26 June 2020

சதுரங்கம்.

Posted by Vinoth Subramanian | Friday, June 26, 2020 Categories: , , ,


ரிஷி பக்கத்து வீட்டு பையன். பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருக்கிறான். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இருவரும் சதுரங்கம் விளையாடுகிறோம். பார்வையற்றோருக்கான சதுரங்கப் பலகையைப் பரிட்சையமாக்கிக்கொண்டிருக்கிறான்.

சென்ற வருடம் முதல் பாதியில் எல்லாம் அதுதான் எனக்கு மிகப்பெரிய ஆருதல். எனக்கு ஏற்பட்டிருந்த மன உளைச்சலை ரிஷியுடன் சதுரங்கத்தின் வாயிலாகத்தாண் கடந்துகொண்டிருந்தேன். நன்கு விளையாடக் கூடியவன். இருவருமாய் சேர்ந்து ஒரு ஆட்டத்தை அதிகபட்சம் மூன்று மணி நேரமாவது இழுத்துவிட்டுக்கொள்கிறோம் . ஒரு ஆட்டத்தின் முடிவு என்பது ஒரே நாளில் சாத்தியப்படுவதில்லை. இடையில் ஏதாவது பணி வந்தால் அல்லது நேரம் ஆகிவிட்டதென்றால் மூன்று நாட்கள். பார்வையற்றோருக்கான சதுரங்கப்பலகையில் அப்படி ஒரு சாத்தியம் இருக்கிறது. ஆட்டத்தைப் பாதியில் நிறுத்திக்கொண்டு எப்போது வேண்டுமென்றாலும் எடுத்து விளையாடலாம். காய்கள் களையாது. நீண்டநேரம் ஆகிவிட்டால் ஏதாவது ஒரு சுவாரசியமான அல்லது யோசிக்க இயலாத இடத்தில் நிறுத்திக்கொள்கிறோம்.

ரிஷி சதுரங்கத்துக்காகவே வகுப்புக்கெல்லாம் சென்றிருக்கிறான். அவனோடு தாக்குப்பிடிக்கிறேன் அவனை அவ்வப்போது வென்றிருக்கிறேன் என்பதை நினைத்தால் எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது.

நான் வகுப்புக்கெல்லாம் சென்றதில்லை. சிறு வயதில் பார்வையற்றோர்கள் சதுரங்கம் எல்லாம் விளையாட முடியாது என்றுதான் நினைத்திருந்தேன். புனித லூயி பள்ளியில் சேர்ந்தபோதுதான் பார்வையற்றோருக்கான சதுரங்கப்பலகை இருக்கிறது என்று தெரியும். ஆறாம் வகுப்பு சேர்ந்தபோது அப்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ராமராஜ் அண்ணாதான் எனக்கு சதுரங்கம் விளையாடச் சொல்லிக்கொடுத்தார். இப்போது சதுரங்கப்பலகையை எடுக்கும்போதெல்லாம் அவர்தான் நினைவுக்கு வருகிறார்.

அதன் பிறகு வகுப்பில் நானும் பரத்தும் விளையாடுவோம். சில நாள் மகேஷுடன். சில நாள் தர்மராஜுடன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு யுத்தி. பரத் சதுரங்கத்தை மனதிலேயே நிறுத்திக்கொள்வான். ஆட்டத்தை முடிக்கும் எண்ணத்திலேயேதான் விளையாடுவான். அதன் பொருட்டு வேறு பக்கம் காய்களை விட்டுக்கொடுத்துக்கொண்டிருப்பாண். பார்த்தால் நமது ஆட்டம் இன்னொரு பக்கத்தில் முடிந்துவிடும். திடீரென்று ஒருநாள் ஏ 1 பி 2 சி 6. என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான். எனக்கு இன்றுவரை அதெல்லாம் என்னவென்றுத் தெரியாது.  இப்போது கணினியுடன் விளையாடி ஜெய்க்கிறானாம்.

பரத் ஒருவிதம் என்றால் மகேஷ் வேறுவிதம். அந்தந்த நகர்வுக்கு மட்டும்தான் யோசிப்பான். ஆனால் வென்றுவிடுவான். மகேஷுக்கு அதிகம் யோசித்தால் பிடிக்காது. தர்மராஜ் திடீரென்று அதகளம் செய்துவிடுவான்.

ஜூனியர் சாய் கிரிஷ்ணன் மிகச் சிறந்த ஆட்டக்காரன். பெரிய பெரிய போட்டிகளில் எல்லாம் கலந்து கொண்டு விளையாடி இருக்கிறான். அவனுடன் ஒருமுறை கூட விளையாடவில்லையே என்று இப்போது வருத்தமாக இருக்கிறது. அந்த நேரத்தில் நான் இன்னும் அதிகமாக சதுரங்கம் விளையாடி இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஒன்பதாம் வகுப்புக்கு மேல் சதுரங்கம் விளையாடுவதை முற்றிலும் குறைத்துக்கொண்டேன்.

அதன் பிறகு கல்லூரியில் யோகராஜ் அன்ணாவுடனும் பிறகு கிஷோருடனும் ஒரு ஐந்தாறு ஆட்டங்கள் விளையாடி இருப்பேன். பெரும்பாலும் தோள்விகள்தான்.  உண்மையிலேயே அப்போதுதாண் ஆட்டத்தின் நுனுக்கங்கள் புரிய ஆரம்பித்தன. சதுரங்கம் என்பது வெரும் நகர்வுகள் சம்மந்தப்பட்டதல்ல என்பது புரிந்தது.

யோசித்து ஆடி இருக்கிறேன். கடைசிவரை நன்றாக ஆடி கடைசியில் ஏதேனும் தவறு செய்து தோற்றிருக்கிறேன். நான் செய்த தவறுக்கு இணையாக எதிரிலிருந்தவர்களும் தவறு செய்யும் பட்சத்தில் அறிதாய் வெல்ல முடிந்திருக்கிறது. அப்படி அதிகம் யோசிக்கும் பட்சத்தில் ஸ்டாப் க்லாக் வைத்தால் தோல்விதான்.

சிறுவயதில் டோர்னமண்டுகளில் கலந்து விளையாடி இருக்கிறேன். வென்றிருக்கவேண்டிய ஆட்டங்கள் கூட ஸ்டாப் க்லாக் மூளம் தோல்வியை கொடுத்திருக்கின்றன. சிறு வயதில் அப்படி ஆங்காங்கே தோற்றதாலோ என்னமோ அந்த விளையாட்டின் மீது அந்த வயதில் ஈர்ப்பு குறைந்துபோயிருக்கும் என்று இப்போது தோன்றுகிறது.

ஆனால் இப்போது சதுரங்கத்தின் ஒவ்வொரு ஆட்டமும் ஒவ்வொரு பாடத்தைக்கற்றுக்கொடுக்கின்றது. நம்மைப்போலவே எதிரில் இருப்பவரும் யோசிப்பார் என்று எண்ணுவது எவ்வளவு பெரிய அறிவின்மை? நண்பண் ரிஷியியுடன் விளையாடும்போதெல்லாம் அதைத்தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். எந்த ஆட்டமாவது பாதியில் நின்றுவிட்டால் அந்த ஆட்டம் முடியும்வரை அதைப்பற்றியே மனம் நினைத்துக்கொண்டிருக்கிறது. சில நேரங்களில் கனவில் கூட சதுரங்கம்தான்.

இப்போதெல்லாம் நான் ஆடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் எனது ஆட்டம் எப்படி இருக்கிறது என்பதைவிட ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எனது எண்ணங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதைத்தான் எனது அறிவு ஆராய்ச்சி செய்கிறது.

நான் சதுரங்கத்தில் எடுக்கும் முடிவுகளும் வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதா என்று ஆராயத் தோன்றுகிறது. ஒரு தவறான நகர்வு ஆட்டத்தின் மொத்த நிலையையும் மாற்றிவிடுகிறது என்பதாலேயே முடிந்தளவுக்கு டிஃப்ஃபென்சிவ் மோடிலேயே ஆடிக்கொண்டிருந்திருக்கிறேன்.

உதாரணமாக இருவரின் ரானிகளும் ஒன்றை ஒன்று வெட்டிக்கோளும் நிலையில் இருந்தால் நான் வெட்டமாட்டேன். ஆனால் ரிஷி வெட்டிவிடுவான். என்னைப்போலவே அவனும் யோசிப்பான் என்று நினைப்பதுதான் முதல் தவறு என்று கூட தோன்றும்.

நான் சேதாரமில்லாமல் வெல்லவேண்டும் என்று நினைப்பேன். ஆனால் ரிஷி அப்படி இல்லை. இரண்டு பக்கத்திலும் ஒரே மாதிரி சேதாரம் என்றால் பரவாயில்லை. வென்று விடலாம் என்று நினைப்பான். பல காய்கள் ஒரே இடத்தில் வெட்டிக்கொள்ளும் அளவிற்கு மிகுந்த நெருக்கடி வந்தால் நான் யோசிப்பேன். வெட்டுகளை தாமதப்படுத்துவேன். ஆனால் அப்படி ஒரு நிலை வரும்போது நிகரான பலம் வாய்ந்த காய்கள் என்றால் அவன் வெட்டிவிடுவான். அப்படி வெட்டும்போது அடுத்த நகர்வுகளுக்கு காய்கள் குறையும். காய்கள் குறையும்போது அதிகம் யோசிக்க வேண்டிய தேவை இருக்காது என்பான். அது ஒரு யுத்தி. எனக்கே கூட சரி என்றுதான் தோன்றும். ஆனால் அதையே எல்லோரிடமும் எதிர்பார்க்க முடியாது. ஏன் அவனே கூட இன்னொரு ஆட்டத்தில் தனது யுத்தியை மாற்றிக்கொள்ளலாம்.

ரிஷியின் அப்பாவும் நன்கு விளையாடுவார். ஒரே ஒரு ஆட்டம்தான் அவருடன் விளையாடி இருக்கிறேன். தோற்றுவிட்டேன். ஆனால் ரிஷி அவரைப் பலமுறை வென்றிருக்கிறான். நான் ரிஷியைப் பலமுறை வென்றிருக்கிறேன். ஆனால் அதுவெல்லாம் சதுரங்கத்துக்குத் தெளிவான வரையறையைக் கொடுக்காது. ரிஷியின் அப்பாவின் ஆட்டமுறை முற்றிலும் வேறுவிதமாக இருந்தது. அவர் அவ்வளவாக யோசிப்பதில்லை. இதுதான் என்று ஊகித்துச் சொல்ல இயலவில்லை. இன்னும் சிலமுறை விளையாடிப் பார்க்கவேண்டும்.

ஒவ்வொருவரின் ஆட்டமுறையும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. தொடர்ந்து ஆடும்போதுதான் அவர்களது ஆட்டம் எப்படிப்பட்டதாய் இருக்கிறது என்பதுப் புலப்படுகிறது.

சிலர் ரானியை வைத்து நன்றாக ஆடுகிறார்கள். சிலருக்கு ரானி ஒரு பொருட்டே இல்லை. அவர்களது ஆட்டம் முழுதும் குதிரைகளை நம்பித்தான் இருக்கிறது. சிறு வயதில் பள்ளிக்கு ஒரு சதுரங்கப் பயிற்சியாளர் வருவார். பெயர் சாய் அருள் முருகன் என்று நினைக்கிறேன். எதிரி இடம் எத்தகைய வலிமை இருந்தாலும் நம்மிடம் இரண்டு மந்திரிகள் இருந்தால் போதும் என்பார். எளிதில் வென்று விடலாம் என்பார். அப்போது அது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இப்போது அவற்றை மட்டும் வைத்துக்கொண்டு நான் வெல்லும்போதுதான் அது உண்மை என்றுப் புரிகிறது.

அப்போதெல்லாம் ரானியை இழந்துவிட்டால் ஆட்டமே போய்விட்டது என்று எண்ணிக்கொள்வேன். அது ஒரு உளவியல் ரீதியான எண்ணம் என்று இப்போதுப் புரிகிறது. நாம் தற்காத்துக்கொள்ளும் விதமே தாக்க முற்படும் எதிரியைத் தளர்வடையச் செய்து அவரை ஒரு கட்டத்தில் தவறும் செய்யவைக்கலாம். இல்லையென்றால் அப்படி நடக்காமலும் போகலாம்.

எப்படி இருந்தாலும் தாக்குதல் தற்காத்தல் என்ற இரண்டு கோட்பாட்டுக்குள்தான் சதுரங்கம் இருக்கிறது. தாக்கிக்கொண்டே இருந்தால் இழப்புகள் அதிகம் ஏற்பட்டு வெல்லமுடியாமல் போகலாம். தற்காத்துக்கொண்டே இருந்தாலும் தாக்காமல் வெற்றியானது சாத்தியப்படாமலும் போகலாம். அந்தந்த நேரத்துக்கு அதையதைச் செய்யவேண்டும் போலிருக்கிறது. அதைச் சரியாகச் செய்வதன் மூளம் வெற்றி சாத்தியப்படுகிறது என்று தோன்றுகிறது.

சதுரங்கத்தைப் பொருத்தவரையில் கடைசிவரைப் போராட வேண்டும் என்பதுதான் நான் கற்றுக்கொண்டப் பாடம். நாம் எதை இழந்தாளும் எதிரியிடம் எது இருந்தாலும் நம்மிடம் இருப்பதைவைத்துக் கொண்டுப் போராடவேண்டும்.  சில நேரங்களில் எதிரில் இருப்பவரின் காய்கள் நம்மைக் கட்டுப்படுத்தும். சில நேரங்களில் நமது காய்களே நம்மை முன்னேறாமல் போராடமுடியாதபடிப் பின்னே நிற்கவைத்துவிடும். எப்படி இருந்தாலும் பொருமைக் காத்துப் போராடவேண்டும்.

வெல்லப் போகிறோம் என்ற நினைப்பில் ஏதேனும் ஒரு தவறை எதிரில் ஆடுபவர் அறிதாய்ச் செய்யக்கூடும். அப்படிச் செய்தால் அதை நமக்குச் சாதகமாக்கிக் கொண்டுப் போராடவேண்டும். முடிவு என்பது முடியும்வரை நிச்சையமில்லை. நமக்கேக் கூடத் தெரியாமல் ஒரு கட்டத்தில் நாம் வெற்றிக்கு அருகாமையில் வந்திருப்போம் .
அத்தனையையும் மீறித் தோற்றால் இருக்கவே இருக்கிறது இன்னொரு ஆட்டம்!


1 comment:

  1. நா chess விலையாடி பல வருஷங்கள் ஆச்சு. இன்னும் நீ chess விலையாடுரத நினைச்சா ஆச்சர்யமா இருக்கு. இப்போ எல்லாம் கொஞ்சம் யோசிச்சாலே தலை வலிக்க ஆரம்பிச்சிடுதா ஸோ நோ chess...

    ReplyDelete

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube