும். அந்த தண்டனைப்புள்ளிகளை வைத்துதான் வெற்றி தீர்மானிக்கப்படும். யார் குறைவான தண்டனைப்புள்ளிகளை பெருகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

நான் மருபடியும் சொல்கிறேன். இது வேகமாக செல்லும் பந்தையம் அல்ல. ஒரு மார்ஷலை நீங்கள் ஒரு நிமிடம் முன்னதாக அடைந்தால் அதிக தண்டனைப்புள்ளிகள் கொடுக்கப்படும். அதுவே தாமதமாக அடைந்தாள் குறைவான தண்டனைப்புள்ளிகள் வழங்கப்படும். மார்ஷலை கடந்துவிட்டு வண்டியை பின்னே எடுத்தால் தண்டனை புள்ளிகள் வழங்கப்படும். ஒருவேளை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னமே வந்துவிட்டதாக நீங்கள் நினைத்துக்கொண்டு வண்டியை மார்ஷலைப்பார்த்தவுடன் கொஞ்சதூரத்தில் நிறுத்தினால் அதற்கு அதிக தண்டனைப்புள்ளிகள் வழங்கப்படும். மார்ஷலை வலதுபுரத்தில் சந்தித்தால் தண்டனைப்புள்ளிகள் வழங்கப்படும். மார்ஷல்களை தவற விட்டால் தண்டனைப்புள்ளிகள் வழங்கப்படும். முன்னிருக்கையில் அமர்பவர்கள் கண்டிப்பாக சீட்பெல்ட் அணியவேண்டும். இல்லையென்றால் பத்து தண்டனைப்புள்ளிகள் வழங்கப்படும்.” என்று விவரித்தவர்,

ஒரு காரில் நான்கு பேர் இருத்தல் எப்போதும் நன்று. பார்வைத்திறன் குறையுடைய வழிகாட்டிக்கு துணையாக ஒருவரும், ஓட்டுனருக்கு துணையாக ஒருவரும் இருக்கவேண்டும் என்பது அறிவுரை. அதேபோல், வழிகாட்டியிடம் இருக்கும் பிரெயில் வடிவிலான வரைவழிபடத்தை அவர் படிக்க படிக்க அவருக்கு அருகில் இருக்கும் நபர் எழுதிக்கொண்டு அதை ஒரு பொது வழிவரைபடமாக மாற்றி ஓட்டுனருடன் அமர்ந்திருக்கும் நபரிடம் அளித்து பிறகு அந்த நபர் ஓட்டுனரை வழிநடத்துவது என்பது ஒரு நல்ல அனுகுமுறை.” என்று சொல்லி முடித்தார்.

ஏதாச்சும் சந்தேகம்  இருந்தால் கேட்கவும். அது முட்டால் தனமாக இருந்தாலும் பயன்படும்.” என்று சொல்லி காத்திருந்தவரிடம் புதிதாக கார் பேரணிக்கு வந்த ஒருவர்.
வாட் இஸ் த பர்பஸ் ஆஃப் திஸ் ஜெர்னி? (What is the purpose of this journey)” என்று எனக்கு பின்வரிசையிலிருந்து கேட்டார்.

சொல்கிறேன். நீங்கள் பார்த்திருப்பீர்கள். பார்வைத் திறன் குறையுடையவர்களை இந்த சமூதாயம் நடத்தும் விதத்தை. பொதுவாக பார்வைத் திறன் குறையுடயவர்களால் என்ன முடியும்  என்ற கேள்விக்கு இந்த பேரணி பதிலளிக்கும். இது அவர்களின்மீதான நம்பிக்கையை உயர்த்தும். அவர்களின் திறமையை வெலிக்கொணரும். அவர்களுடனான தொடர்பை பிறருக்கு ஏற்படுத்தும். உங்கள் பயணத்தின்போது நீங்கள் ஒவ்வொருவரும் எதைப்பற்றியும் யோசிக்காமல் உங்களை வழிநடத்தும் பார்வை திறன் குறையுடைய  வழிகாட்டியை நம்புங்கள். சந்தேகம் இல்லாமல் நம்புங்கள். நீங்கள் அவர்களின் திறமையை தெரிந்து கொள்வீர்கள். மட்டுமல்லாமல், வெற்றிபெறுவதற்காக விளையாடாதீர்கள். இது ஒரு அழகான அனுபவம். சந்தோஷமாய் விளையாடுங்கள். நன்றி.” என்று முடித்தார்.

அரங்கை விட்டு வெளியே வந்தோம். நான் மட்டும் தனியாய் நடந்துவந்துகொண்டிருக்கும்போது ஒருவர் வந்து என்னை வெளியே அழைத்து சென்றார்.

வெயில் வாட்டி எடுத்தது. நிறைய பேருக்கு நிற்க முடியவில்லை. ஒவ்வொரு பார்வைத் திறன் குறையுடைய வழிகாட்டியும் அழைக்கப்பட்டு அவரவருக்குண்டான கார்களில் அமரவைக்கப்பட்டுக்கொண்டிருந்தனர். முதல் வண்டியை கொடியசைத்து தொடங்கிவைத்தனர். அடுத்தடுத்து கார்கள் கிளம்பிக்கொண்டிருந்தன. நான் காத்துக்கொண்டிருந்தேன். என் பெயரை அழைக்கவே இல்லை. என்னைப்போலவே நிறைய பேரின் பெயரும் அழைக்கப்படாமல் கிடப்பில் வைக்கப்பட்டிருந்தது. ஒருவேளை கார் எனக்கு கிடைக்காதோ என்று கூட நினைத்துக்கொண்டேன்.
கார் நம்பர் 33. நேவிகேட்டர் வினோத்!” என்று ஒரு குரள் கேட்க நான் மிக ஆர்வமாக கையை உயர்த்தினேன். உயர்த்திக்கொண்டே முன்னே சென்றேன்.
ஆர் யூ வினோத்?”
யெஸ் சார்.” என்றதும் ஒருவர் கையை பிடித்து அழைத்து சென்றார். உடனே இன்னொருவர் கைக்கு மாற்றிவிட பட்டேன். அவர் ஓட்டுனர் என்று நினைத்தேன். அவர் கூட்டிச் சென்று ஒரு காரின் முன்பு நிருத்தி உள்ளே இருந்தவரிடம்,
இவர்தான் உங்க நேவிகேட்டர் என்றார்.”
உள்ளே இருந்தவர், ”ஓக்கே.” என்றதும்
என்னை கூட்டிச் சென்றவர் கதவைத் திரந்து என்னை உள்ளே அனுப்பினார்.
ஆஹா. கார் நம்பர் 33. நியூமராலஜி படி ரொம்ப நல்ல நம்பர். கூட்டுனா 6 வரும். கண்டிப்பா பரிசுவரும்.” என்று நினைத்துக்கொண்டே உல்லே சென்ற எனக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகள்தான் வந்து சேர்ந்தன.

தொடரும்.


1 comment:

  1. வாவ் இப்படி ஒரு போட்டியை கேள்விப்பட்டதே இல்லை நான்.
    இப்போதும் எந்த போட்டி நடக்கிறதா அதில் செய்வதற்கு பைசா கட்ட வேண்டுமா

    ReplyDelete

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube