24 March 2020



அக்டோபர் 24 2017. நானும் அந்த பெயர் சொல்ல விரும்பாத பெண்ணும் பேசிக்கொண்டிருந்தோம்.
உங்கள் அண்ணனின் திருமணம் முடிந்த உடன் உங்கள் அண்ணியின் தங்கையான அர்ச்சனாவையும் உங்களுக்கே தருவதாக சொல்லியிருக்கிறார்களே. அவ்வாறு அவர்கள் திரும்ப உங்களிடம் வந்து கேட்டால் என்ன செய்வீர்கள்?’ என்ற மிக ஞாயமான கேள்வியை என்னிடம் எழுப்பினார் அந்தப் பெண்.

அந்தப் பெண்ணின் கேள்வியில் ஒரு பயமும் இருந்ததை என்னால் உடனடியாக உணர முடிந்தது.
அவ்வாறு ஒருவேளை என்னிடம் வந்து கேட்கும்பட்சத்தில், உன்னுடைய முடிவில் நீ உறுதியாக இருக்கும்பட்சத்தில் அவர்களிடம் நான் முடியாது என்றுதான் சொல்வேன். அப்படித்தான் சொல்லியும் ஆகவேண்டும். ஏனனில் நாங்கள் உங்களுக்கு வாக்களித்திருக்கிறோம். தவிர அவர்கள் மேலோட்டமாகத்தான் கேட்டிருக்கிறார்கள்.  இன்னும் முறைப்படி முடிவெடுக்கப்படவில்லை.

அதுமட்டுமில்லாமல் அர்ச்சனாவை திருமணம் செய்வதில் சில நடைமுறை சிக்கல்களும் இருக்கின்றன. இப்போது அர்ச்சனா படித்துக் கொண்டிருக்கிறாள். அவளின் படிப்பை கெடுப்பது என்பது என்னால் யோசித்து கூட பார்க்க இயலாத ஒன்று. எல்லாவற்றிற்கும் மேலாக நம் இருவரில் விட்டுச் செல்வது என்று ஒன்று இருந்தால் நீ என்னை விட்டுச் சென்றதாய்த்தான் வரலாறு இருக்குமே தவிர, நான் உன்னை விட்டுச் சென்று வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக வரலாரு எப்போதும் இருக்காதுஎன்றேன் அந்தப் பெண்ணிடம் நான் மிக தீர்க்கமாக. அந்தப் பெண் என்னை நம்பினார். ஆனால் எனக்கு மட்டும் அந்தப் பெண்ணின் அம்மாமீது ஏதோ ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.

நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. அண்ணனின் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அதற்கிடையில் எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் கூட ஜாதகம் பார்த்துவிட்டதாகவும், அதில் பிரச்சினை ஏதும் இல்லை என்று ஜோதிடர் சொன்னதாகவும் என்னிடம் சொன்னார் அந்தப் பெண்ணின் அம்மா. சில நாட்கள் கழித்து அந்தப் பெண்ணுக்கு அரசாங்க வேலைக்கு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்திருப்பதாகவும், அனுப்பட்டுமா? என்று என்னிடம் அந்தப் பெண்ணின் அம்மா அலைபேசியில் அழைத்தும் கேட்டார். நான் எந்தத் தயக்கமும் இன்றி, அனுப்புங்கள், சென்றுவிட்டு வரட்டும் என்று சொல்லிவிட்டேன்.

அந்த பெண்ணுக்கு நேர்முகத் தேர்வு நடந்ததா இல்லையா என்று தெரியாது. ஆனால் எனக்கு அவர்கள் வீட்டில் சில நாட்களிலேயே நடந்தது. அண்ணனின் திருமணத்திற்குமுன் பணி நிமிர்த்தமாக அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றபோது அந்தப் பெண்ணின் உரவினர்களெல்லாம் கூடி இருந்தனர்.

எனக்குத்தான் தனது பெண்ணைத் தரப் போவதாக அந்தப் பெண்ணின் அம்மா சபையிலேயெ அறிவிக்க, என்னைப் பற்றி ஏற்கனவே அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும், ஒருசில கேள்விகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ள விழைந்து அதன்படி கேள்விகளும் கேட்டார்கள். அதில் சம்பளம் முதலான கேள்விகளும் அடங்கும்.

பொதுவாக சம்பளத்தைப் பற்றிய தகவலை யாரும் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். ஆனால் அது ஏன் என்றூ எனக்கு இதுவரைத் தெரியாது. என்னைக் கேட்டால் அதை மறைப்பதால் ஒரு ப்ரியோஜனமும் கிடையாது என்றுதான் சொல்வேன் நான். கூகுலைத் தட்டினால் கூலிக்காரனிலிருந்து கொள்ளையடிக்கும் அரசியல் வாதிகள்வரை  அனைவரின் சம்பலத்தையும் தெரிந்துக் கொள்ளலாம். நானும் வெளிப்படையாகவே அவர்களிடம் இருப்பதைச் சொன்னேன்.
அங்கு வைத்தும் அந்தப் பெண்நிடம்விருப்பமா?’ என்று அவரின் உரவினர்களால் கேட்கப்பட்டது.  அந்தப் பெண்ணும் விருப்பம் என்று தான் சொன்னார். சபைக் கலைந்தது

ஆனால் அப்பாவிற்கு மட்டும் ஒரு சில ரகசியத் தகவல்கள் கிடைத்துக்கொண்டிருந்தன. “அந்த பொண்ணு விஷையத்துல கொஞ்சம் கவனமா இருந்துக்கோ பா. ரொம்ப டீப்பா போயிடாத.” என்றார் அப்பா. எந்தக் காரணத்திற்கொண்டும், மனதை மட்டும் பறிகொடுத்துவிடக்கூடாது என்பதுதான் அதன் பொருள். அந்தப் பெண் அல்ல, எந்தப் பெண்ணாய் இருந்தாலும் சரி, திருமணம்வரை உணர்வு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் என்னை இழந்து விடக் கூடாது என்று மிகத் தீர்மானமாய் இருந்தேன் நான்.
காதல் ஒரு கொடிய வைரஸ். அது ஆண் பெண் இருவரின் உடலிலும் ஒன்றாக பரவவேண்டும். ஒருவரின் உடலைவிட்டு நீங்கிநால் இன்னொருவருக்கு பாதிப்பு நிச்சயம். அதனால் அது வராமல் பார்த்துக்கொண்டால் நிம்மதி நிச்சயம்.

அண்ணனின் திருமணம் முடிந்து ஒரு மாதம் இருக்கும். அந்தப் பெண்ணின் வீட்டிற்கு யாரோ வந்து பெண் கேட்டு அதற்கு இவர்கள் சம்மதம் சொல்லியதாக உரவினர் ஒருவர் மூலமாக தகவல் வந்தது. இதன் மத்தியில் அந்தப் பெண்ணிடமிருந்து எனக்கு வரும் அழைப்புகள் நின்று போயிருந்தன. இந்தத் தகவலை அம்மாவும் அப்பாவும் உறுதி செய்ய விரும்பினர். அது உண்மைதான் என தகவல் கிடைத்தது. எனக்குத் தகவல் உண்மை எனத் தெரிந்ததும் எந்தவித இரண்டாம் கட்ட யோசனைக்கும் மனதை செலுத்தாமல் அந்தப் பெண்ணின் எண்ணை அலைப்பேசியிலிருந்து அந்த நொடியே அழித்தேன். நான் அந்தப் பெண்ணிடம் இதைப் பற்றி பேசவோ காரணம் கேட்கவோ கூட விரும்பவில்லை. யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது அவரது விருப்பம். அவரது எண்ணை அழித்தது கூட எனக்கு சம்மதம் சொல்லிவிட்டு இன்னொருவரை திருமணம் செய்ய போகிறாரே என்பதால் அல்ல. எனக்கு அதைப் பற்றி ஒரு வார்த்தையும் சொல்லாமல் செல்பவருக்கு அதற்குமேல் மரியாதை கொடுக்க எனக்கு விருப்பமில்லை. தவிர நான் அதை இழப்பாகவும் கருதவில்லை. சிறுவயதிலிருந்து அந்தப் பெண்ணின் மீது நான் வைத்திருந்த நம்பிக்கைக்கு அவர் செய்த துரோகமாகத்தான் கருதினேன்.

பெண் பார்க்கும் படலம் மொத்தம் இரண்டு கட்டங்களாக நடக்கும். முதலில் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணின் வீட்டில் கை நனைப்பர். பிறகு பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று கை நனைப்பர். சாப்பிடவேண்டும் என்பதைத்தான் அப்படிச் சொல்வார்கள். அந்த சந்திப்பிலேயே இரு வீட்டாரும் ஒருவரை ஒருவர் ஸ்கேன் செய்து கொள்வர்.

இந்தப் பெண் விவகாரத்தில் முதல் சுற்று முடிந்ததும்தான் ரகசிய தகவல் வந்தது. அவர்கள் வீட்டிற்கு தற்செயலாய் சென்ற உரவினர் ஒருவர் அதிர்ச்சியுடன் எங்களிடம் விஷையத்தை பகிர்ந்து கொண்டார். தவிர அந்தப் பெண்ணின் அம்மாவிடம் எங்களிடம் வந்து பேசிவிட்டு இன்னொருவரிடம் சம்மந்தம் முடிப்பதைப் பற்றியும் வினவி இருக்கிறார். இத்தனைக்கும் அது காதல் திருமணம் கூட இல்லை. அப்படி இருந்திருந்தால் கூட சரி என்றூ விட்டுவிடலாம். அந்த உரவினர் வினவியதற்கு அந்தப் பெண்ணின் அம்மா எனது பார்வை இன்மையை சுட்டிக்காட்டி இருக்கிறார். தவிர விஷையம் தெரிந்து கேட்ட உரவினர்கள் இடம் எல்லாம். ’உங்களுக்கு ஒரு பெண் இருந்தால் பார்வையற்றவனுக்கு கொடுப்பீர்களா?’ என்று கேட்டு இருக்கிறார். அது முன்பே தெரிந்தது தானே பிறகு ஏன் வீடேறி சென்று வாக்களித்தீர்கள் என கேட்கப் பட்டபோது, எனது மகளுக்கு அவனைப் பிடிக்கவில்லை என்று காரணம் சொல்லியிருக்கிறார்.

எங்களுக்கு அவர்கள் செய்தது அதிர்ச்சியாக இல்லை. ஆனால் சொல்லிய காரணங்கள்தான் மிக அதிர்ச்சியாக இருந்தன. முன் பின் தெரியாதவர்கள் கூட பிறர் மனம் புண்படும்படி நடந்துகொள்ள மாட்டார்கள். மிக நெருங்கிய சொந்தம் இப்படி சொன்னதுதான் என் மனதில் தீராக் கோவத்தை ஏற்படுத்தியது. உண்மையில் வேறு எத்தனையோ காரணங்களை சொல்லி இருக்கலாம். இருவருக்கும் ஜாதகம் சரியில்லை என்று சொல்லி இருக்கலாம். பெண்ணுக்கு குருபலன் முடிகிறது என்று சொல்லியிருக்கலாம். ரத்த சொந்தத்தில் திருமணம் செய்வதால் பயமாய் இருக்கிறது என்று கூட சொல்லியிருக்கலாம். சிலர் தமது மகள் புகுந்த வீட்டிற்கு பெரிய மருமகளாய் போகவேண்டும் என்று நினைப்பார்கள். அதைக் கூட காரணமாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் திரும்பத் திரும்ப எனது பார்வையின்மையைத்தான் டார்கெட் செய்தார் அந்தப் பெண்ணின் அம்மா. ஒருவேளை எனது பார்வையின்மையை சுட்டிக்காட்டாமல் இருந்திருந்தால், இந்தப் பதிவில் அவர்களைப் பற்றி எழுதி இருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

சுஜாதா எழுதிய பிரிவோம் சந்திப்போம் என்ற நாவலைப் படித்திருக்கிறீர்களா? அதேதான் இதுவும். ஆனால் அந்த நாவலில் கதாநாயகனை பெண்ணின் அப்பா மதிப்புடந்தான் நடத்துவார். ஆனாள் இங்கு அப்படி நடக்கவில்லை.

திருமணம் என்பது சொர்கத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்று இனியும் எந்த முட்டாளாவது சொன்னால் நம்பாதீர்கள். உண்மையிலேயே அது சுயநலங்களால் நிச்சயிக்கப்பட்டது. பெண் அழகாக இருக்கவேண்டும், குண்டாக இருக்கக் கூடாது, மிக ஒல்லியாகவும் இருக்கக் கூடாது, கருப்பாக இருக்க கூடாது, சமைக்கத் தெரிந்திருக்கவேண்டும், சம்பாதிக்கவும் தெரிந்திருக்கவேண்டும், வீட்டிற்கு அடங்கி நடக்கவேண்டும், மாமியார் மாமனாருக்கு பணிவிடைகள் செய்யவேண்டும், வரதட்சனைக் கொடுக்கவேண்டும், நன்கு படித்திருக்கவேண்டும், தான் இழுத்த இழுப்புக்கெல்லாம் பெண்வீட்டார் வரவேண்டும் என்பது மாப்பிள்ளை வீட்டாரின் சுயநலம் என்றால், மாப்பிள்ளை நன்கு படித்திருக்கவேண்டும், வழுக்கை இருக்க கூடாது, மிடுக்காக இருக்கவேண்டும், சொந்தமாக வீடு வைத்திருக்கவேண்டும், கை நிறைய சம்பாதிக்கவேண்டும், குறையற்றவனாய் இருக்க வேண்டும், சொந்தமாக கார் வைத்திருக்கவேண்டும், தங்களைவிட பணக் காரர்களாக இருக்கவேண்டும், மாமியார் மாமனார் உடன் இருக்க கூடாது, நாத்தநார்களின் நச்சரிப்பு இருக்க கூடாது என்பது பெண் வீட்டாரின் சுயநலம். இதை மற்றவர்கள் வேண்டுமென்றால் எதிர்பார்ப்பு என்று டீசண்டாக சொல்லிக்கொள்ளட்டும். ஆனால் திருமணத்தைப் பொருத்தமட்டில் எதிர்பார்ப்பு என்பதே சுயநலத்தின் இன்னொரு வார்த்தை அவ்வளவுதான். அதில் எப்போதும் யாரோ ஒருவர் சிக்கிக்கொள்வார். இருந்தவர்களை மறந்துவிட்டு சிறந்தவர்களைத் தேடிச் செல்லும் கூட்டம்தான் இங்கு அதிகம். அவர்களைப் பொருத்தமட்டில் நான் சிறந்தவன் அல்ல. அதனால் மறக்கப் பட்டேன்.

திருமணமண்டபங்களில் எரியும் ஒவ்வொரு அக்கிணிக்குண்டத்திலும் கண்ணுக்கே தெரியாத யாரோ ஒருவரின் இதயம் நரபலி கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கப்படும் என்பதுதான் எதார்த்தத்தில் இருக்கும் உண்மை.
நினைவுகளை விதைத்துவிட்டு நீங்கிச் செல்வது என்பது இந்தச் சமுதாயத்தின் பழக்கம். அதில் அந்தக் குடும்பமும் விதி விலக்கல்ல.

அந்தப் பெண்ணின் நிச்சயத்திற்கும் திருமனத்திற்கும் வீடு தேடி வந்து அழைத்தார்கள். அப்பா தன் கோபத்தை வெளிப்படையாகவே காட்டினார். நான் மட்டும் எந்தச் சலனமும் இல்லாமல் இருந்தேன். அவர்களைப் பார்ப்பதே பாவம் என்று கருதி உள்ளே சென்றுவிட்டேன். நான் அந்த வீட்டில் இருந்த யாரிடமும் பேச விரும்பவில்லை. இனி வாழ்க்கையில் எந்தக் கணமும் அந்தப் பெண்ணுடனும் பேசுவதில்லை என இன்னொருமுறை முடிவெடுத்தேன். அது என் கனவிலும் பிரதிபலித்தது என்பதுதாண் எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. அதன்பின் இந்த இரண்டு ஆண்டுகளில் நான்குமுறை என் கனவில் வந்த அந்தப் பெண்ணிடம் ஒருவார்த்தை கூட பேசவில்லை என்பதைக் கனவு கலைந்தபின் வியப்பாக கருதினேன். ஆழ்மனத்தின் சக்தி அபாரமானது என இன்னொருமுறைப் புரிந்து கொண்டேன்.

அந்தப் பெண்ணின் நிச்சயத்திற்குப் பின் ஒரு மாதம் கழித்து எனது அலைபேசிக்குஹைஎன்றும்சாரிஎன்றும் இரண்டு குருஞ்செய்தி வந்திருந்தது. தெரியாத எண்ணாக இருந்ததால் ட்ரூ காலரில் சென்று பார்த்தேன். பெயர் வந்தது. பிறகு அதை கண்டுகொள்ளவில்லை. அன்று இரவே வாட்ஸப்பில் ஒரு நான்கு குருஞ்செய்திகள். அதிலும் ஒரு ஹைஒருசாரி’. மீதம் இரண்டில் ஒருஎப்படி இருக்கீங்கஒருசாப்டீங்களாஅந்தப் பெந்தான் எனத் தெரியும். இருந்தாலும்மே ஐ நோ ஹூ இஸ் திஸ்?’ என தட்டச்சு செய்து அனுப்பினேன். அந்தப் பெண்ணின் பெயர் தாங்கிஅ பதில் வந்தது. திரும்ப பதில் ஏதும் அனுப்பவில்லை. எந்தவித இரண்டாம் கட்ட யோசனைக்கும் மனம் தயாராக இல்லை. உடனே ப்லாக்தான். அந்தக் குருஞ்செய்திகளை இன்னொருமுறைப் பார்த்தேன். தனது நிச்சயதார்த்தம்வரை நினைத்துக் கூட பார்க்காத ஒருத்தி இன்று ஹாயாகஹைஎன்றும் சாவுகாசமாகசாரிஎன்றும் குருஞ்செய்தி அனுப்புகிறாளே என்று தோன்றியது.

அன்று முடிவெடுத்தேன். அந்த நொடியே முடிவெடுத்தேன். எந்தப் பார்வையின்மையை காரணமாய்க் காட்டி என்னை பரிகாசம் செய்தார்களோ, எந்தப் பார்வையின்மையை காரணமாய்க் காட்டி என்னை ஏற்றுக்கொள்கிறேன் எனச் சொல்லி என்னை அவமானப் படுத்தினார்களோ, எந்தப் பார்வையின்மையை காரணமாய்க் காட்டி என்னை புறக்கணித்தார்களோ, எந்தப் பார்வையின்மையைக் காரணமாய்க் காட்டி என்னை திருமணத்திற்கு தகுதியற்றவன் என தீர்மானித்து தூக்கி தெருவில் வீசினார்களொ, அதே பார்வையின்மையுடனே இவர்கள் முன் வாழ்ந்து காட்டவேண்டும் என முடிவெடுத்தேன். அதே பார்வையின்மையுடனே ஒரு பெண்ணை கண்டுபிடித்து, ஒரு குணமுள்ள பெண்ணாய்க் கண்டு பிடித்து, அவளைக் கரம் பிடித்து, இந்த துரோகிகளின் முன்பு ஒரு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டவேண்டும் என முடிவெடுத்தேன். நாங்கள் பார்வையற்றவர்கள்தான். ஆனால் தகுதியற்றவர்கள் இல்லை என்பதை எனது திருமணத்தின் மூலமாக இவர்களுக்குத் தெளிவு படுத்தவேண்டும் என தீர்க்கமாக முடிவெடுத்தேன். அதுவரை திருமணம் என்று ஒன்றைச் செய்தால் அது எனது பெற்றோரின் மனநிம்மதிக்காகத்தான் என நினைத்தேன். ஆனால் அன்று அது என்னுடைய பேரிலக்கு என ஒரு முடிவுக்கு வந்தேன். திருமணம் என்பது மற்றவர்களுக்கு வேண்டுமென்றால் ஒரு சடங்காகவும் சம்பர்தாயமாகவும் இருக்கலாம். ஆனால் இந்த உலகத்தினரால் அதுவும் மிக நெருங்கிய உரவினர்களால் பரிகசிக்கப் பட்ட ஒரு பார்வையற்றவனுக்கு அது ஒரு சாதனை. அந்த சாதனையை அக்கிணி சாட்சியாகவும் அனைவரின் சாட்சியாகவும் செய்தே தீர்வது என்று அந்த இரவில் முடிவெடுத்தேன்.

ஆனால் காதல் திருமணம் அதற்கு எப்போதும் கை கொடுக்காது. முறைப்படி இரு வீட்டாரின் சம்மதத்துடனேதான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற நிலைப் பாட்டில் மட்டும் உறுதியாக இருந்தேன். ஒரு பெண்ணை இத்தனைக் காலமாக வளர்த்த பெற்றோரிடமிருந்து பிரித்து தனதாக்கிக் கொண்டு வாழ்வது என்பது அவர்களின் கண்ணீர் துளிகளின் மேல் துடுப்புப் போட்டுக் கொண்டு படகோட்டுவது போன்றது என்பது எனது நிலைப்பாடு. ஆங்காங்கே ஒன்றிரண்டு தவறினாலும் பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்ட திருமணமே என்னைப் போன்ற பார்வைத் திறன் குறையுடையவனுக்கு நிலையான நிம்மதியைத் தரும் என்று நம்பினேன். அதனால் அதை நோக்கியே பயணம் செய்யவேண்டும் என எண்ணினேன்.

அந்தப் பெண்ணின் திருமணத்திற்குமுன் எனது திருமணத்தை முடித்துக் காட்டவேண்டும் என அப்பா எண்ணினார். முதலில் நானும் அந்த நிலைப்பாட்டில்தாண் இருந்தேன். ஆனால் அது எதிர்பார்த்த வெற்றியைத் தராது என்று தோன்றியது. தவிர திருமணம் என்பது குருகிய நேரத்தில் ஓடி முடிக்கும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயம் அல்ல. அது தொடர்ந்து ஓடவேண்டிய மாரத்தான் போன்றது. அதில் நம்மை மிகச் சரியாக தயார் படுத்திக்கொள்ளவேண்டும். உடனே திருமணம் செய்ய எங்களிடம் போதிய பணம் இல்லை. அண்ணனின் திருமணத்திற்கே எனது கணக்கில் இருந்த முக்கால்வாசி பணத்தைச் செலவு செய்துவிட்டிருந்தேன். இப்போது எனக்காக சேர்க்கவேண்டும் என்பதால் அந்த வேலையை முதலில் தொடங்கினேன். அடுத்து பெண் பார்க்கும் படலம்.

முதலில் நான் தொடங்கி பிறகு அப்பாவைக் களமிறக்கிக் கொள்ளலாம் என்பதுதான் திட்டம். அப்பாவும் அதை ஏற்றுக்கொண்டார். மிக நெருங்கிய நண்பர்களிடம் சொன்னேன். பிறகு ஏற்கனவே திரை வாசிப்பான்கள் இம்மாதிரியான இணையதலங்களுக்கு எந்த அளவுக்கு உதவுகின்றன என்று ஆராய்வதற்காக விளையாட்டாக பதிவு செய்திருந்த தமிழ் மேட்ரிமோனியில் பணம் கட்டிச் செர்ந்தேன்.

எப்படியும் 100 சதவிகிதம் என்னை நிராகரிப்பார்கள் என்று தெரியும். இருந்தாலும் முயன்றேன். எனது முழூ ப்ரொஃபைலையும் அதில் வெளிப்படையாகப் பதிவிட்டிருந்தேன். தமிழ்நாட்டில் வரவேற்பு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. நிராகரிப்புகள்தான் அதிகம். ஒருசில மாற்றுத் திறனாளிகள் மட்டும் விருப்பம் தெரிவித்திருந்தார்கள். ஆனால் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் நிலைமை வேறுமாதிரியாக இருந்தது. ஒரு ஆறு எழூ பேர் விருப்பம் தெரிவித்திருந்தார்கள். எல்லாம் ஹைட்ரபாத் செகந்திராபாத் குண்டூர் போன்ற இடங்களில் இருந்து வந்தன. அவ்வளவு தூரத்திற்கு ஆட்களை விட்டு விசாரிப்பது என்பது இயலாத காரியமாய்த் தோன்றியது. அதற்காக முயன்றிருந்தால் கிடைத்திருக்கும் என்றெல்லாம் சொல்லவில்லை. அங்கேயும் தோற்றுப் போயிதான் திரும்பி இருப்போம். ஆனால் அவ்வளவு தூரம் எல்லாம் எனக்கு ஒத்துவராது என்று தோன்றியது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் நான் கொடுத்த அனைத்து விருப்பங்களும் வரிசையாக நிராகரிக்கப் பட்டன. இதற்கிடையில் அந்தப் பெண்ணிற்கும் திருமணம் முடிந்திருந்தது. ஆன்லைன் தேடல் கிட்டத் தட்ட முடிவிற்கு வந்திருந்தது. இனி அப்பாதான் துவங்கவேண்டும். அப்போது கூட எனக்கு அர்ச்சனா பற்றிய யோசனையெல்லாம் துளி கூட இல்லை.

ஒரு நாள் அண்ணன் அண்ணியின் அம்மா (எனது அத்தையின்) வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தான். ஊத்துக்கோட்டையைத் தாண்டியவுடன் வீட்டிலிருந்த என்னை அழைத்தாண். அழைத்து அப்போது நடந்த ஒரு சம்பவத்தை என்னிடம் அந்த நிமிடமே சோன்னான். அழைத்து அவன் சொல்லிய அந்த செய்தி நான் திருமணத்திற்காக செய்யவேண்டும் என்று நினைத்த முயற்சிகள் அனைத்தையும் ஒரே வினாடியில் தவிடுபொடி ஆக்கியது.

3 comments:

  1. சிறந்த கட்டுறை நன்பா. பெருமையாக உள்ளது. சரியான சமயத்தில் சரியாக எச்சரிக்கைகளை தந்த அறிவார்ந்த உன் தந்தைக்கும் முழு குடும்பத்திர்க்கும் எனது வணக்கங்கள். உன்னை வேண்டாம் என்று சொல்லிய அப்பெண்ணுடனும் அவள் கணவனுடனும் சிறந்த நட்புரவை மீட்டெடுக்க முயர்ச்சி செய் என்பது என் ஆலோசனை. அது கடினம் என்றாலும் சிறுவயதுமுதல் உருவான குடும்ப உரவு இச்செயலால் நிறந்தரப் பகை ஆகிவிடக் கூடாது என்பது என் எண்ணம். இவ்வளவு செய்தும் அவர்களோடு சிறந்த நட்பை பேணினால் அக்குடும்பம் தம் வாழ்நாள் முழுதும் உனக்கு சிறந்த நட்பாக இருக்கும் என்பது என் அணுமானம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா. நிச்சயமாக அண்ணா. உரவுகளை இழப்பதில் எனக்கும் பெரிதாக விருப்பமில்லை. ஆனால் நமது சுய மரியாதையையும் வெற்றியையும் நிரூபிக்க சில நாட்கள் ஆகும். அதை நிரூபிக்காமலும் அவர்கள் முன்பு சென்று நிற்க முடியாது என்பது எனது நிலைப்பாடு. எல்லாவற்றிற்கும் மேலாக காலம் வரும்போது அந்த உரவுகளை நானும் மீட்க முயல்வேன்.

      Delete
  2. ிப்படியும் ஒரு பெண் இருப்பாளான்னு ஒரு பெண்ணா எனக்கு கோவம்தான் எழுகிறது. இதே வேலைய நீங்க செஞ்சிருந்தா கண்ணு தெரியாதவனா இருக்கும்போதே இவ்வளவு திமிர்னு சொல்லுவாங்க. அதுவே கண்ணு தெரிஞ்சவங்க செஞ்சா அது நடைமுறை ஞாயமா? உங்க இலக்கு வெற்றியானதுல ரொம்ப ரொம்ப சந்தோஷம். அதுவும் அவங்க கையால நலங்கு வைக்கப்பட்டதுதான் முழு வெற்றி.

    ReplyDelete

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube