26 May 2020



மேடையில் இருந்தபடி அர்ச்சனாவின் கண்ணீர் அவளது கண்ணத்தை அடைந்திருந்தது. உரவினர் கூட்டம் மேடையை அடைந்திருந்தது.
எதுக்கு அழர?” என்று அவர்கள் கேட்டது என் செவியை அடைந்திருந்தது.

அப்போதுதான் எனக்குத் தெரியும் அவள் அழுதுகொண்டிருக்கிறாள் என்று. பார்வைத்திறன் குறையுடையவர்களுக்கு இதுமிகப்பெரிய சவால். சொல்லப்போனால் ப்ரச்சனை என்று கூட சொல்லலாம். அருகிலிருப்பவர்கள் சத்தமின்றி சிந்தும் புன்னகைக்கும், விசும்பலும் தேம்பலும் விம்மலும் இல்லாமல் அமைதியாய் சிந்தும் கண்ணீர் துளிகளுக்கும் பார்வைத்திறன் குறையுடையவர்களிடம் பெரும்பாலும் எதிர்வினை வராது. அதை எம் போன்றவர்களால் அறிய முடியாது. ஏனென்றால் சத்தம்தான் எங்களுக்கு எல்லாம்.

இல்லை என்றால் மூன்றாவது மனிதர் கடந்து செல்லும்போது “எதுக்கு உங்க பக்கத்துல இருக்கவங்க அழராங்க?” என்று கேட்க கூடும். ஒரு சிலரின் கண்ணீரை நான் அப்படித்தான் அறிந்திருக்கிறேன்.

ஆனால் மேடையில் அர்ச்சனாவின் கண்ணீருக்கான கேள்வி நேரடியாக அவளிடமே சென்றது. எல்லோரும் கேள்வி கேட்டார்கள் எனினும் நான் கேள்வி ஏதும் கேட்காமல் காரணத்தை மட்டும் யோசித்துக்கொண்டிருந்தேன்.

காரணத்தை விடாமல் கேட்டுக்கொண்டிருந்தார் அம்மா. ”அழுதா மேக்கப் கலஞ்சிரும். அப்புரம் ஃபோட்டோவுல நல்லாவே இருக்காது.” என்றார் கூட்டத்தில் மேடை ஏறி இருந்த ஒருவர்.
”சரியான பாய்ண்ட். இப்போ வரும்பார் பதில்.” என்று மனதுக்குள் நினைத்து கொண்டேன். பதில் வந்தது. பின்னாடியே நீரும் குளிர்பாணமும் வந்தது. அவள் மட்டும் குடித்தாள். நான் அழுத பிள்ளையே கூல் ட்ரிங்ஸ் குடிக்கட்டும் என்று எண்ணி வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

அர்ச்சனா காரணத்தை சொன்னபோதுதான் அங்கிருந்தவர்களுக்கு நிம்மதி திரும்பியது. அத்தையும் மாமாவும் இன்னும் விழா அரங்கை வந்து அடையவில்லை. மாலை ஆறு மனிக்கெல்லாம் வரவேண்டியவர்கள் ஏழறையை தொட்டபோதும் வராமல் இருந்திருக்கின்றனர். ஊரில் இருந்து ஆட்களை கூட்டி வருவதாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் அப்படியும் ஒன்றுமில்லை. வரவேண்டியது இவர்கள் மட்டுந்தான்.

இவ்வளவு நேரம் ஆகியும் வரவில்லையே என்ற அர்ச்சனாவின் கவலை அவ்வளவு நேர காத்திருப்புக்குப்பின் கண்ணீராய்  மாறி இருக்கிறது. அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள், திருவள்ளூரை தாண்டிவிட்டார்கள், தெருமுனையை தாண்டிவிட்டார்கள், இன்னும் சில நேரத்தில் வந்து விடுவார்கள் என்றெல்லாம் சொல்லி அவளை சமாதான படுத்தினார்கள்.

மேடை சகஜ நிலைக்கு வந்திருந்தது. அந்த மாதிரி மேக்கப் எல்லாம் போட்டுக்கொண்டு மேடையில் வந்து கண் கலங்கினால் இரண்டு ப்ரச்சனைகள் வந்துவிடும். ஐந்தாயிரம் ரூ கொடுத்து அழகு படுத்திய முகம் ஐந்தே நிமிடத்தில் காலியாகிவிடும். சில தாக்குப்பிடிக்கும். இன்னொன்று புகைப்படம். முகம் தனது பொலிவை இழந்தால் புகைப்படமும் அதன் பொலிவை இழந்துவிடும். விட்டிருந்தால் அவ்வளவுதான். நான்கு நிமிடத்தில் நாற்பதாயிரத்தை கண்ணீரில் கரைத்திருப்பாள்.

அவளைப்போலவே நானும் ஒரு குடும்பத்தை எதிர்பார்த்து கொண்டிருந்தேன். சுராஜிடம் மேடை ஏறுமுன்னமே அலைபேசியைக் கொடுத்து அவர்கள் அழைத்தால் வழிகாட்ட சொல்லியிருந்தேன். தகவல் இல்லை. விழா நடுவில் சுராஜை மேடையில் இருந்தவாறு அழைக்க சொல்லியிருந்தேன்.
”நீங்க சொன்ன ஆளுங்க கிட்ட இருந்து இன்னும் கால் ஏதும் வரல அண்ணா.” என்றான் என்னிடம் வந்து.

சுராஜ் நந்தினி அக்காவின் மகன். நான் தூக்கிக்கொண்டு திரிந்தவன். அவனது வளர்ச்சியை நேரடியாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். நன்றாக உயர்ந்துவிட்டான். இப்போது கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறான். மனதளவில் நன்கு பக்குவப்பட்டிருக்கிறாண். உதவி என்று கேட்டால் ஓடுகிறான். நண்பர்களிடம் இருக்கும் தீய பழக்கங்கள் மட்டும் தன்னை அண்டாமல் பார்த்துக்கொள்கிறான். ஒரு வேலையை நம்பிக்கொடுக்கலாம் என்ற அளவுக்கு தனது தரத்தை உயர்த்தி இருக்கிறான். அதனால்தான் அலைபேசியை அவனிடம் கொடுத்துவிட்டு ”டீல் பண்ணிக்கோ டா.” என்று சொல்லி இருந்தேன். அந்த குடும்பத்தை பற்றி மட்டும் இன்னொருமுறை சொல்லிப்பின் மேடை ஏறி இருந்தேன்.

அர்ச்சனா கண்கலங்குவதற்கும் சுராஜ் மேடை ஏறி தகவலை சொல்லும் முன்னமே சுமாரான கூட்டம் மேடைக்கு வந்து திரும்பியது. நாங்கள் மேடை ஏறிய அறை மணி நேரத்துக்குள்ளே ஒருவர் வந்தார். என்னைப்பற்றி அறைகுறையாக தெரிந்தவராகத்தான் இருக்கவேண்டும். நேர்க்கானலை ஆரம்பித்துவிட்டார்.
”நீ பேன்க்குல தான இருக்க? என்ன படிச்சு இருக்க? ஓ எம்ஃபில்லா. (M.Phil) அப்புரம் எதுக்கு பேன்க்குக்கு வந்த? னெட்டு க்லியர் பண்ணி போக வேண்டியதுதான?”
”னெட்டு க்லியர் பண்ணிட்டு உங்க வீட்டுக்குத்தான் வரனும்.” என்று வாய் வரைக்கும் வந்த வார்த்தையை விழுங்கிவிட்டு அவருக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.

உண்மையிலேயே அவர் கேட்டதில் எந்த தவறுமில்லை. ஆனால் கேட்ட த்வனியே சரியில்லை. ஏதோ அவர் காசு கட்டி என்னைப்படிக்கவைத்தது போலிருந்தது. என்னிடம் நான் ”யாருனு தெரியுதா?” என்று கேட்டவர் என்னை யோசிக்கக்கூட விடாமல் அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தார். நானும் அவர் வண்மையாக கேட்டுக்கொண்டிருந்த கேள்விகளுக்கு தன்மையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.
”எவன் டா இவன்? இந்த கொரல கேட்டமாதிரியும் இருக்கு கேக்காத மாதிரியும் இருக்கு? தெரிஞ்சவன் மாதிரியும் இருக்கான் தெரியாதவன் மாதிரியும் இருக்கான்?” என்று உள்ளுக்குள்ளே குழம்பிக்கொண்டிருந்தேன்.

அக்கரையில் அறிவுரை வழங்குபவர்கள் வேறுவிதம். அவர்களுக்கு நம் நிலைமையும் நமது குடும்பத்தின் நிலைமையும் நன்றாக தெரியும். அவர்கள் சொன்னால் கேட்டுக்கொள்ளலாம் கேள்வி கேட்டால் பதில் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் தனக்கு எல்லாம் தெரியும் என்று அறிவுரை வழங்குபவர்களை அப்படியே விட்டுவிட்டு கடந்து செல்லவேண்டும். அவரை நான் மனதளவில் கடந்து சென்றிருந்தேன். அவரும் மேடையிலிருந்த என்னைக் கடந்து சென்றிருந்தார்.

அடுத்தடுத்து ஆட்கள் வந்து கொண்டிருந்தனர். பார்வை இல்லாததால் அடுத்து யார் வருவார் என்ற சஸ்பன்ஸ் மட்டும் சம்மந்தப்பட்டவர்கள் வந்து சேரும்வரை இருந்துகொண்டே இருந்தது எனக்குள்.

ஒரு பெண்மணி குடும்பத்தோடு மேடை ஏறினார். ”என்ன ஞாபகம் இருக்கா? யாருனு கண்டுபிடி?” என்றார். ”வாய்ஸ் தெரியலயா?” என்றார்.
”ஆரம்பிச்சிட்டாங்க டா. இனி எத்தன பேரு இதே கேள்வியோட மேல வரப்போராங்களோ தெரியலயே” என்று நினைத்துக்கொண்டேன்.
அந்த குரலில் இருந்த காந்தம் என்னை ஈர்த்தது. அவர்மீது கோபம் வரவில்லை. எங்கேயோ கேட்ட குரல் என்று யோசிக்க ஆரம்பித்து விடை தெரியாமல் தோற்றேன்.
”வாய்ஸ் ஞாபகம் இருக்கு ஆனா பேர் ஞாபகம் இல்ல.” என்று உளரினேன். பெயரைச் சொன்னார். பெயர் ஞாபகம் இருந்திருக்கிறது. குரல்தான் மாறியதால் மறந்து போயிருந்தது.
”சாரி அக்கா. ரொம்ப நாளாச்சு அதுதான்.” என்றேன்.
உண்மையிலேயே மறக்க முடியாத பெண்மணிதான் அவர். அவ்வப்போது நினைத்துக்கொள்வேன். வீட்டில் விசாரித்தும் கொள்வேன். அவரின் குடும்பத்தாரை அவ்வப்போது சந்திப்பேன். ஆனால் அவரைச் சந்தித்து நாளாகிப்பொய் இருந்தது. சிறு வயதில் என்னுடன் எப்போதும் சிரித்து பேசிய குரல். என் மனதில் அந்த குரல் அப்படியே தங்கி விட்டது. ஆனால் இப்போது தனது நாற்பத்து இரண்டாவது வயதில் அவரின் குரல் இன்னும் மெருகேறி இருந்தது.

அப்படி நாளடைவில் மாறும் குரல்கள் பார்வைத்திறன் குறையுடைவர்களுக்கு மிகப்பெரிய சவால்தான்.  நீண்டநாள் கழித்து சந்திக்கும்போது கண்டறிய முடியவில்லை. பல நாட்கலுக்கு பிறகு சந்திக்கும் மனிதர்களை கண்களே அடையாளம் காண தினரும்போது வெரும் குரலை மட்டும் வைத்து கண்டறிவது சிரமம்தான்.

அந்த அக்காவாவது பரவாயில்லை. நீண்டநாள் கழித்து என்னைச் சந்திப்பதால் ”நான் யாருனு கண்டுபிடி” என்றார். மற்றபடி அது அவரது இயல்பு இல்லை.

ஆனால் சிலர் இருக்கிறார்கள். பார்வைத்திறன் குறையுடைவர்களை எப்போது பார்த்தாலும் ”நான் யாருனு தெரியுதா? சொல்லு பாப்போம்!” என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். என்னைப்போன்ற பார்வையற்றவர்களைப் பொருத்தவரையில் அவர்கள் மனசாட்சி அற்றவர்கள்.

தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு நினைவு இருக்கிறதா என்று கேட்பவர்களை பார்வைத்திறன் குறையுடையவர்கள் ஒருபோதும் மறப்பதில்லை. ஆனால் பெரும்பாலானோர் அப்படி இல்லை. அவர்கள் ஏதோ கீழடியில் தொலைந்து போன பண்டைய தமிழரின் நாகரீகம் மாதிரியும் பார்வையற்றொரெல்லாம் தொல்லியல் நிபுனர்கள் மாதிரியும். நினைத்தாலே வெருப்புதான் மிஞ்சுகிறது.

பார்த்தல் என்ற ஒரு திறனை முற்றிலுமாய்  பலி கொடுத்துவிட்டு கேட்டல், நுகர்தல் மற்றும் தொட்டுணர்தல் என்ற மூன்று திறன்களையும் முடிந்தளவிற்கு பயண்படுத்தி முன்னேற நினைக்கும் பார்வைத்திறன் குறையுடையவர்களிடம் இது போன்று முன்யோசனை இன்றி செயல்படுவது முட்டாள் தனமானது என்பதுதான் உண்மை. இம்மாதிரியான மனிதர்களை சந்திக்கும்போதெல்லாம் அந்த ஒரு சம்பவம்தான் நினைவுக்கு வரும்.

இரண்டாயிரத்து பண்ணிரண்டு ஜூலை என்று நினைக்கிறேன். நண்பண் மோஹன்ராஜின் தந்தை எதிர்பாராதவிதமாக தவறிவிட்டிருந்தார். அவர்தான் அன்று குடும்பத்தின் ஆணிவேர். நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு காரின் சக்கரங்களுக்கு அடியில்தான் அந்த கொடுஞ்சம்பவம் நடந்தேறியது. அவரது இருதிச் சடங்கிற்கு சென்றிருந்தோம். தெருவெல்லாம் அழுகுரல் கேட்டுக்கொண்டிருந்தது. தந்தைக்கு செய்யவேண்டிய இருதி கடமைகளுக்காக நண்பணை ஆயத்தம் செய்து பிறகு அழைத்துவந்து நாற்காலியில் அமரவைத்திருந்தனர். நானும் அண்ணனும் அவனைத் தொடர்ந்தபடியே வந்து பிறகு அவனது பின்னால் நின்று கொண்டோம்.

எதுவும் பேசவில்லை. அவன் விம்மிக்கொண்டிருந்தான். எங்கிருந்தோ வந்தார் அவனது உரவினர் ஒருவர்.
”மோகனே நான் யாரு? நான் யாரு மோகனே? நான் யாருனு தெரியுதா? யாருடா நானு? சொல்லுடா. நான் யாரு?” என்று விடாமல் நிறுத்தி நிறுத்தி அவனிடம் வினவிக் கொண்டிருந்தார்.

அவனுக்கு துக்கம் தொண்டைக்குள் இருந்தது. தாங்க முடியாத துயரம் நெஞ்சுக்குள் இருந்தது. நினைவெல்லாம் தன்னைவிட்டு சென்ற தந்தையின்மீது இருந்தது. அவனுக்கு பேச்சும் வரவில்லை கேட்டவரின் பெயரும் வரவில்லை.

தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்ததால் அந்த உரவினரின் பெயரை சொல்லவும்தான் முயன்றான் அவன். முடியாமல் கண்ணீர்தான் முட்டிக்கொண்டு வந்தது. நான் கடும் கோவத்துடன் பின்னால் நின்றபடி இருந்தேன். அம்மாதிரியான இடங்களில் நண்பர்களால் எதுவும் செய்ய முடியாது. சினத்தை வெளிப்படையாக காட்டினால் வேறு மாதிரியான ப்ரச்சனைகள் வரக்கூடும். கேட்டுக்கொண்டிருந்தவரை அவனது இன்னொரு உரவினர் அமைதி படுத்தி கூட்டிச் சென்றார். இம்மாதிரியான தருனங்களிலேயே இப்படி பட்ட மனிதர்களைப்பார்க்க முடிகிறது என்றால் அவர்கள் எல்லாம் மனிதர்களே இல்லை என்ற முடிவுக்குத்தான் வரமுடிகிறது.

ஆனால் எனது வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் மிகச்சிலரைத் தவிர பெரும்பாலானோருக்கு அம்மாதிரியான கேள்வி கேட்கும் வாய்ப்பை வழங்கவில்லை என்னுடன் இருந்த ராதாவும் விமலாவும். அவர்கள் வர வர இவர்களே அறிமுகம் செய்துவிட்டார்கள். அந்தக் கேள்வியை கேட்க முயன்றவர்களில் பலரைக் கலாய்த்து வரவேற்றுக்கொண்டிருந்தார் ராதா.

பார்வைத்திறன் குறையுடைய நண்பர்களும் மேடை ஏற ஆரம்பித்திருந்தனர். மேடையின் முன்புரம் இருந்த பாலு மாமா கூட்டத்தை ஒழுங்கு படுத்தி அவர்கள் சிரமமின்றி வர உதவி கொண்டிருந்தார்.  சென்னையிலிருந்து அனேகர் வந்திருந்தனர். சுகண்யா, அருண் அண்ணா, அமுதன் அண்ணா, மனி சார், இங்கில்பெர்த், மது சார், ஷன்முகம் சார், அநிதா அக்கா, விசு அண்ணா, ஏழுமலை அண்ணா, ப்ரபாகரன் அண்ணா, ராமச்சந்திரன் சார் என பலரும் இதில் அடக்கம். எத்தனை பேரை மறந்தேனோ தெரியவில்லை. மண்ணித்துவிடுங்கள். ஒவ்வொருவரும் தன் துணைக்கு ஒருவரையோ அல்லது இருவரையோ அழைத்துக்கொண்டு வந்திருந்தனர்.

நெருங்கிய நண்பர்கள் என்ற பார்வையற்றோருக்கான வாட்ஸப் குழுவில் இருக்கிறேன். இரண்டு மூன்று பேரை தவிர வேறு யாரையும் நேரில் சந்தித்ததில்லை. அழைப்பிதழ் கூட அளிக்கவில்லை. அந்த குழுவில் சுமார் பதிநைந்து பேருக்குமேல் வந்திருந்தார்கள். அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்தவனாய் அன்பளிப்புகளை பெற்றுக்கொண்டிருந்தேன்.

அதுவரை உணவு எப்படி இருக்கிறதோ என்று நான் எண்ணி பயந்து கொண்டிருந்ததை நண்பண் வெங்கடேஷ்தான் மேடைக்குவந்து உண்மை நிலவரத்தை சொல்லி தீர்த்துவைத்தான்.

வெங்கடேஷுக்கெல்லாம் அழைப்பிதழே கொடுக்கவில்லை. அதற்காகவெல்லாம் அலையவேண்டாம் என்றும் என்னிடம் சொல்லிவிட்டான். அலைபேசியில் மட்டும் தான் சொல்லி இருந்தேன். வேலூரில் இருந்து சென்னை வந்து அங்கிருந்து அவனது நண்பண் ஒருவனை அழைத்துவந்து அரங்கை அடைந்திருந்தான்.

மோஹன்ராஜ் வழக்கம்போல குடும்பத்தோடு வந்திருந்தான். தர்மபுரியிலிருந்து கிஷோர் அவனுடைய தந்தையோடு வந்து சேர்ந்தான். மொத்தமாய் ஐந்து நிமிடங்கள் கூட அவனுடன் பேசி இருந்திருக்கமாட்டேன். ஆனால் மொத்தமாய் பத்து மணிநேர ப்ரையாணம் அவனுக்கு.

முன்னமே வரும்படித்தான் கிஷோரிடம் சொல்லியிருந்தேன். கொஞ்சநேரமாவது பேசலாம் என்றேன். அவனும் சரி என்றுதாண் சொன்னான். கடைசி நேரத்தில் கிளம்புவதில் குழப்பம் ஏற்பட்டதால் நேரடியாக நிகழ்ச்சிக்கே வரும்படி ஆகிப்பொயிருந்தது.
”எனக்கு தெரிஞ்ச நம்ம ஆளுங்க யாராச்சும் வந்திருக்காங்களா அண்ணா.” என்றவனிடம் ஒரு சிலரின் பெயரை சொல்லிவிட்டு ராஜாவின் பெயரையும் சொன்னேன்.

ராஜாதான் அன்றைய இசை நிகழ்ச்சிக்கு அச்சாணி. அரங்கமே அவனது மடிக்கணினியின்மீதுதான் அமர்ந்தபடி பயணம் செய்துகொண்டிருந்தது. எனது வரவேற்புக்கு இசை நிகழ்ச்சியே வேண்டாம் என்று முதலில் நினைத்தேன்.

அது சிறிய அறை. டீஜேவும் இசைக் கச்சேரியும் காதை கிழிக்கும் என்பதால் வேண்டாம் என்றுதாண் நினைத்தேன். ஆனால் இசை இருந்தால் நன்ராக இருக்கும் என்றனர் பலர். என்ன செய்வது என யோசித்தபின் தோன்றியது இரண்டு விஷையங்கள். ஒன்று கரோக்கி வடிவிலான மெல்லிய இசை. இன்னொன்று நண்பண் ராஜா.

அலைபேசியில் அழைத்து ”முடியுமா?” என்றுதான் கேட்டிருந்தேன். மற்றதையெல்லாம் அவந்தான் பார்த்துக்கொண்டான். மண்டபத்தின் எண்ணை அவனே குகுலில் தேடி, உரிமையாளரிடம் பேசி, பிறகு என்னிடம் தொடர்பு கொண்டான்.
”இன்னைக்கு சாய்ந்திரம் அஞ்சு மணிக்கெல்லாம் உள்ள இருப்பன் டா. கூட ஒருத்தர் மட்டும் இருந்தா நல்லா இருக்கும்.” என்றான்.
எலெக்ட்ரிஷியனை பேசி அனுப்பிவைத்திருந்தோம்.

சரியாக ஆறு மணிக்கெல்லாம் தெய்வ பக்திப்பாடலுடன் திவ்யமாய் தொடங்கியது அவனது மெல்லிய கரோக்கி கச்சேரி. அதன் பிறகு மூன்று மணிநேரம் அவனது கட்டுப்பாட்டில் அனைவரின் காதுகளும் வந்திருந்தன.  இத்தனைக்கும் அவனுக்கு அடுத்தவாரம் திருமணம். ஆனாலும் வந்திருந்தான். கிஷோரும் அவனுடன் பேசிவிட்டு பிறகு சாப்பிட்டுமுடித்துவிட்டு என்னிடம் சொல்லிவிட்டு கிளம்பினான். என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்கள் சிலரும் அலுவலகத்தில் பணிபுரிபவர்களும் வந்து சென்றனர். அண்ணனின் நண்பர்களும் வந்து சென்றிருந்தனர்.

இந்த நேரத்தில் நண்பண் பால் பாண்டியிடமும் நண்பண் அமர்நாத்திடமும் நண்பண் அய்யாதுரையிடமும் பகிரங்கமாகவும் மன வருத்தத்துடனும் மண்ணிப்பு கேட்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு நான் சொல்லவே இல்லை. சொல்லியிருந்தால் நிச்சையம் வந்திருப்பார்கள். விஷையம் தெரிந்தபோது வருந்தினார்கள்.

அதுவரை வருந்திக்கொண்டிருந்த அர்ச்சனாவைப் பார்த்து
”அப்பாடா! இப்போதான் முப்பத்திரெண்டு பல்லும் மொத்தமா தெரியுது!” என்று சொல்லியபடியே  கீழிருந்து மேடையின்மீது இரண்டடி முன்னே வந்து பின் பின்னே சென்று சரசரவென்று புகைப்படங்களை எடுத்து தள்ளினார் திரு கேசவன்.

நிஷாந்தின் குழுவில் புகைப்படம் எடுக்கும் துறை திரு கேசவனுடையது. புதிதாக பார்ப்பவர்களுக்கு திரு கேசவந்தான் தலைவன் போல தெரியும். அவர் அப்படி அர்ச்சனாவைச் சொன்னதும் யாரும் சொல்லாமலேயே அர்த்தம் விளங்கியிருந்தது எனக்கு.

அத்தையும் மாமாவும் சுமார் எட்டு மணி அளவில் நிகழ்ச்சிக்கு வந்து சேர்ந்திருந்தனர். அவர்கள் எப்படியும் வரத்தான் போகிறார்கள் என்பதால் நான் பெரிதாய் வருந்தவில்லை. கோடி பேர் சூழ்ந்திருந்தாலும் தாயுக்கும் தந்தைக்கும் பின் தான் மற்றவர்கள் எல்லாம். இது அவர்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். ஆனால் அவர்கலின் இந்த நீண்டநேர தாமதம் கோவத்தை என்னுள் உண்டாக்கியிருந்தது. பிறகு கேட்டுக்கொள்ளலாம் என்று அமைதியாய் இருந்துவிட்டேன்.

எனது நினைப்பெல்லாம் இந்தியாவின் கடைக்கோடியில் நிலைத்திருந்தது. இரண்டு நாளைக்கு முன்பே சென்னை வந்துவிடுவதாக சொன்னவர்களிடமிருந்து எந்த அழைப்பும் அதுவரை வரவில்லை. நானும் அழைக்கவில்லை. அழைத்திருக்கவேண்டும் என்று தோன்றியது.

அப்பா எல்லாரையும் கடந்து என்னை சந்திக்க மேடைக்கு வந்து கொண்டிருந்தார். அப்படி என்றால் முக்கியமான தகவல் ஏதோ ஒன்று என்னை தேடி வருகிறது என்று அர்த்தம்.

”கண்ணியா குமரி காரங்க வந்துட்டாங்க.” என்றார்.
அப்பாடா என்று இருந்தது எனக்கு. சில நிமிடங்கள் கழித்து அந்த மூவரும் என்னிடம் வந்து நின்றார்கள்.

வாழ்த்தினார்கள். விசாரித்தார்கள். நானும் பதிலுக்கு விசாரித்தேன். பிறகு அவர்கள் சேர்க்கவேண்டிய அந்த அன்பளிப்பை என்னிடம் சேர்க்க தயாராகினார்கள். எனக்கு அன்று வந்த அன்பளிப்புகளிலேயே நான் முன்னமே அறிந்துவைத்திருந்த அன்பளிப்பு இது ஒன்றூதாண்.

’கொடுக்கவேண்டிய’ என்பதற்கு பதில் ‘சேர்க்கவேண்டிய’ என்று நான் குறிப்பிடுவதில் காரணம் இருக்கிறது. ஏனென்றால் அது வெரும் அன்பளிப்பல்ல. ஒருவரின் ஆறு ஆண்டு கால ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றுவதற்காகத்தான் அந்த மூவரும் என்னருகே பதற்றத்துடனும் நம்பிக்கையுடனும் நின்றுகொண்டிருந்தனர்.
அந்த அன்பளிப்பை எனக்கு அணிவித்துக்கொண்டிருந்தார் பெஸ்கி அன்கில்.
”நான் ஜபம் பண்ணிக்கிட்டே இருக்கேன்.” என்றார் அவரது மகளான சிந்தியா அக்கா.
”சரியா சேந்திச்சா? சரியா சேந்திச்சா?” என்று ஆவலுடன் கேட்டார் சிந்தியா அக்காவின் அம்மாவும் பெஸ்கி அன்கிலின் மனைவியுமான ராசாத்தி ஆண்டி.

அந்த நான்காவது நபரின் ஆறு ஆண்டு கால ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதை எனது பதிலின் மூலம் கேட்டறிய காத்துக்கொண்டிருந்தனர் பெஸ்கி அன்கிலும் சிந்தியா அக்காவும் ராசாத்தி ஆண்டியும்.

1 comment:

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube