12 May 2020



ஒரே பாய்ச்சலில் அவர்களின் காலில் விழுந்தேன். சுதாகர் சார் என்ன வாழ்த்தினார் என்றெல்லாம் சரியாக காதில் கேட்கவில்லை. விழவேண்டும் என்று தோன்றியது விழுந்தேன். அப்படியே அருள்ராஜ் சாரின் காலிலும் விழுந்தேன்.

அர்ச்சனா விழுந்தாளா என்றெல்லாம் யோசிக்கவில்லை. நான் அவர்களின் காலில் விழுவதை கூட முன்பு அவளிடம் சொல்லியிருக்கவில்லை. தவிர அவள் விழுவது பற்றியும் விழாமல் இருப்பது பற்றியும் நான் பெரிதாக எதுவும் யோசித்திருக்கவில்லை. நான் விழவேண்டும் அவ்வளவுதான். ஏனென்றால் அவர்கள் என்னுடைய ஆசிரியர்கள். தவிர கணவனாகவே இருந்தாலும் இன்னொருவரின் காலில் அவளை விழ சொல்லும் அதிகாரம் எனக்கு இல்லை.

அவ்வளவு தூரம் எனக்காக வந்திருக்கும் ஆசிரியர்களின் காலில் விழும் வரம் இன்னொருமுறை வாய்க்காது . பொதுவாக ஒரு மனிதர் இன்னொரு மனிதர் காலில் விழுவது எனக்கு பிடிக்காது. ஆனால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் விதி விளக்கு. ஒரு நல்ல ஆசிரியரின் பாதத்தைவிட புனிதமான இடம் இந்த உலகில் எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

நான் அவர்களின் பாதங்களில் விழுந்திருந்தபோது  அருள்ராஜ் சார் எனது தோளைப் பிடித்துக்கொண்டிருந்தார். திரும்பிப் பார்த்தால் அர்ச்சனாவும் விழுந்து கிடந்தாள். இருவரும் ஆசிர்வாதம் பெற்று எழுந்தோம்.

சில நிமிடங்களில் அவர்களுக்கு குளிர்பானத்தை கொடுத்திருந்தனர் எனது உரவினர்கள். அவர்களுக்கு உணவு கூட கொடுக்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்தமாக இருந்தது எனக்கு.

”காலைல ரயில் லேட் ஆயிடுச்சு. அங்கிருந்து கார் எடுத்துக்கிட்டு வர டைம் ஆயிடுச்சு.” என்றார் ஆசிரியர் சுதாகர்.
”நீங்க வந்ததே பெரிய சந்தோஷம் சார்.” என்றேன் நான்.
”பொருமையா கூட வாங்க. அங்கதான் இருப்போம்னு நீ சொன்ன.” என்றார் என்னிடம்.
நான்தாண் சொல்லியிருந்தேன். ஆனால் இவ்வளவு தாமதத்தை நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு எட்டு எட்டறைக்காவது வந்துவிடுவார்கள் என்று நினைத்தேன். அதன் பிறகுதாண் வரமாட்டார்கள் என்று நானே ஒரு முடிவுக்கு வந்தேன்.
”ஆமாம் சார். ஆனா கடகடனு கிளப்பி விட்டுட்டாங்க.” என்றேன் நான்.
”இல்ல பரவாயில்ல.” என்றவர் அர்ச்சனாவிடம் பேச ஆரம்பித்தார். அவருக்கு தெலுங்கு தெரியும் என்பதால் எளிதில் அர்ச்சனாவிடம் பேச முடிந்தது.

என்னைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். எனது குடும்பத்தைப் பற்றி எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். அவளின் உற் பேர் எல்லாவற்றையும் கேட்டு அறிந்துகொண்டிருந்தார். மற்றவர்கள் முடிந்த அளவிற்கு அமைதி காத்தோம்.

”இந்த மாதிரி இருக்கவன கல்யானம் பண்ணிக்கிட்டோமே அப்பிடினு எல்லாம் சில நேரம் தோனும். இல்லனா யாராச்சும் அப்படி தோனவெப்பாங்க. அதையெல்லாம் மனசுல போட்டு கொழப்பிக்க கூடாது. நல்ல பையன். நல்ல குடும்பம். இவனும் நல்ல வேலையில இருக்கான். நல்லா பாத்துக்குவான். நீயும் அவன நல்லா பாத்துக்கனும்.” என்றெல்லாம் தெலுங்கில் சொல்லிக்கொண்டிருந்தார்.
மற்றவர்கள் மட்டும் அருள்ராஜ் சாரிடம் அவ்வப்போது தமிழில் பேசிகொண்டிருந்தனர்.

ஆசிரியர் இருதயராஜுக்கு உடல் நிலை சரி இல்லாததால் வர இயலவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார் ஆசிரியர் அருள்ராஜ் என்னிடம். இருதயராஜ் சார் வந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றியது எனக்கு. அதே சமையத்தில் சுதாகர் சாரும் எனது உரவினர்களிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். அவ்வாறு அவர் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கும்போதுதான்
”ஒன்னும் ப்ரச்சன இல்ல சார். ரிலேடிவ் தான். அண்ணியோட தங்கச்சிதான.” என்றேன்.
”எது ரிலேடிவா? அடே இது தெரியாம இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்திருக்கேனே டா நானு. அத சொன்னியா டா நீ?” என்று சொல்லி கண்ணத்திலேயே தட்டினார்.
”இன்விடேஷன் குடுக்கும்போது சொல்லலையா சார்?” என்றேன்.
”இல்லையே ஒரு வார்த்த கூட ரிலேடிவ் நு நீ சொல்லலையே.” என்றார்.

அழைப்பிதழை அளிக்கும்போது சொல்லியிருந்திருப்பேனே? என்று தோன்றியது. ஆனால் பெண்ணைப் பற்றி எதுவும் கேட்காமல் நானாக அதை சொல்ல வாய்ப்பு இருந்திருக்காது என்று நினைத்துக்கொண்டேன். அழைப்பிதழை கொடுத்தபோது இடத்தைப் பற்றியும் எப்படி வருவது என்பது பற்றியும்தான் அதிகம் பேசிக்கொண்டிருந்தோம். ஆனாலும் யாரோ பொண்ணு நார்மலா என்று கேட்டபோது ”ஆமாம் ரிலேடிவ்.” என்று சேர்த்து சொன்னதாக ஞாபகம். ஆனால் யாரிடம் என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது சட்டென்று நினைவுக்கு வரவில்லை.

”ரிலேடிவ் நா பரவாயில்ல. நான் பெருசா எதுவும் சொல்ல வேண்டிய தேவை இல்ல.” என்றார்.
இன்னும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். கோவில் காலியாக இருப்பதாகவும் உள்ளே சென்று வரும்படியும் உரவினர்கள் அவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தனர். பரவாயில்லை என்று சொன்னவர்கள் எனது கையில் அன்பளிப்பை கொடுத்துவிட்டு கிளம்ப ஆயர்த்தமாகினர்.

”எங்களால உங்களுக்கும் லேட்.” என்றார் ஆசிரியர் சுதாகர்.
”அதனால ஒன்னுமில்ல. பத்தற பன்னண்டு ராகுகாலம். நாங்களும் கொஞ்சநேரம் கழிச்சுதான் கிளம்புவோம்.” என்றார்கள் எனது உரவினர்கள்.
அப்படியா என்று சொல்லிவிட்டு எங்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டிருந்தனர் எனது ஆசிரியர்கள் இருவரும்.

நான் என் வாழ்வில்  என்றுமே மறக்கமுடியாத நிமிடங்கள் அதன் நினைவுகளை மட்டும் என்னுள் நிலைநிறுத்திவிட்டு மெதுவாக என்னைவிட்டு நகர்ந்துகொண்டிருந்தன. அவர்கள் கிளம்பி இருந்தனர்.
நாங்களும் கொஞ்சநேரம் அங்கேயே இருந்துவிட்டு கிளம்பி காரில் ஏறி அமர்ந்தோம். இன்னும் கொஞ்சம் நினைவுகளை சேர்த்துக்கொண்டு அந்த கார் எங்கள் வீட்டை நோக்கி கிளம்பியது.

பள்ளியின் நினைவுகளும் ஆசிரியர்களின் நினைவுகளும் ஒன்றன் பின் ஒன்றாக உள்ளத்தை ஆக்கிரமித்து பின் அகன்றன. அருள்ராஜ் சார்தான் அடிக்கடி வந்து போனார். நான் ஆறாம் வகுப்பு சேரும்போதுதான் அவரும் ஆசிரியராக பள்ளியில் சேர்ந்தார். அப்போதெல்லாம் அருள்ராஜ் சார்தான் எனக்கு ஃபேவரட். பிறகு நான் மேல் வகுப்பு செல்ல செல்ல அவருடனான தொடர்பு குறைந்து போனது. என்னையெல்லாம் மறந்தே போயிருப்பார் என்றுதான் நினைத்திருந்தேன்.

ஆனால் அழைப்பிதழை கொடுக்க பள்ளிக்குள் நுழைந்தபோது என்னைப் பார்த்த அந்த கணமே
”எலே வினோத்து எப்பிடி டா இருக்க?” என்று கேட்டதிலிருந்து தனது காரில் சுதாகர் சாரை அழைத்துக்கொண்டு என்னை பார்த்து வாழ்த்த வந்ததுவரையான நினைவுகள் ஒவ்வொன்றும் நிகரில்லா இன்பத்தை நெஞ்சுக்குள் இறக்கிக்கோண்டிருந்தது. அவ்வளவு எளிதாக அந்த நினைவுகளைவிட்டு அகள இயலவில்லை என்னால்.

எனது நிலைமை இப்படி இருக்க காரில் இருந்த மற்றவர்கள் ஏதேதோ பேசிக்கொண்டும் நகைத்துக்கொண்டும் வந்துகொண்டிருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாய் பேச்சுகள் குறைந்து  கார் முழுவதும் மௌனம் குடிகொள்ள ஆரம்பித்திருந்தது. சிலர் அறைகுறையாகவும் சிலர் முழுதாகவும் உறங்கிப் போயிருந்தனர்.

அர்ச்சனா அவளது ஜடையை ஒரு பக்கமாக இழுத்துவிட்டுக் கொண்டு பின்னாள் நீட்டியிருந்த எனது கையின்மேல் தலை சாய்த்திருந்தாள். திருமணக் காலங்களில் மணப்பெண் சந்திக்கும் மிகப் பெரிய சவால் அவர்களின் பின்னந்தலையில் தொங்கிக்கொண்டிருக்கும் ஜடைதான். அதன் பாரம் அப்படிப்பட்டது. எப்போதுதாண் கழட்டுவோமோ என்று இருக்கும். கொஞ்சநேரம் கழித்து தலையை முன் பக்கமாக சாய்த்துக்கொண்டாள். அப்படி அவள் முன்பக்கமாக தலை சாய்த்தபோது சட்டென்று ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

இப்போது நாங்கள் காரில் போய்க்கொண்டிருக்கும் அதே சம்பவம்தான் அது. இதற்குமுன் நாங்கள் இருவரும் இதே மாதிரி எங்கள் வீட்டிற்கு சென்றிருக்கிறோம். ஆனால் மணமக்களாக அல்ல. அது வெரும் சம்பவம் அல்ல இவள்தான் என் வருங்காலம் என்ற குறிப்பை உணர்த்திய சமிக்னை என்பது ஆழ்ந்து சிந்தித்தபோது புலப்பட்டது.

திருப்பதியில் அண்ணனின் திருமணத்தின்போது மாமாவின் அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாததால் அத்தையும் மாமாவும் திருமணம் முடிந்த கையோடு அவரை கூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அப்போது என்னை மட்டும் சிலருடன் முன்னமே வீட்டிற்கு செல்ல சொல்லிவிட்டு அப்பாவும் அம்மாவும் அண்ணா அன்ணியோடு சுவாமி தரிசனம் செய்ய உள்ளே சென்றுவிட்டனர்.

நான், பாலாஜி அண்ணா மற்றும் எங்களோடு வீட்டிற்கு வரவிருந்த சிலருடன் காலை உணவு முடித்துவிட்டு காரில் செல்லலாம் என முடிவுசெய்துவிட்டு உணவகம் நோக்கி சென்று கொண்டிருந்தோம். போகும் வழியில் ஒருத்தி இந்த பக்கமும் அந்த பக்கமும் தனியாகத் திரிந்துகொண்டிருந்தாள். பாலாஜி அண்ணாதான் முதலில் கண்டுபிடித்தார்.
”இவ என்ன தனியா சுத்திக்கிட்டு இருக்கா?” என்று கூறியவாறே அவளை அழைத்தார். அழைத்தவுடனேயே வந்து நின்றாள் அர்ச்சனா. பிறகு அவள் சொல்லித்தான் அந்த பாட்டி விஷையம் எல்லாம் எங்களுக்கு தெரிந்தது.

அவளது சொந்தக்காரர்களோ ஊர் காரர்களோ யாரும் இருக்கும் இடம் தெரியவில்லை. என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருக்கும்போதுதாண் நான் சொன்னேன்
”பேசாம இவள கூட்டிட்டு நாம போயிடுவோம். உள்ள சாமி பாக்க போனவங்க எப்போ வருவாங்கனு தெரியாது. அதுவரைக்கும் இவள தனியாவெல்லாம் இங்க விடமுடியாது. எப்படி இருந்தாலும் மாப்பிள்ளையும் பொண்ணும் நம்ம வீட்டுக்கு வந்துதானே பொண்ணுடைய வீட்டுக்கு போகனும்? அவங்க போகும்போது இவளையும் அவங்க கூட அனுப்பிடலாம்.” என்று சொல்லிமுடித்தேன். அனைவருக்கும் சரி என்று பட்டது.

உணவை உண்டு முடித்து அர்ச்சனாவுடன் காரில் கிளம்பினோம். உண்மையிலேயே எங்களுடன் வரவேண்டிய ஆளே இல்லை அவள். குறிப்பாக என்னுடன். ஆனால் வரும்படி ஆகிப்போயிருந்தது. அப்போதும் எனது வலது பக்கத்தில் தலையை முன் பக்கமாக சாய்த்தபடி அமர்ந்திருந்தாள் அவள். இப்போதும் அதே நிலையை கண்டபொதுதான் அந்த பயணம்கூட நினைவுக்கு வந்தது.

என்னைப் பொருத்தவரையில் அப்போது நிகழ்ந்தது எந்த ஒரு சலனத்தையும் ஏற்படுத்தாத ஒரு சாதாரன நிகழ்வு. ஆனால் இப்போது அதை நினைக்கையில் இனிக்கிறது. இதே மாதிரி எங்கள் வீட்டிற்கு நானும் அர்ச்சனாவும் மணமக்கலாக ஒன்றாக பயணிப்போம் என்று நான் நினைத்திருக்கவில்லை.

நிகழும்போது மிகச் சாதாரனமாக தெரியும் பல நிகழ்வுகள் சில நாட்களுக்குக் பிறகு நினைக்கும்போது மிக இனிமையாகிப் போவதும், கசப்பான நிகழ்வுகளை நினைக்கும்போது அது அந்த நிகழ்வினைக் காட்டிலும் கசப்பாக மாறிவிடுவதும், இனிமையான நிகழ்வுகளைப் பற்றி நினைக்கும்போது அது மிக இனிமையாகவும் பேரானந்தமாகவும் மாறுவதும் எப்படி என்று தெரியவில்லை.

நிகழ்வுகளைக் காட்டிலும் அதன் நினைவுகள் கொடுக்கும் இன்பமும் வலியும்தான் மிக ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. சில நேரங்களில் இனிமையான நிகழ்வுகள் கூட கசப்பான நினைவுகளாக மாறுவதும் ஆச்சர்யம்தான்.

உதாரனமாக இனிக்க இனிக்க காதலிக்கும் காதலர்களின் அந்த காதல் முறியும் அந்த கசப்பான நிகழ்வு அதுவரையிலான இனிய நிகழ்வுகளை கூட கசப்பான நினைவுகளாக மாற்றிவிடும் வல்லமை கொண்டதாக இருப்பது ஆச்சர்யத்தின் உச்சமாகத் தோன்றியது.

அப்படி என்றால் மனித வாழ்வில் மிகவும் ஆற்றல் வாய்ந்தது எது? நிகழ்வுகளா அல்லது நினைவுகளா? நிகழ்வுகள் இல்லாமல் நினைவுகளால் எப்படி சஞ்சரிக்க முடியும்? அதே சமையம் நினைவுகளை உருவாக்க இயலாத நிகழ்வுகள் எல்லாம் பயனற்றவைதானா? ஒரு நிகழ்வு அதன் தன்மையை எப்போது நினைவுகளுக்கு கடத்துகிறது? உண்மையில் நிகழ்வுகளுக்கும் நினைவுகளுக்கும் எவ்வளவு தூரம் இருக்கும்?

”இன்னும் கொஞ்ச தூரம் தான். இதோ வந்துட்டோம். நேத்து கிளம்பும்போது பாத்த கோயிலுக்கு போயிட்டு அப்படியே வீட்டுக்கு போயிடலாம்.” என்றது பின்னால் இருந்த பாலு மாமாவின் குறல். அவர் யாரிடமோ இதை சொல்லிக்கொண்டிருந்தார். அர்ச்சனா தலை நிமிர்ந்தாள். நாங்களும் அந்த கோயிலில் இறங்கி சாமி கும்பிட்டுவிட்டு வீட்டை நோக்கி விரைந்தோம். நேரம் பண்ணிரண்டை தொட்டிருந்தது. இந்துமுறைப்படி ராகுகாலம் கடந்திருந்தது.

வீடு வந்தது. அதே வீடுதான். ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்னால் மனமகணின் தம்பியாக நானும் மணமகளின் தங்கையாக அவளும் உள்ளே நுழைந்த அந்த தருனம் இப்போது சற்றே மாறி மணமக்களாக நாங்கள் நுழைவதற்கான இடமாக மாறி இருந்தது எங்கள் வீடு. ஆரத்தி எடுத்தபின் உள்ளே நுழைந்தோம். முகூர்த்த தேங்காய் உடைக்க பட்டது. எங்களை பூஜை அறைக்கு செல்ல சொன்னார்கள். அவளை விளக்கை ஏற்ற சொன்னார்கள். ஏற்றினாள். பிறகு பாலும் பழமும் சாப்பிட சொன்னார்கள். சாப்பிட்டோம்.

உடனே நான் வேட்டி எல்லாம் கழட்டி இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தேன். அப்பாவிடம் ஆசிரியர் சுதாகர் மற்றும் ஆசிரியர் அருள்ராஜ் அவர்களுடனான சந்திப்பை பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் இருவரும் மூன்று கவர்களை கொடுத்திருந்தனர். இரண்டு அவர்களுடையது. மூன்றாவது யார் என்று கேட்டபடியே அப்பா பெயரை படித்தார்.

சகாயரானி என்று போட்டிருந்தது. எதிர்பார்க்கவில்லை. ஆசிரியை சகாயரானி எனது எட்டாம் வகுப்பு ஆசிரியை. எனக்கு மிகவும் பிடித்தநபர்.  வாழ்க்கையின் எதார்த்தங்களை போரபோக்கில் சொல்லிவிட்டு போகிறவர்.

அவருக்கும்தான் அழைப்பிதழை கொடுத்திருந்தேன். ஆனால் அவர் வருவதற்கு வாய்ப்பில்லை என்று தெரியும். அவரிடமிருந்து வந்த அன்பளிப்பு பலநூறு ஆசிர்களுக்கு சமம் என்று மட்டும் புரிந்தது.

நன்றி என்ற ஒற்றை வார்த்தையைக்கொண்டுதான் அவரின் அந்த எல்லையில்லா அன்பை என்னால் கடக்க இயலும். அதுகூட இந்த வலைப்பூவின் வாயிலாகத்தான். ஏனென்றால் அவரின் அந்த அன்பளிப்பிற்கு இணையாக வேறேதும் என்னிடம் இல்லை.

மதிய உணவு முடித்து ஒரு மூன்று மணிநேரம் ஓய்வு எடுத்துவிட்டு மறு வீடு கிளம்ப ஆயத்தம் ஆணொம். திருமணம் என்பது வெரும் தாலிகட்டியவுடன் முடிகிற சம்பர்தாயம் அல்ல. அதற்குபின் சில சடங்குகளும் முக்கியத்துவம் வாய்ந்தவைதான். அதில் முக்கியமானது மறுவீடு செல்வது.

நான் தயாராகிவிட்டு  பெல்ட்டை தேடினால் காணவில்லை. ஏதோ ஒரு பையில் வைத்துவிட்டார்களாம். தொலைத்துவிட்டார்கள் என்றுதான் நினைத்தேன். இல்லை இருக்கிறது என்றூ அடித்து சொன்னார்கள். பிறகு தேடித்தேடி ஒருவழியாக கண்டுபிடித்துவிட்டதில் எல்லா பைகளும் சுத்தமானது.

உடனே அப்பா அம்மாவிடம் ஆசிர்வாதமும் ஆயிரம் ரூ பணமும் பெற்றுக்கொண்டு காரில் ஏறி நான்கறை மணி அளவில் அத்தை வீட்டிற்கு கிளம்பினோம். எங்களோடு விமலா, தேவி சித்தி, வேனு சித்தப்பாவும் உடன் வந்தனர். ஏன் எதற்கு என்றெல்லாம் தெரியாது. எனக்கு மிகவும் பிடித்தமான பயணம் என்றால் அது முதல்முறை மறுவீடு சென்ற அந்த பயணம்தான். இன்றுவரை அதன் காரணத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் புலப்படவில்லை.

சுமார் ஏழு மணி இருக்கும். அர்ச்சனாவின் ஊர் வந்தது. அங்கிருந்த கோயிலுக்கு சென்றுவிட்டு அப்படியே அவளின் வீட்டை அடைந்தோம். அங்கும் பூஜை அறை, விளக்கு, பால், பழம் என்று அதே வகையிலான செய்முறைகள். பிறகு இரவு உணவை முடித்தோம்.

அடுத்த நாள் சனிக் கிழமை தேவி சித்தியும் வேனு சித்தப்பாவும் கிளம்ப தயாராக இருந்தனர். வந்தவேலை முடிந்து விட்டதாகவும், இனி தங்கள் வீட்டிற்கு சென்று இருக்கின்ற பணிகளை முடித்துக்கொண்டு நேராக அடுத்தநாள் வரவேற்புக்கு வந்துவிடுவதாகவும் சொல்லிச் சென்றனர். சரி என்று நாங்களும் அன்று மத்தியம் ஒரு ஆட்டோ பேசி முதலில் உணவகம் சென்றுவிட்டு பிறகு சுற்றி உள்ள கோவில்களுக்கும் அருவிக்கும் சென்றுவிட்டு அன்றுமாலை அர்ச்சனாவின் வீட்டை அடைந்தோம்.

அடுத்தநாள் வரவேற்பு. அன்று காலையே ஒரு ஒன்பது மணி அளவில் அங்கிருந்து கிளம்பி எங்களின் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தோம். நேரம் பதிநொன்றை தாண்டி இருந்தது. வரும் வழியில்தான் அன்றைய வரவேற்பு நிகழ்ச்சிக்கான விழா அரங்கு உள்ளது. பார்ட்டி ஹாலைத்தான் அப்படி குறிப்பிட்டு இருக்கிறேன். பொருத்தமான தமிழ் பெயர் இருந்தால் சொல்லுங்கள். மாற்றிக்கொள்ளலாம்.

அந்த விழா அரங்கு முதல் தளத்தில் இருக்கும். தரை தலத்தில் அலுவலகம். இரண்டாம் தலத்தில் சாப்பாட்டு அறை. மேல் மாடியில் சமையல் செய்து கொள்வார்கள். ஒரு நேரத்தில் ஒரு நிகழ்ச்சிதான் நடத்த முடியும். யாருக்காக நிகழ்ச்சி நடக்கிறதோ அவர்களின் பெயர் தாங்கிய பதாகை வெளியே இருக்கும்.

அன்றைய தினத்திற்கான பதாகையும் வெளியெ புத்தம்புதிதாக இருந்தது. சரியாக அந்த விழா அரங்கை கடக்கும்போது பதாகையில் இருக்கும் பெயரை காரில் என்னோடு வந்துகொண்டிருந்தவர்களை படிக்கச் சொன்னேன். அர்ச்சனாவும் அண்ணி லோகேஸ்வரியும் கூட்டாக பெயரை உச்சரித்தனர்.
”சுகண்யா.”
”என்னடா உங்க பேர் இருக்கவேண்டிய எடத்துல வேற யாரோட பேரோ இருக்கு?” என்று கேட்டார் உடன் வந்து கொண்டிருந்த விமலா.
ஒருமுறை மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டேன்.
அது பெயரல்ல.
அன்றைய தினத்தின் ப்ரச்சனை.

1 comment:

  1. படித்தேன். ொவ்வொரு நிகழ்வுகளும் அற்புதம்.
    அவற்றை ஒன்றன் பின் ஒஇ்றாக சொல்லிச் செல்வது பாராட்டுக்குறியது.

    ReplyDelete

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube