09 June 2020


அப்பாவின் கண்கள் அர்ச்சனாவை தேடியபடியே கால்கள் வேகமெடுத்து ஓடிக்கொண்டிருந்தன. அருகில் செல்ல செல்ல வண்டி தெளிவாக தெரிந்தது. அவளும் கண்ணுக்கு தெரிந்தாள். அப்படி தெரிந்த நொடி பயத்தின் நொடியாகத்தான் இருந்தது அவருக்கு.


அவர் சென்று சேரும்பொழுது சிலர் அந்த இடத்தை சூழ்ந்திருந்தனர்.  கூட்டத்தை விளக்கி வண்டியை தூக்கியபோது அர்ச்சனா வண்டியின் கீழே சிக்கிக் கிடந்தாள்.

சற்று நேரத்திலேயே என்னை அழைக்க அப்பா வங்கிக்கு வந்திருந்தார். என்னிடம் எதுவும் சொல்லவில்லை. வரவேற்பு புகைப்படங்களை எடுத்துக்கொண்டு நான் வீட்டை அடைந்ததும் லோகேஸ்வரிதான் அர்ச்சனா கீழே விழுந்ததை சொன்னார்.

நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வண்டி ஓட்ட கற்றுக்கொள்ளும்போது ஏதோ நிலைதடுமாறி சாதாரனமாகத்தாண் விழுந்திருப்பாள் என்று நினைத்துக்கொண்டு கீழிருந்த வீட்டுக்கு சென்றேன். கீழே பின்புரம் இருக்கும் வீட்டில்தான் நானும் அர்ச்சனாவும் இருக்கிறோம்.

உள்ளே சென்று பார்த்தபோது பேச்சற்ற நிலையில் கிடந்தாள். நிலைமை விபரீதமாகி இருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன். அப்போது கூட என்ன நடந்தது என்று முழுதாக தெரியாது. பயந்திருந்தாள். அடி எங்காவது பட்டிருக்கிறதா என்று கேட்டபோது இல்லை என்றாள்.

வண்டி மேலே விழுந்ததில் இடது காலில் மட்டும் வலி. உள்காயம். தவிர உடல் முழுதும் வலி. பிறகுதான் முழூ கதையும் தெரிந்தது. நடந்த சம்பவத்தை கேட்டபோது காயம் நிச்சையம் அதிகம்தான் ஆனால் இவள் மறைக்கிறாள் என்று தோன்றியது. ஆனால் அவல் எதையும் அப்படி மறைக்கவில்லை என சீக்கிரமே கண்டறிய முடிந்தது.

வேகம் எடுத்த வண்டி சற்று சாய்ந்தபடி ஒரு வீட்டை நோக்கி திரும்ப, அதன் சுவரின்மீது போய் மோதி கீழே விழுந்திருக்கிறது. இவளும் வண்டியின் அடியில் சென்று சிக்கியிருக்கிறாள். நல்லவேளை. நேராக சென்றிருந்தால் பாதி தூரம் உடல் தெய்ந்து பல காயங்கள் உண்டாகி இருக்கும். அம்மாதிரி எதுவும் நடக்காதது ஒரு பக்கம் ஆருதலாக இருந்தது.

அன்று இரவே சகஜ நிலைக்கு வந்திருந்தாள். அதைப்பற்றி அவள் நினைத்துக்கொண்டிருக்க கூடாது என்று அவளை மட்டும் கூட்டிச் சென்று அன்றிரவு வரவேற்பு காணொளியை அலைபேசியில் பதிவிறக்கம் செய்து காட்டிக்கொண்டிருந்தேன். பிறகு அது மற்றவர்களாலும் பார்க்கப்பட்டது.

மோஹன்ராஜ் புகைப்படங்களை கேட்டிருந்தான். அவனுக்கு திருமணம் மற்றும் வரவேற்பு புகைப்படங்களை அனுப்பிவிட்டிருந்தேன். வாட்சப்பில் பேசிக்கொண்டிருந்தபோது சரண்யா அக்காவும் அனுப்ப சொன்னார். வாட்சப்பில் கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பினேன். அளவு பெரிதாக இருந்ததால் முழூ காணொலியை இருவருக்கும் அனுப்ப இயலவில்லை. அதனால் மாண்டேஜை மட்டும் அனுப்பினேன்.

மாண்டேஜ் என்பது மொத்த காணொளியில் இரண்டு அல்லது இரண்டறை நிமிட தொகுப்பு. சரண்யா அக்காவுக்கு அதை அனுப்பும்போதுதான் ஒரே புலம்பல்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அந்த காணொளியில் இடம்பெற வேண்டிய பாடல்களை தேர்வு செய்து அனுப்பும்படி நிஷாந்த் கேட்டிருந்தார். நமக்கு விருப்பமான பாடல்களை அனுப்பலாம். இல்லையென்றால் புகைப்படக்காரர்களின் விருப்பத்துக்கே விட்டுவிடலாம்.

அண்ணனின் வரவேற்புக்கு அவர்கள் விருப்பத்துக்கே விட்டுவிட்டேன். எனது வரவேற்பு காணொளிக்கு மட்டும் சில பாடல்களை தேர்வு செய்து அனுப்பினேன். எந்த பாடல் இருந்தாலும் இல்லையென்றாலும் அந்த ஒரு பாடல் மட்டும் காணொளியில் இருக்கவேண்டும் என்றும் இரண்டறை நிமிட மாண்டேஜில் அது கண்டிப்பாக இடம்பெறவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.

முதலில் அனுப்பியதாலேயோ என்னவோ. பாடல் விட்டுப்போயிருந்தது. மாண்டேஜிலும் இல்லை மொத்த வீடியோவிலும் இல்லை. நிஷாந்திடம் கேட்டபோது மாண்டேஜின் டெம்போவிற்கும் அந்த பாடலின் டெம்போவிற்கும் ஒத்துவரவில்லை என்று குழுவினரில் ஒருவர் சொன்னதாக சொன்னார்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். எனது திருமண வரவேற்பை பொருத்தவரையில் எனக்கு இருந்தது ஒரு சில ஆசைகள்தான். ஒன்று தோழி சுவேதாவின் வருகை. பயணச்சீட்டெல்லாம் பதிவு செய்துவிட்டு கடைசி நேரத்தில் வராமல் போய்விட்டார்.

அடுத்து கிஷோரின் முன் கூட்டிய வருகை. வந்திருந்தால் அவனுடன் ஒரு அறை மணி நேரமாவது தனியாக பேசி செலவிட்டிருக்கலாம். நடக்கவில்லை. அடுத்து மேடையில் தீக்க்ஷண்யாவை தூக்கிக்கொண்டு ஒரு புகைப்படம். ஆளாலுக்கு தூக்கிக்கொண்டு திரிந்தார்களே தவிர எங்கள் கைக்கு குழந்தை வரவில்லை.

மற்றொன்று வரவேற்பு நிகழ்ச்சியின் காணொளியிலும் மாண்டேஜிலும் அந்த பாடல். அந்த பாடலை எத்தனையோமுறை அந்த காணொலியில் இருப்பது போல் கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். ஆனால் அதுவும் நிறைவேறவில்லை.

அந்த பாடலை எப்படியாவது புகைப்படங்களுடன் இணைக்கவேண்டும் என்று ஒரு சில செயலிகளை தரவிறக்கம் செய்திருந்தேன். பார்வை இல்லாததால் அது கொஞ்சம் பெரிய வேலை என தெரியும். அடுத்தநாள் அர்ச்சனாவை வைத்து செய்து கொள்ளலாம் என நினைத்தேன்.

சரண்யா அக்காவிடம் பாடலைப் பற்றி சொல்லிப் புலம்பும்போதுதான் என்ன பாடல் என்று கேட்டார். கண்டுபிடிக்க சொன்னேன். க்லூ கொடுக்க சொன்னார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வந்த ஒரு முக்கிய நடிகரின் பாடல் என்றேன். அந்த படத்தில் வேறொரு பாடல் செம ஹிட் என்றேன். அந்த க்லூ பத்தாது என்று எனக்கும் தெரியும். இசை அமைப்பாலர், பாடகர், ஆண், பெண் என்றவாறு க்லூ கேட்டார்.

எளிமையாக கொடுத்தால் கண்டுபிடித்துவிடுவார் என்று எண்ணி கொஞ்சம் சூசகமாக க்லூ கொடுத்தேன்.
”மியுசிக் டேரக்டர் வெய்ட் கொரச்சிட்டாரு ஆனா சிங்கருக்கு நல்லா வெய்ட் கூடிரிச்சாம்.” என்று ஒரு யூட்டியுப் சேனலில் வந்த பின்னூட்டத்தை க்லூவாக கொடுக்க அடுத்த நொடியே இசை அமைப்பாளரின் பெயர் வந்து அலைபேசியில் விழுந்தது. அதில் நான் ஆச்சர்யம் ஒன்றும் படவில்லை. கண்டு பிடிக்க முடிந்ததுதான் என்று நினைத்தேன்.

சரியா என்று கேட்டுவிட்டு அடுத்த க்லூ கேட்பார் என நினைத்தேன். ஆனா பெண்ணா என்று நான் சொல்லாமலேயே பாடகரின் பெயரும் வந்து விழுந்தது வாட்சப்பில். பாடலையும் கண்டு பிடிச்சிடுவாரோ என்று யோசிக்கும்போதே பாடலின் பெயர் வந்து சேர்ந்தது. அவ்வளவுதாண் கதை முடிந்தது. பிறகு அவர் கேட்டபடி எல்லா புகைப்படங்களையும் அனுப்பி முடித்தேன். டெலிகிராமாக இருந்தால் வேலை எளிதில் முடிந்திருக்கும். வாட்சப் என்பதால் கொஞ்சம் தாமதம் ஆனது.

அதற்கு அடுத்த நாளே நண்பரின் மகளுக்கு மஞ்சல் நீராட்டு விழா இருந்ததால் நான் அப்பா மற்றும் அர்ச்சனா மூவரும் அவர்கள் அழைத்ததின் பெயரில் சென்றோம். திரும்பி வரும்போது ஒரே மழை. வீடு வந்து சேர்ந்தபோது சரண்யா அக்காவிடமிருந்து எங்கள் இருவருக்கும் குருஞ்செய்திகள் வந்திருந்தன.

திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் முக்கியமானவற்றை தொகுத்து அந்த பாடலோடு இணைத்து காணொளி போல் அனுப்பி இருந்தார். அர்ச்சனா ஆச்சர்யப்பட்டு போனாள்.  எனக்கு அதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. என்றாவது ஒருநாள் சரண்யா அக்கா இதை செய்வார் என்று தெரியும். ஆனால் ஒரே நாலில் அந்த காணொளியை அனுப்புவார் என்று எதிர்பார்க்கவில்லை.

அவர் அனுப்பவேண்டும் என்று எண்ணி எல்லாம் அவரிடம் இந்த பாடல் விஷையத்தை பகிரவில்லை. எல்லாவற்றையும் பகிர்வது போல அதையும் பகிர்ந்தேன். இது அவருக்கும் தெரியும். அனுப்பிவிட்டு அடுத்தக் குருஞ்செய்தியில் “நல்லா இருக்கா.” என்று கேட்டார்.
Video from Evangelin Saranya  
 அர்ச்சனாதான் சரண்யா அக்கா தொகுத்திருந்தப் புகைப்படங்களை விவரித்தாள். நன்றாகவே தொகுத்திருந்தார். செயலியை தரவிறக்கம் செய்துவிட்டு நான் எந்தெந்த புகைப்படங்களை ஒன்றிணைத்து அந்தப்பாடலுடன் சேர்க்க விரும்பினேனோ அவை அனைத்தும் அப்படியே தொகுக்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டிருந்தன.

இதற்கிடையில் அந்த பெயர் குறிப்பிட விரும்பாத பெண்ணைப்பற்றி அம்மா சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். நாங்கள் பேசவில்லை என்பதுதான் அவரது வருத்தம். முகூர்த்தக்காலுக்கு வந்து சென்றபோதே பேசிவிடலாம் என்று கூட ஒருநொடி நினைத்தேன். நான் பேசினால் எல்லா பிரச்சினைகளும்  தீர்ந்துவிடும்.

ஆனால் அது அப்படி தீரக்கூடாது. ஒரு பார்வையற்ற கணவனாய் நான் எனது வாழ்வில் வெற்றிபெறாமல் அந்தப் பெயர் குறிப்பிட விரும்பாத பெண்ணிடம் சென்று பேசுவதில் பயணில்லை என்று தோன்றியது. அந்த பிரச்சினையைக் காலம் ஒருநாள் தீர்க்கும்.

இரண்டாயிரத்து இருவது வந்தது. பொங்கலுக்கு அத்தை வீட்டுக்கு நான், அர்ச்சனா, அண்ணா, லோகேஸ்வரி மற்றும் தீக்‌ஷண்யா ஆகிய ஐவரும் சென்றிருந்தோம். பொதுவாக அங்கு சென்றால் மிகவும் போரடிக்கும். ஆனால் அந்த நான்கு நாட்களும் போனதே தெரியவில்லை.

அப்போதுதான் அந்த வீட்டின் வெளிப்புரம் எனக்கு பயமின்றி பரிட்சையமாயிருந்தது. வீட்டைவிட்டு வெளியே வந்தால் எது எங்கிருக்கும் என்று தெரியாது. நாயோ பூனையோ ஆட்டுக்குட்டியோ கன்றுக்குட்டியோ படுத்திருக்கும்.

குளியலறையும் கழிப்பறையும் வெளியேதான். எப்போதாவது பாம்பு நடமாட்டமும் இருக்குமாம். ஆனால் வீட்டுக்கு கொஞ்ச தூரத்தில் இருக்கும் புலிய மரத்தின் காலியான பின்புரத்திலோ பொந்துகளிலோதான் இருக்கும் என்றார்கள். அவ்வளவு சீக்கிரத்தில் அங்கு வராது என்றாலும் வராது என்று அவ்வளவு சீக்கிரத்தில் சொல்லிவிட முடியாது.

எப்படி இருந்தாலும் நள்ளிரவில் அவசர தேவைக்கு வெளியே எழுந்து தனியே சென்றுவிட்டு உள்ளே வந்து படுக்கும் அளவிற்கு அந்த வீட்டை பழகி இருந்தேன்.

விடுமுறையை முடித்து  வீடு திரும்பி அடுத்த வாரமே ஜனவரி இருவத்து நான்காம் தேதி சரண்யா அக்காவை பார்க்க நானும் அர்ச்சனாவும் அப்பாவோடு கிளம்பி இருவத்தி ஐந்தாம்தேதி கண்ணியா குமரிக்கு அருகே உள்ள அவரது வீடு இருக்கும் கீழமனக்குடியை அடைந்தோம்.

ராசாத்தி ஆண்டியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் வீட்டில் தங்கி அவர்களுக்கு சிரமம் கொடுக்க கூடாது என்றுதான் முதலில் நினைத்தோம். ஆனால் ஒரு சில யோசனைகளுக்கு பின் அவர்கள் வீட்டிலேயே தங்கினோம். அத்தை வீட்டை தவிர்த்து பார்த்தால் அங்குதான் எங்களுக்கு முதல் விருந்து அரங்கேறியது.

பிறகு அங்கு அன்று மதியம் முழுதும் அக்காவுடனும் பெஸ்கி அன்கிலுடனும் நானும் அப்பாவும் பேசிக்கொண்டிருந்தோம். அர்ச்சனா அமைதியாய் இருந்தாள். கையிலிருந்த மோதிரத்தை சரண்யா அக்காவிடம் காட்டினேன். ”கழட்டாத” என்றார் அக்கா. அவர் கையால் அதை ஒருமுறை எனக்கு அணிவிக்க வேண்டும் என்பதால்தான் கழட்டினேன். ஆனால் அவரிடம் சொல்லவில்லை. எனது கையிலிருந்து மோதிரத்தை வாங்கி மீண்டும் கையில் அணிவித்தார்.

அன்று மாலை நால்வரும் கடற்கறையில் நடந்தோம். சுனாமியின் சுவடுகள்  அந்த நிலத்திலும் அவர்களின் நினைவுகளிலும் இன்னும் நீங்காமல் இருந்தன. அன்று மாலை அவர்கள் மாதாவின் தேர் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து இரவு உணவை உண்டோம்.

ஜனவரி இருவத்து ஆறாம் தேதி சரண்யா அக்காவுடன் சேர்ந்து நாங்கள் மூவரும் அங்கிருக்கும் இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு அவரை வீட்டில் விட்டுவிட்டு சென்னைக்கு கிளம்பலாம் என்று நினைத்திருந்தேன். விருப்பமிருந்தாள் அன்கிலையும் ஆண்டியையும் கூட அழைத்துக்கொண்டு உற் சுற்றலாம் என்று நினைத்தோம்.

ஆனால் சமீபத்தில் இறந்து போயிருந்த சரண்யா அக்காவின் பாட்டிக்கு அன்றைய தினம் ஏதோ சடங்கு செய்யவேண்டி இருந்ததால் எங்களுடன் அவரால் வர இயலவில்லை. அவ்வளவு தூரம் அர்ச்சனாவை அழைத்து கொண்டு போய்விட்டு சுற்றிப்பார்க்காமல் வருவதும் சரியாக இருக்காது என்று தோன்றியது.

வீட்டிற்கு வந்து தன்னோடே இருப்போம் என்று அக்கா நினைத்திருக்கிறார். ஓய்வில்தானே இருப்பார் அனைவரும் வெளியே சென்று சுற்றிப்பார்க்கலாம் என்று நான் நினைத்திருக்கிறேன். வெவ்வேறு கோணத்தில் யோசித்திருக்கிறோம். இரண்டு தரப்பிலும் வருத்தம்தான். பிறகு அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்த இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு  அன்று மாலை கிளம்பி ஏற்கனவே பதிவு செய்திருந்த ரயிலில் ஏறி அடுத்தநாள் வீடு வந்து சேர்ந்தோம்.

ஜனவரியின் இருதியில் நீலகண்டன் அண்ணாவுக்கு திருமணம். அன்றைய சூழ்நிலை காரணமாக தூரமாக இருந்ததால் செல்ல இயலவில்லை. எங்களுக்கு திருமணமான ஒரே வாரத்தில் ராஜாவுக்கு திருமணம் ஆகி இருந்தது. சம்பர்தாயப்படி மாங்கல்யம் பிரித்து கோர்க்கும்வரை இன்னொருவரின் திருமணத்திற்கு  செல்லக்கூடாது என்றார்கள். நான் மட்டும் செல்கிறேன் என்றாலும் ஒற்றையாக செல்லக்கூடாதாம். அதனால் செல்லவில்லை. கடலூரில் இருக்கும் அமர்நாத்தின் திருமணத்திற்கும் செல்ல இயலவில்லை.

ஃபிப்ரவரி மாதத்தின் முதல் பாதியில் நானும் அர்ச்சனாவும் சிலமுறை சென்னை செல்லவேண்டிய தேவை இருந்தது. போகும்போது அண்ணனோடும் திரும்பும்போது நாங்கள் இருவருமாய் வீடு வந்து சேர்வதுமாய் இருந்தது. ஃபிப்ரவரி ஒன்றாம் தேதிதான் நாங்கள் இருவர் மட்டும் தனியாக உணவகத்தில் உணவு சாப்பிட வாய்ப்பு கிடைத்தது.

அந்த நாட்கள் மிக முக்கியமானவை. என்னை தனியாக கூட்டிச் செல்ல அவளும், அவளோடு பயணிக்க நானும் எங்களை பழக்கப்படுத்திக்கொண்டிருந்தோம்.

ஃபிப்ரவரி இரண்டாம் பாதியில் வடமாநில சுற்றுலா. பாலு மாமாவால் வழக்கம் போல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான், அர்ச்சனா, அப்பா மற்றும் அம்மா ஆகியோர் ஃபிப்ரவரி பதினெட்டாம் தேதி கிளம்பி இருவத்து நான்காம் தேதி வீடு வந்து சேர்ந்தோம். வந்த இரண்டு நாட்களில் சந்தேகத்தின் அடிப்படையில் அர்ச்சனாவை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதாய் இருந்தது.

அர்ச்சனா கருவுற்று இருந்தாள்.

அது அவளுக்கு மூன்றாவது மாதம். செப்டம்பரில் தேதி கொடுத்திருக்கிறார்கள். உரவினர்களுக்கு செய்தியை தெரிவித்தோம். இந்த இடத்தில் ஒன்று மட்டும் பதிவு செய்யவேண்டியுள்ளது.

எங்களின் திருமணத்தை முன்னின்று நடத்தியவர்களிலும் முதல் இரவு சடங்குகளைமுன்னின்று செய்தவர்களிலும்  பெரும்பாலானோருக்கு குழந்தை பாக்கியத்தில் பிரச்சினை இருந்தது. சிலருக்கு தாமதமாக குழந்தை பிறந்தது. சிலர் அதற்காக போராடிக்கொண்டிருக்கின்றனர். யாரையும் காயப்படுத்த நான் இதை இங்கு குறிப்பிடவில்லை. உண்மையிலேயே வேறொரு காரணத்துக்காகத்தான் குறிப்பிடுகிறேன்.

நிறைய பொது நிகழ்ச்சிகளில் நான் பார்த்திருக்கிறேன். கேள்விப் பட்டிருக்கிறேன். குழந்தைப்பேறு இல்லாதவர்களை பொதுநிகழ்ச்சிகளிலும் சபையிலும், சடங்குகளிலும் கேவலமாக நடத்தும் பழக்கம் நிறைய மனிதர்களிடம் இருக்கிறது. குறிப்பாக சொந்தக்காரர்கள். அப்படி  அவர்களைக் கேவலமாக நடத்தும் மனிதர்களைக் காட்டிலும் கேவலமானவர்கள் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது.

தனக்கு குழந்தை இருப்பதால் அது இல்லாதவர்களுக்கு வார்த்தைகலாலும் தனது ஈவு இறக்கமற்ற செயல்களாலும் வலி தந்து சந்தோஷ படுபவர்கள் பாவிகள். எந்தக் காலத்திலும் எவராலும் மண்ணிக்கமுடியாத பாவிகள். அவர்களை மனிதர்களாய் கருதுவது கூட ஒரு பெரும்பாவம்.

தாய்மை என்பது அங்கீகாரம் அல்ல. அது ஒரு குணம். இயர்க்கையிலேயே உருவாகி இருக்கும் குணம். சுயநலமற்ற நற்குணம். பிறரின் பிள்ளையையும் தன் பிள்ளையாய் பாவிக்கும் பெருங்குணம். அது கர்பப் பையில் இருந்து உருவாவது அல்ல. இதையத்திலிருந்து உருவாகும் இணையில்லா குணம்.

குழந்தை பெற்றுவிடுவதால் மட்டும் ஒரு பெண்ணுக்கு தாய்மை குணம் இருப்பதை என்னால் நம்பமுடியாது. அது இல்லாதவர்களிடமும் தாய்மை என்னும் குணம் இருக்கும் என்பதற்கு பல சான்றுகள் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கின்றன. சமூக அடையாளங்களைத் தாண்டி அதற்கென்று ஒரு தனித் தகுதி இருக்கிறது என்றுதான் கருதுகிறேன்.
”என் மகள கல்யாணம் பண்ணிக்கப் போரவன் இவளுடைய கைய பிடிச்சிட்டு போரவனா இருக்கனும். அவனுடைய கைய இவ பிடிச்சிட்டு போரா மாதிரி இருக்க கூடாது.” என்று சுயநலமாய் சிந்தித்த ஒரு பெண்ணின் தாயிடம் என்னால் காணமுடியாத தாய்மையை
”நீ போயி அவன நல்லா பாத்துக்கனும்.” என்று அர்ச்சனாவிடம் சொல்லி அவளை பார்வைத்திறன் குறையுடைய எனக்கு திருமணம் செய்துவைத்த எனது அத்தையிடம் கண்டேன்.

”நாங்க வரலனா நடக்குர கல்யாணம் நடக்காம போயிடுமா?” என்று கேட்டவரிடம் என்னால் காண இயலாத தாய்மையை
எங்களைத் தங்கள் பிள்ளைகள் போல் என்ணி எங்களின் திருமணத்தை இருதிவரைக்கும் நின்று நடத்திய ஒவ்வொருவரிடமும் கண்டேன்.

தாங்கள் பட்ட வலியை இவர்கள் படக்கூடாது என்று வேண்டிக்கொண்டு எங்களின் முதல் இரவுச் சடங்குகலை ஏற்பாடு செய்தவர்களிடம் அந்தத் தாய்மையைக் கண்டேன்.

கடவுளின் அனுக்கிரகமும் நாங்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்த ஒவ்வொரு நல்ல மனிதர்களின் அந்த மனங்களும்தான் இன்று எங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுகொண்டிருக்கிறது.

ஒரு மனிதனுக்கு உடல் ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ, வாழ்வியல் ரீதியாகவோ சமூக ரீதியாகவோ கோடி குறைகள் இருக்கலாம். ஆனால் மனம் நன்றாக இருக்கவேண்டும்.

எனது திருமணத்தை முன்னின்று நடத்திய மனிதர்களிடத்தில் அந்த நல்ல மனம் இருந்தது. நாங்கள் அதை மட்டும்தான் பார்த்தோம். மனதைப்பார்த்து பழகும் உரவுகள் காலம் கடந்து நிலைக்கும். மற்றதைப்பார்த்து நாடிச்செல்லும் உரவுகள் காலப்போக்கில் காணாமல் போகும்.

ஒரு மனிதரிடத்தில் நல்ல மனதிருந்தால் போதும். அதைத்தாண்டி ஒரு மண்ணும் தேவையில்லை. அப்படி அவர்களிடம் இருந்த அந்த மனம் அர்ச்சனாவிடமும் இருந்தது.

எனது திருமணத்தைப் பொருத்தமட்டில் எனக்கு வரும் பெண்ணைப்பற்றி ஒருசில கற்பனைகள் இருக்கத்தான் செய்தது. பெண் உயரமாக இருக்கவேண்டும், தமிழ் பெண்ணாக இருக்கவேண்டும், திருமணத்திற்கு முன்பே இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்தவளாக இருக்கவேண்டும், சமைக்கத் தெரிந்திருக்கவேண்டும், முன் கோவம் இல்லாதவளாக இருக்கவேண்டும், எப்போதாவதுதான் அழுபவளாக இருக்கவேண்டும், உரவினர் அல்லாத பெண்ணாக இருக்கவேண்டும் என்றெல்லாம் யோசித்துவைத்திருந்தேன்.

ஆனால் இதற்கெல்லாம் நேர்மாறாய் இருந்தாள் அர்ச்சனா. அதே சமையம் எனக்கு வருபவள் துனிச்சல் மிக்கவளாக இருக்கவேண்டும், என்னிடம் உண்மையாக இருக்கவேண்டும், ரகசியம் காப்பவளாக இருக்கவேண்டும், என்னிடம் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையானவளாக இருக்கவேண்டும், என்னை முழுமையாய் நேசிப்பவளாக இருக்கவேண்டும், யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் பார்வைத்திறன் குறையுடையவனாகிய என்னை தன்னிச்சையாக ஏற்றுக்கொள்பவளாக இருக்கவேண்டும், என்னை நம்புபவளாக இருக்கவேண்டும் என்றும் நினைத்திருந்தேன்.

அதுதான் அர்ச்சனா. அதனால்தான் என் வாழ்வில் அர்ச்சனா.

திருமணத்திற்கு முன்பு ஜூலை இருவத்து இரண்டாம் தேதி இரண்டாயிரத்து பத்தொன்பதில் மாமாவுக்காகவும் அத்தைக்காகவுமெல்லாம் என்னைத் திருமணம் செய்ய சம்மதம் சொல்லவேண்டாம் என்று நான் அர்ச்சனாவிடம் சொல்லியபோது அதற்காகவெல்லாம் தாம் சம்மதிக்கவில்லை என்றும் அது தனது விருப்பம்தான் என்று சொன்னவள் இன்னொன்றையும் சொன்னாள்.

தனக்கு என்மீது நம்பிக்கை இருப்பதாக தெலுங்கில் சொன்னபடி அந்த இடத்தைவிட்டு எழுந்து சென்றாள்.

அந்த நம்பிக்கைதான் எங்கள் திருமணத்தின் தொடக்கப்புள்ளி.
ஒரு பார்வை உள்ள பெண்ணுக்கு ஒரு பார்வைத்திறன் குறையுடைய ஆணின்மீது ஏற்பட்ட நம்பிக்கையால் உருவானதுதான் இந்த திருமணம் என்னும் அத்தியாயம்.

நன்றி.

விளக்க உரை.

முதலில் இந்தப் பதிவை தொடர்ந்து படித்து ஆதரவு தந்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள். திருமணம் ஆகிவிட்டது. அதைக்குறிப்பிடும் வகையில் பெயருக்கு ஒரு பதிவை போட்டு விடுவோம் என்றுதான் முதல் பதிவை எழுதினேன். அதை முடிக்கும்போதுதான் தெரிந்தது இது முடியாது என்றூ. எனக்காக ஆரம்பித்து கடைசியில் யார் யாருக்காகவோ தொடர்ந்தது. இது எங்கு போய் முடியும் என்று எனக்கும் தெரியாமல்தான் இருந்தது.

திடீரென்று ஒருநாள் இந்தத் தொடர் பதினைந்து அத்தியாயங்களாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. அதற்கு காரணம் திருமணம் நடந்த நேரம் காலை ஆறு இருவத்து ஏழு. 6:27. கூட்டினால் பதினைந்து வரும்.
6+2+7=15.

அதே மாதிரி திருமணத்தேதி ஒன்று பதினொன்று இரண்டாயிரத்து பத்தொன்பது. 01/11/2019. அனைத்தையும் ஒற்றை இலக்கு எண்களாக கூட்டினாலும் பதினைந்து வரும்.
0+1+1+1+2+0+1+9=15.

இந்த காரணம் நகைச்சுவையாக கூட இருக்கலாம். ஆனால் காரணமே இல்லாமல் ஏதோ ஒரு அத்தியாயத்துடன் முடிப்பதற்கு காரணத்தோடு பதினைந்து அத்தியாயங்களோடு முடிப்பதில் திருப்தி கொள்கிறேன் நான். இந்த காரணம் என்னளவில் முக்கியமானது. எனக்கு மிகவும் நெருக்கமானது. ஆனால் நான் எண்ணியபடி பதினைந்து அத்தியாயங்களாக இது உருபெற்றிருக்கிறது என்பதை என்னைத்தாண்டிய நிகழ்வாகத்தான் கருதுகிறேன்.

இந்த தொடரைப் படித்த எனது நண்பர்கள் சிலர் நான் அனைத்தையும் வெளிப்படையாக எழுதுவதாக சொன்னார்கள். நிச்சையமாக இல்லை. இதில் சொல்லப்படாத  ரகசியங்கள் நிறைய இருக்கின்றன. எதெல்லாம் எனது குடும்பத்தைத் தாண்டி எல்லோருக்கும் தெரிந்திருந்ததோ அதெல்லாம்தான் இதில் எழுதப்பட்டிருக்கிறது. சுவாரசியத்துக்கு ஆசைப்பட்டு எந்த ஒரு ரகசியத்தையும் இந்த பதிவு தன்னுள் கொண்டிருக்கவில்லை. யாருக்கும் தெரிய கூடாது என்று நான் நினைத்த எதையும் இதில் எழுதவில்லை.

அதே சமையம் சுவாரசியத்தைக் கூட்டவேண்டும் என்பதற்காகவெல்லாம்  பொய்யாகவும் கற்பனையாகவும் எதையும் எழுதவில்லை. இதில் இருப்பவை எல்லாம் உண்மையே. இதைப்படிக்கும் பட்சத்தில் எனது உரவினர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. சிலரால் எனக்கு பிரச்சினைகள் வரவும் வாய்ப்பு உள்ளது. பார்த்துக்கொள்ளலாம்.

என்னைக் காயப்படுத்தியவர்களைத் திரும்பவும் பதிலுக்கு எழுத்தின் மூளம் காயப்படுத்தவேண்டும் என்று நினைக்கவில்லை. என்னைப்பொண்ற பார்வையற்றவர்கள் தங்களது வாழ்வில் சந்திக்கும் மனிதர்களிடம் சுதாரிப்புடன் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் படைப்பு.

இதில் வாசகர்களாக பங்கு கொண்ட ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள். ஒருவர் பெயரை எழுதி இன்னொருவரை மறந்தால் தவறாகப் போய்விடும். அதனால் எனது நன்றியை ஒவ்வொருவரும் அவர்களுக்கானதாய் எடுத்துக்கொள்ளுங்கள்.

குறிப்பாக நான் இந்த வலைதலத்தில் பதிவெழுத ஆரம்பித்ததிலிருந்து சுமார் ஆறு ஆண்டுகளாய்த் தொடர்ந்து படித்து பின்னூட்டம் அளித்துவரும் நண்பர் நேவிசுக்கும் நண்பர் ஃபெர்னாண்டோவிற்கும் எனது தனிப்பட்ட நன்றிகள். இப்போதாவது அவர்கள் இருவரைப் பற்றி குறிப்பிடவில்லை என்றால் எனக்கு நிம்மதி இருக்காது.
யோசிக்காமல் தற்செயலாய் தோன்றிய தலைப்புதான் இந்த திருமணம் என்னும் அத்தியாயம். தலைப்பின் காரணம் கருதிதான் முற்றும் என்று எழுத மனம் வரவில்லை. அதனால்தான் முடிந்தவுடன் நன்றி என்று குறிப்பிட்டிருந்தேன்.

விளக்க உரையை இன்னும் விளக்கமாய் அடுத்த வாரம்தான் பதிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் பதினைந்து, பதினைந்தாகவே இருக்கட்டும்!

10 comments:

  1. வாழ்த்துக்கள் அண்ணா சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் எழுதி முடித்த இந்த தேதி மற்றும் மாதத்தை கொட்டினாலும் 15 வருகிறது தொடரட்டும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் அண்ணா சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் எழுதி முடித்த இன்று ஜீரோ ஒன்பது ஜீரோ ஆறு இவற்றை கூட்டினாலும் 15 வருகிறது வாழ்த்துக்கள் தொடரட்டும்

    ReplyDelete
  3. தம்பி வினோத் மிகவும் அருமையாக பகிரப்பட்டது உங்களுக்கும் உங்கள் அன்பு மனைவிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் முதல் அத்தியாயம் முதல் பதினைந்தாம் அத்தியாயம் வரை படித்து முடித்து விட்டேன் மிக மிக அருமை

    ReplyDelete
  4. தம்பி வினோத் 15 அத்தியாயங்களையும் படித்து முடித்துவிட்டேன் மிக மிக அருமை அருமையாக பதிவிட்டு இருக்கிறீர்கள் உங்களுக்கும் உங்களுடைய அன்பு மனைவி அர்ச்சனாவுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அனைத்தையும் படித்து பின்னூட்டம் அளித்ததற்கு மிக்க நன்றி மேடம். உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.

      Delete
  5. மனநிறைவான பதிவு. முழுதாகவும் சிறப்பாகவும் பதிவிட்டமைக்கு நன்றி. உங்களுக்கும் உங்கல் மனைவிக்கும் வாழ்த்துகள். மற்றவை என் வழக்கமான ஊடகத்தில்.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் வினோத். அருமையான பதிவு. பின்னூட்டம் அளிக்கிற நேரத்தைக்கூட வீணாக்காமல் அடுத்த அத்தியாயத்திற்கு போக வேண்டியதா இருந்தது. க்லூ கொடுத்தபோதே நானும் அந்தப் பாடலை கண்டுபிடிச்சிட்டேன். எனக்கும் ரொம்ப பிடித்த பாடல் பாடகர்கள்.

    ReplyDelete
  7. மிக்க நன்றிகள் வினோத் சுப்பிரமணியம் தோழரே உங்களது அனைத்து பதிவுகளையும் படித்தேன் மிகவும் அருமையாக இருந்தது நன்றிகள் பல

    ReplyDelete
  8. அருமையாக எழுதி இருக்கிரீகள் ஒரே நாளில் அனைத்தையும் படித்து முடித்தேன்
    அதுக்கப்புறம் நீங்கள் திருமணம் செய்ய நினைத்த உங்களுடைய தோழி அந்த பார்வை குறைபாடு உடைய பெண்ணை பற்றி எதுவுமே சொல்ல வில்லையே?
    அதன்பிறகும் உங்களுடன் நட்பு தொடர்ந்த தா திருமணத்திற்கு அழைத்தீர்களா வந்தார்களா


    உங்களுக்கு வளச்சி வளச்சி பெண் கொடுப்பதற்கு முன்வந்திருக்கிறார்கள் கொடுத்து வைத்தவர் நீங்கள்


    ஒரு சின்ன வருத்தம் தான் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது
    பார்வையற்ற ஆணை திருமணம் செய்து கொள்ள ஒரு நார்மல் பெண் முன் வருகிறாள் ஆனால் பார்வையற்ற பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு பார்வையற்ற ஆண்களே முன்வருவது சற்று குறைவாகவே தான் இருக்கிறது இதைவைத்து பார்க்கும் போதும் பெண் பெருந்தன்மையானவர் ஆகவே இருக்கிறாள்

    ReplyDelete

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube