02 June 2020



இவாஞ்செலின் சரண்யா. அதுதான் அவரின் முழூ பெயர். அக்கா என்பது வெரும் வார்த்தைதான் என்று அதுவரை நினைத்திருந்தேன். ஆனால் அது ஒரு உணர்வு என்பதை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு உடன் பிறவாமலே உணர்த்தியவர் சரண்யா அக்கா.

எனது கையில் தன் நினைப்பு இருக்கும்படிக்கு ஒரு மோதிரம் அணிவித்துவிட வேண்டும் என்பது அவரது ஆறாண்டு கால ஆசை. அதை நிறைவேற்றும் பணியைத்தான் சரண்யா அக்காவின் பெற்றொர்களான பெஸ்கி அன்கிலும் ராசாத்தி ஆண்டியும் அவரது உடன் பிறந்த மூத்த சகோதரியான சிந்தியா அக்காவும் அந்த மேடையில் செய்து முடித்துவிட்டு எனது பதிலுக்காய் காத்திருந்தனர்.

பெஸ்கி அன்கில் அந்த மோதிரத்தை எனது இடது கை மோதிர விரலில் அனிவித்த சில நொடிகளிலேயே சொல்லிவிட்டேன் இது கச்சிதமாக பொருந்தி இருக்கிறது என்று. தவறு நிகழ வாய்ப்பில்லை என்றூ ஓரளவு தெரியும்.
”உனக்கு நான் ரிங் வாங்கி தரேண்டா.” என்று சொல்லிய சரண்யா அக்காவிடம் மோதிர விரலின் அளவை ஒரு நகைக்கடையில் குறித்துக்கொண்டு நான் முன்னமே சொல்லிவிட்டிருந்தேன். அவருக்கு செலவு வைக்கிறோமே என்று தோன்றியது.

முதலில் வேண்டாம் என்றுதான் மறுத்தேன். ஆனால் என்னை ஒப்புக்கொள்ளவைத்துவிட்டார். நான் சரி என்றதும் விஷையம் துபாயிலிருந்து கண்யாகுமரிக்கு துரித கதியில் செல்ல இவர்களும் மோதிரத்தை தேர்வு செய்து கொண்டு நிகழ்ச்சிக்கு வந்து சேர்ந்தனர்.

எனது விரலில் மோதிரம் சரியாக பொருந்தி இருந்தது ஒருவித சந்தோஷத்தை எங்கள் நால்வருக்குள்ளும் ஏற்படுத்தியிருந்தது. மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்கள் மூவரும் என்னிடம் சொல்லிவிட்டு மேடையைவிட்டு கீழிறங்கினர். அந்த மோதிரத்தை ஒருமுறை தொட்டுப்பார்த்துக்கொண்டேன். சரன்யா அக்கா வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது.

அவர் துபாயிலிருந்து ஜனவரி இரண்டாயிரத்து இருவதில் விடுமுறைக்கு வரும்போதே திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் குரு பெயற்சி குருக்கே வந்து விட்டது.

நான் அர்ச்சனாவைத் திருமணம் செய்வதுதான் சரி என்பதை என்னைவிட உறுதியாக நம்பினார் சரண்யா அக்கா. அதன் பொருட்டு எனக்கு வந்த எனது இருதி நேர தடுமாற்றங்களை எல்லாம் தகர்த்தெரிந்தார்.

முதலில் நண்பர் திரு லியோ மூளமாக பரிட்சயமாகி, பின் பழக்கமாகி, எனது நம்பிக்கையாகி, உடன் பிறக்காமலேயே உரவாகி, என் வாழ்வில் ஒரு அங்கமாகி, எனது பல ப்ரச்சனைகளுக்கு தீர்வாகி இப்போது எனது விரலில் மோதிரமாகி இருக்கிறார் திருமதி இவாஞ்செலின் சரண்யா.

கூட்டம் மெல்ல குறைந்து பின் இல்லாமலேயே போனது. எதிர்பார்த்த சிலர் வரவில்லை. சிலரால் வர இயலவில்லை. அது அவரவர் நிலையைப் பொருத்தது. எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் அது நான் எதிர்பார்த்த ஏமாற்றம்தான்.

எதிர்பார்த்து ஏமாறுவதைக் காட்டிலும் ஏமாற்றத்தையே எதிர்பார்த்து காத்திருப்பது என்பதே நல்லது. தேவையற்ற மனவலியில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். நானும் அர்ச்சனாவும் தீக்க்ஷண்யாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கவேண்டும் என்ற எங்களது ஆசையும் நிறாசையாக போனது.

மேலே சாப்பிட சென்றோம். உணவு நன்றாகத்தான் இருந்திருக்கிறது. வெத்த குழம்பு சரியில்லை. ஆனாலும் மாப்பிள்ளைக்கு வைக்கும் உணவிற்கும் மற்றவர்களுக்கு பறிமாறும் உணவிற்கும் வித்தியாசம் இருக்கிறது. யார் யாருக்கு எதெல்லாம் கிடைத்ததோ எதெல்லாம் கிடைக்கவில்லையோ.

கீழிறங்கி வந்தவுடன் ராஜா சொல்லிவிட்டு கிளம்பினான். காசு கொடுத்தேன். வாங்கவில்லை. புகைப்படக்காரர் என்னையும் அர்ச்சனாவையும் மட்டும் தனியே வைத்து புகைப்படம் எடுத்த பின் அனைவரும் வீடு திரும்பினோம். அன்று விழித்துக்கொண்டிருந்த இரவை அடுத்தநாள் விடியல் வந்து உறங்க அனுப்பியது.

அடுத்தநாள் காலையே சமையல் காரருக்கு அனுப்ப வேண்டிய மீத தொகையை கூகுல் பேயில் அனுப்பி கணக்கைத் தீர்த்தேன். மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது. எம்போன்ற பார்வையற்றோர்களைப் பொருத்தவரையில் டெக்னாலஜிதாண் இப்போதைக்கு தெய்வம்.

அதுவும் இந்த பண மதிப்பிழப்புக்கொள்கை வந்ததிலிருந்து பார்வையற்றோரின் நிலைமை பெரும்பாடாகிப்போய்விட்டது. எத்தனை முறை தடவிப் பார்த்தாலும் இருவது ரூபாய்க்கும் இரண்டாயிரம் ரூபாய்க்கும் இடையிலிருக்கும் வித்தியாசம் விளங்கவில்லை.

சமீபத்தில் ஆட்டோவில் ஏறிய ஒரு பார்வைத்திறன் குறையுடைய வங்கி ஊழியர் ஆட்டோக்காரனிடம் ஐம்பது ரூ தாள் என்று நினைத்து ஐநூறு ரூபாயை கொடுத்துவிட்டார்.   வந்தவரைக்கும் இலாபம் என்று அந்த ஆட்டோக்காரனும் ஆட்டையைப்போட்டுக்கொண்டு சென்றுவிட்டான். ரூபாய் நோட்டில் இருந்த காந்தியும் வங்கியில் வேலை செய்பவனுக்கே இந்த நிலைமையா என்று எண்ணியபடி அவனோடு சிறித்தபடியே சென்றுவிட்டார்.

நோட்டுகளில் மட்டுமே இருந்த காந்தியை நோட் ஃபோர்கலிலும் நோட் ஃபைவ்களிலும் இறக்கிவிட்டதுதான் பார்வையற்றோர்களுக்கு இப்போதைக்கு இருக்கும் பெரிய ஆருதல். அண்ணனின் திருமணத்திற்கு கொஞ்சம் பணத்தை கேஷாக எடுக்கவேண்டியிருந்தது. எனது திருமணத்திற்கு அதுவும் இல்லை. மின்னணு பணப் பறிமாற்றம் பார்வையற்றொர்களுக்கு பக்கத்துணையாக மாறி இருக்கிறது.

நிலைமை கைமீறி போய்விடுமோ என்று பயந்து கிஷோரிடம் கொஞ்சம் கடன் வாங்கி இருந்தேன். நல்லவேளையாக அப்படி ஏதும் நடக்கவில்லை. அன்றே திருப்பிக்கொடுக்க முடிந்தது.

அதே வாரத்தில் இரண்டாவது மறுவீடு செல்ல திட்டமிட்டிருந்தார்கள். அதன்படி நாங்களும் நவம்பர் ஆறாம் தேதி ஒரு சில உரவினர்களுடன் சென்றோம். அதே தேதியில் அவர்களின் ஊருக்கு விருந்தும் வைத்திருந்தார் மாமா. தூரம் கருதி வரவேற்புக்கு அழைப்பு விடுக்காததால் அந்த விருந்து ஏற்பாடு.

அர்ச்சனாவின் அத்தைகள் வந்திருந்தனர். அப்பா சபையில் வைத்து செய்துவிட்டார். திருமணத்தேதி அன்று பாதியில் கிளம்பிச் சென்றதற்கு அவர்களால் வலுவான காரணத்தை கூற இயலவில்லை. அதனால்தான் நாந்தான் காரணம் என்று முடிவுக்கு வந்திருந்தேன்.

வெளியில் விருந்து நடந்து கொண்டிருந்தது. இலைத்தழைகளை உண்ட ஆடு ஒன்று இலைகளின் மீதே விருந்தாகிப்பொயிருந்தது. அங்கு நான், அப்பா பாலு மாமா மட்டும்தான் சைவம். அசைவ விருந்தொன்று அரங்கேறும்போது ஆடுகலுக்கு அடுத்தபடி பறிதாபமான நிலை சைவர்களுக்குதான். வெரும் சாம்பார்தான். அங்கே கூட்டு பொரியலுக்கு கூட வாய்ப்பில்லை. அர்ச்சனாவின் மூன்றாவது அத்தைதான் எங்களுக்கு பறிமாறிக்கொண்டிருந்தார்.

சாப்பிட்டு முடித்து சில நேரம் கழித்து கிளம்பினோம். அத்தை அர்ச்சனாவை இருந்து போகும்படி சொன்னார். அவள் என்னோடே வந்துவிடுவதாக சொன்னாள். நான் கூப்பிடவில்லை. இருந்தாலும் அவள் அப்படி சொன்னது எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது. அத்தை மாமா இருவரின் காளிலும் விழுந்து ஆசிர் பெற்று கூடவே பணமும் பெற்று கிளம்பினோம்.

ஊத்துக்கோட்டை வரைக்கும் பலரும் பல குழுக்களாக பிரிந்தும் சேர்ந்தும் வந்து சேர்ந்திருந்தனர். நானும் அர்ச்சனாவும் அண்ணனுடன் பைக்கில் வந்து இறங்கினோம். ஊத்துக்கோட்டையிலிருந்து திருவள்ளூருக்கு செல்லும் பேருந்து எதுவும் நீண்ட நேரமாக வந்து சேரவில்லை. கூட்டம் அதிகமாகிக்கொண்டிருந்தது.

கூட்டத்தையும் குழந்தையையும் கருத்தில் கொண்டு நானும் அர்ச்சனாவும் அண்ணனின் பைக்கில் இருந்து இறங்கி லோகேச்வரியையும் குழந்தை தீக்க்ஷன்யாவையும் ஏற்றி அனுப்பினோம். பேருந்து வரவில்லை.

ஒரு கார் வந்தது. அப்பா சென்று பேசினார். திருவள்ளூருக்கு செல்வதாக கூறினார் அந்த ஓட்டுனர். ஆளே இல்லாத காரில் நான் அர்ச்சனா உட்பட ஒரு ஐந்து பேரை ஏற்றி அனுப்பினார் அப்பா. அந்த ஓட்டுனர் காசு எதுவும் குட கேட்ட மாதிரி தெரியவில்லை. வண்டியில் நாங்கள் போய்க்கொண்டிருக்கும்போதே அப்பாவிடமிருந்து அழைப்பு வந்தது.
”அர்ச்சனா கிட்ட சொல்லி சைட்ல பாத்து அந்த வண்டி நம்பர நோட் பண்ண சொல்லு. நான் உங்கள அனுப்பிட்டு நம்பர கூட நோட் பண்ணாம விட்டுட்டேன்.” என்றவர், “பண்ணிட்டு நம்பர எனக்கு மெஸ்ஸேஜ் அனுப்புங்க.” என்றார். எனக்கு எதற்கு என்று முதலில் புரியவில்லை. பிறகுதான் லேசாக உரைத்தது.
எனது வலது புரத்தில் கடைசியில் அமர்ந்திருந்தாலும் அவளால் வண்டி எண்ணை பார்க்கமுடியவில்லை என்றாள். நான் அதை அப்படியே அப்பாவிடம் சொன்னேன்.
”சரி அப்பிடினா பாத்து போங்க. நந்தினி கிட்ட அவன கொஞ்சம் கேர்ஃபுல்லா வாச் பண்ண சொல்லு. அவன் எப்பிடினு தெரியல. கொஞ்சம் அசந்தாலும் அவ்வளவுதாண். நகையெல்லாம் போட்டுக்கிட்டு இருக்காங்க எல்லாரும். திருவல்ளூர் ரெய்ல்வே ஸ்டேஷன்ல கரக்டா எறங்கிடுங்க. எந்த காரணத்துக்கொண்டும் அந்த பிரிட்ஜ மட்டும் தாண்டிராம பாத்துக்கோங்க. தாண்டிட்டா அவ்வளவுதாண். அப்புரம் பிடிக்க முடியாது. முடிஞ்சா பஸ் ஸ்டாண்டுல கூட எறங்கிடுங்க.” என்றார் ஒருவித பயத்துடன்.
”எதுக்கு ஏத்திவிடனும் அப்புரம் எதுக்கு பயப்படனும்.” என்று நினைத்துக்கொண்டேன் நான்.

நந்தினி அக்கா முன்வரிசையில் அமர்ந்திருந்தார். கவனமாயிரு என்று அவரிடம் சொன்னால் ஓட்டுனருக்கும் கேட்டுவிடும். அதனால்
“கொஞ்சம் கேஃபுல்லா இரு. நந்தினி அக்கா கிட்டையும் கேர்ஃபுல்லா இருக்க சொல்லு.” என்று எனது இடப்பக்கத்தில் அமர்ந்திருந்த விமலாவிடம் மட்டும் சொல்லியிருந்தேன்.
”எதுக்குடா.” என்றார் விமலா என்னிடம்.
”உங்க மாமா தான் கேர்ஃபுல்லா இருக்க சொன்னாரு.”

வழியில் அண்ணனை கண்டோம். கொஞ்சம் தைரியம் வந்தது எனக்கு. பைக்கை ஒரு கோயிலின் முன் நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தான். லோகேச்வரியையும் தீக்க்ஷண்யாவையும் காணவில்லை. நேரடியாக பேசாமல் அலைபேசியில் அழைத்து
”எங்க பின்னாடியே வரியா.” என்றேன்.
”இப்போதான் பால் குடிக்க உள்ள போயிருக்கு கொழந்த. கொஞ்சம் ஸ்லோவாதான் வர முடியும்.” என்றான். அப்படி என்றால் சாத்தியமில்லை என்று தோன்றியது.
வண்டி எண்ணை குறித்துக்கொள் என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. சத்தமாய் சொன்னால் ஓட்டுனருக்கு கேட்டுவிடும். மெதுவாய் சொன்னால் அண்ணனுக்கு கேட்காது. குருஞ்செய்தியை அனுப்பலாம் என்று நினைத்தால் குழந்தையை தூக்கிக்கொண்டு வருபவனுக்கு தேவையற்ற பதற்றத்தை உருவாக்குவது போல் ஆகிவிடும் என்று தோன்றியது.

ஒருவேளை கார் காரன் கத்தியைக் காட்டி திருடும் திருடனாய் இருந்தால் 100. எங்களுள் யாரையேனும் குத்திவிட்டு திருடினால் 108. இவைதான் இப்போதைக்கு நோட் பண்ணவேண்டிய எண்கள் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.
என்னைத் தவிர எல்லோரும் பெண்கள். அதுவும் நகை அணிந்த பெண்கள். பயம் பற்றிக்கொண்டது. நானே நகை அணிந்திருக்கிறேனே.
”பஸ் ஸ்டாண்டு போனா பிரிட்ஜு வருமா.” என்றேன் எல்லோரிடமும். எதற்கு அதைக் கேட்டேன் என்று அந்த ஓட்டுனருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் எதுவும் சொல்லவும் இல்லை. நந்தினி அக்கா மட்டும் வராது என்றார்.
”பாலத்த தாண்டுனா தானடா. நான் தாண்டவிட மாட்டேண்டா.” என்று எண்ணியபடி,
”அப்போ பஸ் ஸ்டாண்டுலயே எறங்கிக்கலாம்.” என்றேன்.
”ரெய்ல்வே ஸ்டேஷன்லயே விடுரதா சொல்லுராரு இவரு. அதுதான் ஈசியாம்.” என்றார் முன்னிருந்த நந்தினி அக்கா.
”இவன் எறக்கிவிடும்போது தான தெரியும் யாருக்கு ஈசினு.” என்று நினைத்துக்கொண்டேன்.
”அதெல்லாம் வேணாம். அப்பா பஸ் ஸ்டாண்டுலயே எறங்கிக்க சொன்னாரு.” என்றேன். அவ்வளவு நேரம் ரெயில்வே ஸ்டேஷன் என்று சொல்லிக்கொண்டிருந்த அந்த ஓட்டுனர்
” உங்க இஷ்டம்தான் நீங்க எங்க சொன்னாலும் அங்கேயே இறக்கிவிட்டுடுறேன்.“ என்றார். எனக்கே தெரியாமல் அவர் எனது எதிரியாய் மாறி இருந்தார். ஒருவழியாக திருவள்ளூர் பேருந்து நிலையம் வந்தது. அனைவரும் இறங்கிக் கொண்டோம். நூறு ரூபாய் கொடுத்து அவரிடம் கொடுக்க சொன்னேன்.

அவரை அப்படி சந்தேகப்பட்டது சரியா என்றெல்லாம் தெரியாது. ஆனால் தவறில்லை என்று மட்டும் தோன்றியது. முன்பின் தெரியாதவர். தானாக வந்து வண்டியில் ஏற்றிக்கொண்டவர். காசை கூட நாங்கள்தான் கொடுத்தோம். வேறு ஏதோ வேளையாக வந்துவிட்டு திரும்பி இருப்பதாகத்தான் சொல்லிக்கொண்டிருந்தார். நல்லவராக இருந்திருக்கலாம். வேறெண்ணம் ஏதேனும் கூட இருந்திருக்கலாம். அவருக்கான வாய்ப்பை முழுமையாக வழங்காமல் ஒரு முடிவுக்கு வரமுடியாது என்று தோன்றியது. ஆளில்லாத இடத்தில் இறக்கிவிட்டிருந்தால் சுயரூபம் தெரிந்திருக்கும். எனது கணிப்பு தவறாகவும் இருந்திருக்கும். தெரியாது.

அண்ணன் பேருந்து நிலையத்தை அடைந்தவுடன் நான் அர்ச்சனாவை மற்றவர்களோடு பேருந்தில் அனுப்பிவிட்டு லோகேஸ்வரியோடும் அண்ணனோடும் பைக்கில் ஏறி வீட்டை அடைந்தேன். மற்றவர்களும் வந்து சேர்ந்தார்கள்.

இரண்டு மோதிரங்களைத் தவிர அனைத்தையும் கழட்டி கொடுத்தேன். அடுத்தநாள் எனது காலிலிருந்த மெட்டியை கழட்ட சொன்னார்கள். ஆண்கள் மெட்டி அணியும் வழக்கமெல்லாம் வழக்கொழிந்து போனதால் வேறு வழியின்றி கழட்டினேன்.

அடுத்த வாரம் வங்கிக்கு சென்றேன். மூன்றாவது மருவீடு அந்த மாதம் பதிநைந்தாம் தேதியே வைத்துவிட்டார்கள். விடுமுறை எடுத்துக்கொண்டு சொற்ப உரவினர்களுடன் சென்று வந்தேன்.

அடுத்தவாரம் வங்கியிலிருந்து பயிற்சிக்கு அனுப்பினார்கள். திருமணமாகாமல் இருந்திருந்தால் யாருக்கும் சிரமம் கொடுக்காமல் விடுதியில் தங்கி பயிற்சி எடுத்துக்கொண்டு திரும்பி இருப்பேன். மறுவீடு சென்றபோது அத்தை இருக்க சொல்லியும் என்னோடு வந்த அர்ச்சனாவை வீட்டில் விட்டுவிட்டு  விடுதியில் தங்கி பயிற்சி எடுக்க மனம் வரவில்லை. ஐந்து நாட்களுக்கு சென்று வந்தேன். அண்ணா வகுப்பில் விடுவதும் அப்பா கூட்டிக்கொண்டு வருவதுமாய் இருந்தது.

வரவேற்புக்கு வரமுடியாதவர்கள் வீட்டிற்கு வந்து வாழ்த்திவிட்டு சென்றனர். நவம்பர் இருவத்து நான்காம் தேதி சதீஷ் அண்ணா, நீலகண்டன் அண்ணா, பாலாஜி மற்றும் மகேஷ் அன்ணா வந்து சென்றிருந்தனர். மகேஷ் அண்ணாவை அழைக்க மறந்திருந்தேன். சில தவறுகள் நம்மை மீறியும் நடந்து விடுகின்றன.

முதன்முறையாக நானும் அர்ச்சனாவும் டிசம்பர் எட்டாம்தேதிதான் தனியாக வெளியே செல்ல வாய்ப்பு கிடைத்தது. லயோலா கல்லூரி என்பதால் தடை ஏதும் இல்லாமல் அனுமதித்துவிட்டார்கள். ஹெல்ப் தி பிலைண்ட் ஃபௌண்டேஷனின் (Help The blind foundation) நிருவனர் திரு பட்டேல் ஆண்டு தோறும் நடக்கும் அந்த நிருவணத்தின் கூட்டத்திற்காக வந்திருந்தார்.

கடந்த பதிநோறு ஆண்டுகளாக கல்லூரியில் படிக்கும் பார்வையற்றோர்களுக்கு தனது நிருவணத்தின் மூளமாக பண உதவியும் பொருளுதவியும் செய்து கொண்டிருக்கும் அவரை பார்க்க அர்ச்சனாவை அழைத்து சென்றேன். தமிழ் நாட்டிலேயே தனது சொந்த செலவில் மூன்று கட்டிடங்களை பார்வையற்றோர்களின் படிப்பிற்காக கட்டி இருக்கிறார்.

எனக்கு திருமணம் என்று நான் சொன்னதும் இரண்டுமுறை ஃபேஸ்புக்கில் என்னை அழைத்திருக்கிறார். முகநூல் அழைப்புகளை எனக்கு எடுக்க தெரியாது. திரும்பவும் அழைக்க தெரியாது.

கல்லூரிக்கு சென்று அவரை சந்தித்தபோதும் அதையேதான் சொன்னேன்.  அர்ச்சனாவை அறிமுகம் செய்தேன்.
”இஸ் திஸ் யங் லேடி யுவர் வைஃப்?” என்று கேட்டார். அவளிடமும் ஆங்கிலத்தில் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசினார். வாழ்த்தினார்.

நான் ஒரு புத்தகம் எழுதி வெளியிட வேண்டும் என்பது அவருடைய ஆசை. எனது ஆங்கில கவிதைகளை ஹாங்காங்கில் நடைபெற்ற லிட்டரரி கிலப்பில் நிர்மலா தாமஸ் என்பவர் மூளம் படிக்கவைத்தார்.
”வென் ஆர் யூ கோயிங் டூ பப்லிஷ் யுவர் போயம்ஸ்?” என்றார். எல்லா வருடமும் என்னிடம் அவர் கேட்கும் கேள்விதான் அது. நான் வழக்கம் போல அடுத்த வருடம் என்றேன். ஆனால் இந்த வருடம் அந்த கேள்வியை கேட்க அவர் இல்லாமல் போவார் என்று நினைக்கவில்லை. நினைத்தால் கூட நம்ப முடியவில்லை. அந்த அரங்கில் அமைக்கப்பட்ட மேடையில் என்னோடும் அர்ச்சனாவோடும் சேர்ந்தபடி புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டார். திருமணமாகி அவரோடு நான் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம் அவருடனான கடைசி புகைப்படமாகிப்போனது.

அன்று மதியம் நானும் அர்ச்சனாவும் கல்லூரியை சுற்றிவிட்டு கிளம்பினோம். தியாகராய நகருக்கு சென்று அவளுக்கு ஏதேனும் ஆடை எடுத்து கொடுக்கலாம் என்று முதலில் நினைத்த எண்ணத்தை கைவிட்டு பின் ரயில் ஏறி வீடு போய் சேர்ந்தோம்.

எங்களுக்கு திருமணமான சில நாட்களிலேயே அர்ச்சனாவுக்கு இரு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்கு பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தார் அப்பா. அவளும் எனக்காகத்தான் அதை ஆர்வமுடன் கற்றுக்கொண்டிருந்தாள்.

வண்டி ஓட்டுவதன் மூலம் பல பயன்கள் இருந்தாலும் என்னை வங்கியிலிருந்து கூட்டிச்செல்லவும் கூட்டிவருவதையும் தவிர அதை கற்றுக்கொள்ளவேண்டிய தேவை அப்போதைக்கு அவளுக்கு இருந்திருக்கவில்லை. அப்படி செய்தால் அப்பாவுக்கும் கொஞ்சம் பணி குறயும்.

ஒவ்வொரு ஆணுக்கும் சமைக்க தெரிந்திருக்கவேண்டும். ஒவ்வொரு பெண்ணுக்கும் வாகனம் ஓட்ட தெரிந்திருக்கவேண்டும் என்று நான் அடிக்கடி சொல்வேன்.

அர்ச்சனாவுக்கு மிதிவண்டி ஓட்டத் தெரியும். அப்பா கொடுத்த பயிற்சிக்கு பிறகு இரு சக்கர வாகனத்தையும் ஓரளவு கற்றிருந்தாள். ஓரிரு நாள் தனியே விட்டு பார்த்தார்கள். சுமாராக ஓட்டி இருக்கிறாள்.

அது திருமணம் ஆகி ஐம்பதாவது நாள். வரவேற்பு நிகழ்ச்சியில் எடுத்த புகைப்பட ஆல்பத்தையும் காணொளி குருந்தகட்டையும் நிஷாந்த் கொண்டுவந்து வங்கியில் என்னிடம் கொடுத்துவிட்டு போனார்.

திருமண நாள் அன்று வேறொருவரின் மூளம் எடுத்த புகைப்படம் சில நாட்களுக்கு முன்புதான் வந்து சேர்ந்திருந்தது. இப்போது இதை வீட்டிற்கு கொண்டு செல்லும் சந்தோஷத்தில் இருந்தேன் நான். அதே சந்தோஷத்தில் ஒறளவு நம்பிக்கை வந்தவர்களாய் அர்ச்சனாவை வண்டியை எடுத்துக்கொண்டு கொஞ்சதூரம் ஓட்டிச் சென்று வரச் சொல்லியிருந்தனர் வீட்டிலிருந்தோர்.  

அப்பா வாசலில் நின்று கொண்டிருந்தார். இவள் வண்டியை எடுத்திருக்கிறாள். தெரு முனையைத் தாண்டி இருக்கிறாள். அவள் திரும்பும் விதத்தை கண்டதும் ஏதோ நடக்கப்போகிறது என்று அப்பா மெல்ல தெரு முனையை நோக்கி நடக்க ஆரம்பித்திருக்கிறார்.

அது ஆக்டீவா த்ரீ ஜி மாடல். பெண்கள் ஓட்டக்கூடிய வண்டிதான் என்றாலும் கனம் அதிகம். முன்பகுதி சற்று குருகலாகவும் பின் பகுதி அகலமாகவும் இருக்கும். உயரமான பெண்களே அதை ஓட்டும்போதும் நிற்கவைக்கும்போதும் தினரியதைப்பார்த்திருக்கிறேன் .

இவள் உயரத்துக்கு இன்னும் கொஞ்சம் சிறிய வண்டியாக வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இவள் ஓரளவு தாக்குப்பிடித்து ஓட்டியதால் இப்போதைக்கு இதில் பயிற்சி செய்யட்டும் என்று எண்ணிக்கொண்டோம்.

சரியாக ஓட்டுகிறோமே என்ற நம்பிக்கையில்தான் முருக்கி இருக்கிறாள். தெருமுனையைத் தாண்டி திரும்பும்போது வண்டி கட்டுப்பாட்டை இழந்திருக்கிறது. சமாளித்திருக்கிறாள். இயலவில்லை. முயன்றிருக்கிறாள் முடியவில்லை. வேகத்தை குறைக்க இரண்டு கைகளாலும் பிரேக்கை அழுத்தி இருக்கிறாள். அதற்குள்ளேயே வண்டி கொஞ்ச தூரம் போயிருக்கிறது. அந்த வண்டியில் கையில்தான் பிரேக் இருக்கும். ஆனால் பிரேக்குக்கு பதில் பயத்தில் ஆக்சிலரேட்டரை முருக்கிவிட்டிருக்கிறாள். வண்டி கட்டுப்பாடில்லாமல் இன்னும் கொஞ்ச தூரம்இன்னும் படுவேகமாய் போயிருக்கிறது. அவளுக்கு பயமும் பதற்றமும் அதிகமாகி இருக்கிறது. ஆக்சிலரேட்டரை முருக்கியபடியே பேலன்சை இழந்திருக்கிறாள். வண்டி சாய்ந்திருக்கிறது.

அப்பா தெருமுனையை தாண்டும்போது திடீரென்று ஒரு சத்தம். திரும்பி பார்த்து ஓடி இருக்கிறார். சற்று தூரத்தில் வண்டி மட்டும் கீழே இருப்பது கண்ணுக்கு தெரிந்திருக்கிறது. அர்ச்சனாவை காண இயலவில்லை. வேகம் கூட்டி ஓடி இருக்கிறார். இப்போது கண்ணுக்கு சற்று அருகில் வண்டி தெரிந்தது. அவரது கண்கள் அர்ச்சனாவை தேடியபடியே அவரது கால்கள் ஓடிக்கொண்டிருந்தன.
முடிகிறது.

1 comment:

  1. அண்ணா நான் பால்பாண்டி சிறப்பாக எழுதி கொண்டிருக்கிறீர்கள் ஒரே ஒரு கோரிக்கை அடுத்த அத்தியாயத்தை ஓடு முடிக்காமல் இன்னும் சிறப்பான வளைகாப்பு குழந்தை பிறப்பு சில நல்ல காரியங்கள் பற்றியும் எழுதினால் பார்வ திருமண வாழ்வு பற்றி பொது மக்கள் புரிந்து கொள்ள உதவிகரமாக இருக்கும் என்பதே எனது எண்ணம் அதைத்தவிர அப்பொழுதுதான் முழுமை பெறும் என்பது என்னுடைய நம்பிக்கை வாழ்த்துக்கள் அண்ணா

    ReplyDelete

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube