08 July 2020



கடந்த ஜூன் இருவத்து இரண்டாம் தேதி அன்று நானும் ரிஷியும் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தோம். மத்தியில் எனது அலைபேசிக்கு நான் முன்பே பதிவு செய்து வைக்காத எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது.

நான் அந்த நேரத்துக்கு எடுக்கவில்லை. இருந்தாலும் உடனே திரும்ப அழைத்தேன். பொதுவாக தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் அநேகர் எடுக்க மாட்டார்கள். பலர் திரும்பவும் அழைக்க மாட்டார்கள்.

ஆனால் நான் அதற்கு நேர் எதிர். தெரிந்த எண்களில் இருந்து வரும் அழைப்புகளைக்காட்டிலும் தெரியாத எண்ணிற்கு கொஞ்சம் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். தேவையில்லாத அழைப்புகள் என்றால் துண்டித்துவிடலாம். ஆனால் ஏதோ ஒரு தேவைக்காகவும் சந்தேகத்திற்காகவும் அழைக்கப்படும் அழைப்புகளுக்கு குறைந்தபட்ச மதிப்பைக் கொடுத்துவிடவேண்டும். அது தெரியாதவர்களாக இருந்தாலும் சரி தெரிந்தவர்களாக இருந்தாலும் சரி திரும்ப அழைத்துவிடவேண்டும்.

முடிந்த அளவிற்கு இருவத்துநான்கு மணி நேரத்துக்குள் ஏதாவது ஒருவகையில் பதில் அளித்துவிடவேண்டும் என்பது எனது நிலைப்பாடு. அப்படி ஒருவேளை நான் திரும்ப அழைக்கவில்லை என்றால் நான் அந்த அழைப்பை கவனித்திருக்கமாட்டேன் என்று புரிந்துகொள்ளவும்.

விடுபட்ட அழைப்புகளிலும் சிலரின் அழைப்பு கீழே சென்றுவிடும். அப்படியாக ஒன்றிரண்டு தவருவதுண்டு. ஆனால் அன்று தவரவில்லை. ஆட்டத்தின் நடுவே அந்த தெரியாத எண்ணைத் திரும்ப அழைத்தபோதுதான் தெரிந்தது அது ரிஷியின் அப்பா என்று. தனது இன்னொரு எண்ணிலிருந்து அழைத்திருக்கிறார்.

அவர் பெயர் ஸ்ரினிவாசன். சென்ஸ் இண்டர் நேஷ்னல் இந்தியா என்னும் பார்வைத்திறன் செவித்திறன் என்ற இரண்டிலும் குறைபாடு உடையவர்களுக்கான தன்னார்வத் தொண்டு நிருவணத்தில் வேலை செய்துக் கொண்டிருக்கிறார். அடிக்கடி வெளியூர் வெளி நாடுகளுக்குச் சென்று செவி மற்றும் பார்வை சார்ந்த இரட்டைக் குறைபாடு உடையவர்களுக்கு வகுப்பு எடுக்கக்கூடியவர். செவித்திறன் குறையுடையோர்களில் பலரால் வாய்ப்பேசவும் இயலாது என்பதை இங்குப் புரிந்து கொள்ளவும். ஆகையால் ஸ்ரினிவாசன் அன்கிலுக்கு மாற்றுத்திறனாளிகளைப் பற்றிய நல்ல புரிதலும் உளவியல் ரீதியான அனுபவமும் அதிகம்.

ஹெலென் கெல்லரின் பிறந்தநாளை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பார்வை மற்றும் செவித்திறன் குறையுடையவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஏதேனும் செய்யவேண்டும் என்ற முனைப்பில் அந்த நிருவனம் இறங்கி இருப்பதையும் அதற்காக தான் ஒரு காணொளியை உருவாக்கவிருப்பதாகவும் அதில் எனது பங்கைத் தரமுடியுமா என்றும் அலைபேசியில் கேட்டார். நான் சரி என்று சொல்லிவிட்டேன்.

மெஸ்ஸெஞ்சர் ஆன் சைக்கில் என்பதுதான் அந்த ஈவண்டின் பெயர். அதன்படி நான் மிதிவண்டி ஓட்டுவது போல் ஒரு காணொளியை எடுத்து அவர்களுக்கு அனுப்பவேண்டும். ஹெலென் கெல்லரின் ஏதாவது ஒரு வாக்கியத்தையும் அதோடு சேர்த்து “வீ சப்போர்ட் டெஃப்ப்லைண்ட்னெஸ் (we support deafblindness)” என்று காணொளியில் சொல்லவேண்டும் என்பதுதான் ஸ்ரினிவாசன் அன்கிலின் திட்டம் .

ஏற்கனவே ரிஷியையும் ஸ்ரி வித்யாவையும் வைத்து காணொளிகள் எடுக்கப்பட்டுவிட்டன. ஸ்ரி வித்யா ரிஷியின் தங்கை.

அந்தத் திட்டத்தின்படி அன்று மாலை ஐந்து மனிக்கு நான் தயாராகிவிட்டிருந்தேன்.  மிதிவண்டியைக் கொடுத்தார்கள். எனக்குத்தான் ஓட்டத்தெரியாதே! இதற்குமுன் மிதிவண்டி ஓட்டிய அனுபவம் இருக்கிறதா என்று கேட்டார்கள்.

முன்னிருக்கும் ஸ்டேரிங்கை யாரையாவதுப் பிடிக்கச் சொல்லிவிட்டு பெடலை மட்டும் பல கிலோமீட்டருக்கு மிதித்திருக்கிறேன் அவ்வளவுதான். அப்போதெல்லாம் பின்னால் அண்ணனோ மாமாவின் மகன் வெங்கடெசனோ அல்லது நண்பண் விவேக பிரியனோ இருந்தார்கள். ஆனால் இந்த மிதிவண்டியில் பின்னால் கேரியரே கிடையாது.

புகைப்படமாக இருந்தால் நகைச்சுவை நடிகர் வடிவேலைப்போல் ஸ்டேண்டைப் போட்டபடியே ”அந்த நாள் முதல் இந்த நாள் வரை மனிதன் மாறிவிட்டான் சைக்கிலில் ஏறிவிட்டான்.” என்று பாடியபடியே நம்மால் முடிந்தளவிற்கு மிதித்துவிட்டு இறங்கிக்கொள்ளலாம்.

ஆனால் இது காணொளியாயிற்றே! மிதிவண்டி நகரவேண்டுமே! பெடலில் கால் வைத்தாலே விழுந்துவிடுவோமோ என்ற பயமெல்லாம் எனக்கில்லை. ஏனென்றால் அதுதான் உண்மை. நிச்சையம் விழுந்துவிடுவேன் என்று எனக்கு எப்போதோ தெரியும்.

மிதிவண்டியை மிதித்தால்தான் நகருமா என்ன? உட்கார்ந்தபடியே தள்ளிக்கொண்டுப் போனால் கூட நகரும்தானே. மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டுப் போவதில் எல்லாம் எனக்கு அனுபவம் உண்டு.  வண்டியில் அமர்ந்தபடி, வண்டிக்கு பக்கவாட்டில் நின்றபடி, வண்டியின் பின்னால் இருந்தபடி என்று எல்லா வகைகளிலும் தள்ளிக்கொண்டு போயிருக்கிறேன். அதனால் அது ஒரு பெரிய ப்ரச்சினையாகத் தெரியவில்லை எனக்கு.

நான் தயாராகிக் கொண்டேன். பின்னிருக்கையில் யாரேனும் இருந்தால் ஸ்டியரிங் கண்ட்ரோலை அவர்களிடம் கொடுத்துவிட்டு மிதிக்கலாம். இப்போது சோலோ பர்ஃபார்மன்ஸ். ஹெலென் கெல்லரின் வாக்கியம் ஒன்றை எனக்குச் சொன்னார் அன்கில். நான் யோசித்தேன். மிதிவண்டியை ஓட்டும்போது அதைச் சொல்லுவதைக் காட்டிலும் மிதிவண்டியின் முன்பு அதை எழுதி வைத்துவிட்டால் இன்னும் கவர்ச்சியாக இருக்க வாய்ப்புள்ளது என்றேன். அந்த ஒரு யோசனை மட்டும்தான் நான் அந்த காணொளிக்காக அளித்தப் பங்கு. அந்த இடத்தில் எனது அந்த யோசனையை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். உடனே ஸ்ரினிவாசன் அன்கில் அதைக் கணினியில் ஏற்றி அச்செடுக்க உள்ளே சென்றார்.

சரி அவர் வரும்வரை என்னை மிதிவண்டியை ஓட்டிக்கொண்டிருக்கச் சொன்னார்கள். ரிஷி பக்கவாட்டில் ஸ்டியரிங்கைப் பிடித்தபடி  என்னோடு ஓடிவந்துக் கொண்டிருந்தான். அதுதான் பக்கத்தில் ஆள் இருக்கிறானே! நான் மிதித்துக் கொண்டிருந்தேன். அந்தத் தெருவை ஒரு மூன்றுமுறைச் சுற்றிவந்துக் கொண்டிருந்தோம்.

நீங்கள் வேகமாய் மிதித்தால் கூட ரிஷி உடன் ஓடிவருவான் என்றாள் ஸ்ரி வித்யா. அவளுக்கு அவளது அண்ணனை ஓடவிடுவதில் ஒரு அலாதி இன்பம். சரி நானும் முயர்ச்சித்துப் பார்த்தேன். நான் வேகமாய் மிதித்தபடி மிதிவண்டியை ஓட்ட அவனும் பக்கவாட்டில் ஸ்டியரிங்கைப் பிடித்தபடி என்னுடன் ஓடிவந்துக் கொண்டிருந்தான். அவனது சம்மதத்திற்குப் பிறகுதான் மிதிவண்டியை வேகமாய் செலுத்தினேன்.

எனக்கு ஓட்டுவதில் எல்லாம் ப்ரச்சினை இல்லை. ஆனால் பேலென்ஸ் வராது. பழகப் பழக வந்துவிடும் என்றான் ரிஷி. வீடு வந்தது. ஸ்ரினிவாசன் அன்கில் அச்சிடப்பட்டப் பிரதியுடன் வெளியில் வந்தார்.  அதை மிதிவண்டியின் முன்பக்கத்தில் இருக்கும் ஸ்டியரிங்கில் செருகினார்.

பக்கவாட்டில் இருந்த ரிஷி வண்டியை விட்டுவிட்டுப்  பின்னே நகர்ந்தான். ஸ்ரிவித்யாவும் ஷர்மிலா ஆண்டியும் சற்று தொலைவில் நின்று கொண்டனர்.

மிகச்சிறியக் காணொளிதான். ஒரு சிறிய தூரத்தைக் கடக்கவேண்டும். நான் மிதிவண்டியின் மீது அமர்ந்தபடி காலின் கட்டைவிரலை தரையில் வைத்து லேசாக அழுத்தி முன்னுக்குத் தள்ளினேன். வண்டி நகர்ந்தது. ஒரு இரண்டுமுறை. அவ்வளவுதான். மூன்றாவதுமுறைக்குள் தூரத்தைக் கடந்தேன். பிரேக்கைப் பிடித்து வண்டியை நிறுத்தினேன். அவர்கள் வீட்டு வாசலில் இருந்து எங்களது வீட்டு வாசலுக்கான ஒரு சிறு காணொளிப் பயணத்திற்கான ஒத்திகை முடிந்தது.

இனி டேக்தான். கிளம்பும்போதும் முடிக்கும்போதும் சைக்கிலிலிருந்த மணியை அடிக்கச் சொன்னார் அன்கில். நான் சரி என்றேன். அவர்ஸ்டார்ட் என்றார். அது கியர் சைக்கில். எனக்குத்தான் பெடல்கூடத் தேவைப்படவில்லையே. பிறகு அது எந்த சைக்கிலாக இருந்தால் நமக்கென்ன. நம்மால் முடிந்ததைச் செய்வோம். மிச்சத்தை வாசன் அன்கிலும் வாசகங்களும் பார்த்துக்கொள்ளட்டும் என்று நினைத்துத் தயாரானேன்.

முதல் டேக் எடுக்கப்பட்டது. ஸ்டார்ட் என்றார். மணியை அடித்துக் கிளம்பினேன். கடைசியில் பிரேக் பிடித்து நிறுத்தினேன். நான் சைக்கிலை ஓட்டியபடி முன்னே நகர ஒரு குறிப்பிட்ட இடைவேளியில் தனது அலைபேசியில் காணொளியை எடுத்தபடி ஓடிவந்துக்கொண்டிருந்தார் வாசன் அன்கில்.

முதல் டேக்கில் அவரது அறிவிப்பு ஏதோ ஒன்று காணொளியில் பதிவாக இரண்டாவதுமுறை இன்னும் தெளிவாக எந்த சத்தத்திற்கும் இடம் கொடாமல் காணொளியை எடுத்து முடித்தோம். காணொளி நன்றாக வந்திருந்ததாகச் சொன்னார்கள். அதை அப்படியே எனக்கு அனுப்பி எனது முகநூல் பக்கத்தில் #MOC2020 என்று ஹேஷ் டேக் செய்து பதிவிடச் சொன்னார் ஸ்ரினிவாசன் அன்கில். நானும் பதிவிட்டேன்.

அலைபேசியில் அதைப்பற்றிய விளக்கத்தைத் தட்டச்சுச் செய்வதில் சிரமம் இருந்ததால்  மடிக்கணினியில் கொஞ்ச நேரம் கழித்து எழுதி அப்டேட் செய்தேன். அவ்வளவுதாண். வேலை முடிந்தது.

கடந்த ஞாயிறு மாலை நான் எனது மாடிக்குச் சென்று கொண்டிருந்தபோது அவரது மாடியிலிருந்து எதையோ அலைபேசியில் கேட்டபடியே “கேக்குதா?” என்று கேட்டார் ஸ்ரினிவாசன் அன்கில். முதலில் யாரைக் கேட்கிறார் என்று கூட நான் கவணிக்கவில்லை. பிறகுதான் புரிந்தது என்னைத்தான் கேட்டிருக்கிறார் என்று. என்னவென்று விசாரித்தபோதுதான் சொன்னார் எனது காணொளிக்கு இரண்டாவது பரிசு கிடைத்திருக்கிறது என்று.

அந்த அறிவிப்பைத்தான் அவரது அலைபேசியில் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார். இன்னொருமுறை எனக்காக அந்த அறிவிப்பை அலைபேசியில் ஒலிக்கச் செய்தார். முதல் பரிசுக்கு யாருடைய பெயரையோ அறிவித்துவிட்டு பிறகு செகண்ட் பிரைஸ் கோஸ் டு வினோத் சுப்பிரமனியன் என்றார்கள். அதிர்ச்சியாக இருந்தது.

இதற்கெல்லாம் பரிசு கொடுப்பார்கள் என்றுச் சத்தியமாய்த் தெரியாது. அதுசரி. அவருக்கே முதலில் தெரியாதாம். பிறகுதான் மூன்று பரிசுகள் என்று தகவல் வந்ததாம். ஆனால் தற்போது ஆறு சிறந்த காணொளியைத் தேர்ந்தெடுத்துப் பரிசுகளை அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.

ஃபேஸ்புக்கில் ஏற்றப்பட்ட முழூ நிகழ்ச்சியையும் எனக்கு  அனுப்பினார். நான் முழுதாய்ப் பார்த்தேன். மொத்தம் 91 காணொளிகள் அனுப்பப்பட்டிருந்தனவாம். அதில் ஆறைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதில் என்னுடையது இரண்டாவதாம். கேட்கும்போது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

நான் ஏதோ ஒரு அனுபவத்துக்காகச் செய்தது வெகுமதியைக் கொடுத்திருந்திருக்கிறது. அடுத்தநாள் எனது மின்னஞ்சலைக் கேட்டார் ஸ்ரினிவாசன் அன்கில். கொடுத்த மூன்று நிமிடங்களுக்குள் ஐநூறு ரூ மதிப்புடைய அமேசான் கிஃப்ட் வௌச்சர் சென்ஸ் இன்டர்நேஷ்னல் இந்தியாவின் வாயிலாக எனது மின்னஞ்சலுக்கு வந்து சேர்ந்தது. அதை எனது அமேசான் கணக்கில் சேர்த்துக்கொண்டேன்.

பரிசை அறிவித்த கணத்திலிருந்து எனக்குத் தோன்றியது ஒன்று மட்டும்தான். சைக்கிலை இயக்கியது மட்டும்தான் நான். ஆனால் இந்தத் திட்டத்தை தீட்டி அதை செயல்படுத்தி அதில் பங்கேற்ற என்னையும் இயக்கியது ஸ்ரினிவாசன் அன்கிலின் மூளை. இப்போது புரிகிறதா சட்டை யாருடையது என்று?

அந்த கிஃப்ட் வௌச்சரை அப்படியேதான் வைத்திருக்கிறேன். தனியாகப் பயண்படுத்திக்கொள்ள விருப்பமில்லை. இந்தப் பதிவைப் படிக்கும் வாசகர்கள் யாராக இருந்தாலும் சரி. உங்களுக்கு மிகப் பிடித்த அல்லது உங்கள் வாழ்வை மாற்றிய ஏதேனும் நல்ல புத்தகம் இருந்தால் சொல்லுங்கள். அப்படியே விமானம் ஓட்டவும் எலிகாப்டர் ஓட்டவும் ஆள் தேவைப்பட்டால் சொல்லி அனுப்புங்கள். தரையில் கால் வைத்தபடியே கச்சிதமாய் ஓட்டிவிடலாம்.

9 comments:

  1. super sir
    but

    சைக்கிளும் எனதில்லை.

    ReplyDelete
  2. அந்த கிஃப்ட் வௌச்சரை

    ரிஷி மற்றும் ஸ்ரி வித்யாவுக்கு
    ஏதாவது வாங்கி கொடுத்திடலாம்.

    ReplyDelete
  3. சூப்பர், வாழ்த்துக்கள்.
    சட்ட யாருடையதா இருந்தா என்ன?
    சினிமால இயக்குனர் இயக்குர பொம்மைகளான ஹீரோக்கள் 70 கோடி 115 கோடி னு சம்பளம் வாங்கலயா.
    கம்பெனிக்கு அழகிய ரிசெப்ஷ்ஷனிஸ்ட் மாதிரி சைக்கிள் ஓட்டிய பார்வையற்ற முகம் தான் முக்கியம்.

    ReplyDelete
  4. நல்ல பதிவு. ஆனா இன்ஸ்டன்ட்டா யோசிக்கிர உங்க ஐடியா வேறலெவல்.

    ReplyDelete
  5. உங்க பரிசுக்கு முன்னாடி காமெடியா எதும் போட மனசு வரல. வாழ்த்துக்கள். மகேஷ் சொன்னதுபோல அந்த நேரத்துல உங்ககூட இருந்தவங்களுக்கு கொடுக்கலாம்.

    ReplyDelete
  6. அனுபவத்தை அருமையாக பகிர்ந்துள்ளீர்கள். பரிசு தொகைக்கு காரணமானவர்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள். அதுவே மிகுந்த திருத்திகரமானதாக அமையுமென கருதுகிறேன்.

    ReplyDelete
  7. அருமையாக எழுதறீங்க

    ReplyDelete

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube