பதிவின்
தலைப்பிற்காகவும், இந்த பதிவை எழுதியதற்காகவும் நான் வசைப்பாட படலாம் என்று தெரிந்தும்,
ஒரு பார்வையற்றவன் என்ற முறையில் எனக்கும் சமூக பொருப்பு இருப்பதாக நானே
நினைத்துக்கொண்டதால் இக்கட்டுரையை எழுதுகிறேன். நீயானானா.
விஜை தொலைக்காட்சி
பலவருடங்களாக ஒளிபரப்பும் ஒரு நல்ல நிகழ்ச்சி நீயா நானா. ஆனாலும் சிலநேரங்களில் இந்த நிகழ்ச்சி
அதன் முழூ நோக்கத்தை அடையவில்லை என்றே தோன்றும். அப்படிப்பட்ட
நிகழ்ச்சிகளையும் கண்டு இருக்கிறேன். ஒருமுறை
எனது கல்லூரி பேராசிரியர் ஒருவர் ’they rarely conduct good program’ என்றார். அந்த வயதில் ‘அப்படியா?’
என்று எனக்கு தோன்றியது. அது நாளடைவில் உண்மையென்றும் தோன்றியது.
இருந்தாலும் அந்த நிகழ்ச்சி சமூகத்தில் அவ்வப்போது ஏதோ ஒரு தாக்கத்தை எற்படுத்த தவறியதில்லை
என்ற உண்மையை மறுப்பதற்கில்லை.
சமீபத்தில் (28.10.2018) அன்று ஒளிபரப்பப்பட்ட
பார்வையற்றோர்க்கான நீயாநானா நிகழ்ச்சி அந்த தாக்கத்தை சமூகத்தில் ஏதாவதொரு
விதத்தில் ஏற்படுத்தி இருக்கிறதா இல்லையா என்ற கேல்விக்கு விடை தேடும் முயற்சிதான்
இந்த கட்டுரை.
சிறு வயதிலிருந்தே
நீயாநானாவில் ஒருமுறையாவது கலந்துகொண்டு பேசிவிட வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்தது/இருக்கிறது.
அதில் ஒரு பார்வையற்றவனாக இந்த சமூகத்திற்கு நிறைய சொல்லவேண்டுமென்று தோன்றியிருக்கிறது.
திடீரென்று நான்கு நாட்களுக்குமுன்பு நண்பர்களனுப்பிய முன்னோட்டத்தை பார்த்து பார்வையற்றோர்களுக்கு
வாய்ப்பு அளித்திருக்கிறார்கள் என்று நினைத்துமகிழ்ந்தேன். நேற்றுதான் ஹாட்ஸ்டாரில்
முழூ நிகழ்ச்சியை பார்க்கமுடிந்தது.
வழக்கம்போல
திரு கோபிநாத் அவர்கள் முதல் கேள்வியை கேட்டார். ஆனால் அது வழக்கத்துக்குமாறாக சலிப்பான
கேள்வியாகத்தான் இருந்தது. அங்கேயே நிகழ்ச்சி அதன் வலுவை இழந்ததை போல உணரமுடிந்தது.
’உங்களுக்கு பிடித்த ஓசை எது’ என்ற மிக சுமாரான கேள்விக்கும் கூட ’பஸ்ல கண்டக்டர் கிழிச்சி
குடுக்குர கம்பியூட்டர் டிக்கட்டோட சௌண்டு பிடிக்கும் சாற்’ என்று ஒரு பார்வையற்றவர்
தன் பதிலால் ஸ்கோர் செய்ததுதான் கேள்விக்கு கொஞ்சமாவது உயிர் கொடுத்தது போல இருந்தது.
கிரியேட்டிவிடி என்ற பெயரில் சத்தங்களை பின்னால் ஓடவிட்டது நல்ல முயற்சி என்றாலும்
மிகவும் செயர்க்கையாக இருந்தது போல இருந்தது. வெரும் ஓசைகளை மட்டும் வைத்துதான் பார்வையற்றவர்கள்
இந்த உலகை அடையாலம் கண்டுகொள்கிறார்கள் என்ற அறியாமைதான் காரனமாக இருக்கமுடியும். அது
நிகழ்ச்சியின் தவறில்லை. ஆனால் அதற்குபதில் ‘பார்வையின்றி இந்த உலகை எவ்வாறு அடையாலம்
கண்டுகொள்கிறீர்கள்’ என்று கேட்டிருந்தால் நிகழ்ச்சியின் போக்கே வேறு மாதிரி சென்றிருக்க
கூடும்.
பிறகு இசையை
கையில் எடுத்துக்கொண்டு ஒவ்வொருவரையும் பாடச்சொல்லி கேட்டார் திரு கோபிநாத். அங்குதான்
மொத்த நிகழ்ச்சியும் சருக்கியது போல உணர்ந்தேன். சமூக வளைதலங்களிலும் அதே குற்றச்சாட்டுதான்.
நீயா நானாவில் பாடல்கள் புதிதில்லை. அவர் கேட்டது தவறில்லை. இவர்கள் பாடியதும் தவறில்லை.
அதிலும் ஒரு பார்வைத்திறன் குறையுடையவர் தனது பிள்ளைகளுக்கு பாடி காட்டும் தாலாட்டு
பாடலை பாடியதெல்லாம் வேர லெவல். பார்வைத்திறன் குறையுடைய தம்பதிகள் இசைப்பலகையை மீட்டிக்கொண்டு
பாடியதும் தங்களது காதல் வரலாற்றை ஸ்வரங்களுடன் சொன்னதும் சுகமாகத்தான் இருந்தது. அதே
சமையம் ஒரு பார்வையற்ற பெண், கப்பலில் வேலை செய்யும் தனது பார்வை குறைபாடற்ற காதலனை
பற்றி சொல்லிவிட்டு அதற்கு ஒரு பாடலையும் பாடியது கூட அழகாகத்தான் இருந்தது. காதலன்
பெயரை கேட்ட திரு கோபிநாத் அந்த பெண்ணின் பெயரையும் கேட்டிருக்கலாம். கப்பலுக்குச்
சென்றிருக்கும் அந்த பார்வையற்ற பெண்ணின் காதலரோடு அவர்களது காதலும் கரையேறிவிடும்
என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் நிகழ்ச்சிதான் நடுக்கடலில் நாதியற்று கிடந்தது போல
இருந்தது. ஏனென்றால் இசை. அதை ஓரளவுக்குமேல் தூக்கிப்பிடித்ததுதான் காரனம். பொதுவாகவே
பார்வையற்றவர்கள் இசையில் ஆர்வம் உடையவர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். இந்த உண்மையை
தெரிந்துகொள்ள நீயா நானா பார்க்க தேவையில்லை. இசை கச்சேரிகளுக்கு சென்றாலே போதும்.
பார்வைத்திறன் குறையுடைவர்கள் பாடுவதற்கு மட்டும்தான் தோது படுவார்கள் என்று மின்சார
ரயிலில் பயணம் செய்யும் ஒரு சாமான்யன் நினைக்கலாம். ஆனால் ஒரு ஊடகமோ தொலைக்காட்சியோ
நினைத்துக்கொண்டு அதை செயல்படுத்தியபோதுதான் நிகழ்ச்சி படுத்துவிட்டதுபோல் இருந்தது.
இருந்தாலும்
அடுத்த கேள்வியில் கொஞ்சம் ஆருதல் படுத்தினார் திரு கோபிநாத். ’உங்களுக்கு பார்வை கிடைத்தால்
யாரை பார்க்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?’ என்று உணர்வு பூர்வமாக கேட்டு
நிகழ்ச்சிக்கு தேவையான கண்ணீரையும் ஒரு பதிலின் மூலம் கொஞ்சம் பெற்றுக்கொண்டார். அந்த
கேள்வி சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் சிந்திக்க வேண்டியதாகத்தான் இருந்தது. ஏனனில்
அது சிலரது ஆசை சம்மந்த பட்டது. அதிலும் ஒருவர் ‘என்னைய கொற சொன்னவங்கள எல்லாம் ஒருமுற
பாத்து வெச்சிக்கனும் சார்’ என்று சொன்னதெல்லாம் சிறிப்பின் உச்சம்.
சிறப்பு விருந்தினர்கள்
மூவரை அறிமுகம் செய்து வைத்தார் திரு கோபிநாத். அதில் முதலில் பேசிய தமையந்தி அவர்கள்,
நன்றாக பேசினார்கள் என்றாலும், ஓசையைத் தாண்டி ஓரடி கூட எடுத்துவைக்கவில்லை. நிகழ்ச்சியின்
மிகப்பெரிய ஆருதல் உளவியல் நிபுனர் சங்கீதாதான். பார்வைத்திறன் குறையுடைய தம்பதிக்கு
பிறந்ததால்தான் பேச்சின் துவக்கத்திலிருந்தே பட்டையைக்கிளப்பிக்கொண்டிருந்தார்.
பார்வைத்திறன்
குறையுடையவர்களை இசைக்குள் சுருக்கிவிடாதீர்கள் என்று அவர் சொன்னதுதான் சமூக ஊடகங்களில்
இயங்கிக்கொண்டிருக்கும் பார்வைத்திறன் குறையுடையவர்களால் இந்த நிகழ்ச்சியைப்பார்த்த
பிறகு வலியுறுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. உலவியல் நிபுனர் சங்கீதா சொன்ன பிறகாவது
திரு கோபிநாத்தும் நீயா நானா குழுவும் சுதாரித்துக்கொண்டு நிகழ்ச்சியை கொண்டு சென்று
இருக்கலாம். உதாரணத்திற்கு பார்வைத்திறன் குறையுடைய தன் அம்மாதான் வீட்டில் சமைக்கிறார்
என்று சங்கீதா அவர்கள் சொன்னதும் எப்படி சமைக்கிறீர்கள் என்று அங்கிருந்த பார்வை திறன்
குறையுடைய பெண்களிடம் கேட்டிருக்கலாம். சமைக்க தெரிந்த ஒருவராவது அங்கிருந்திருப்பார்களெனில்,
அவர்களின் அனுபவத்தை கேட்டு, அதன் மூலம் அந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும்
சாதாரன சமைக்கத்தெரியாத பெண்களுக்கு ஊக்கமளித்திருக்கலாம். அவர்கள் வீட்டில் வெந்நீராவது
வைக்க உதவி இருக்கும். அதே போல், என் தந்தை உட்பட அனைவரும் ஸ்மார்ட் ஃபோன் பயண்படுத்துகிறார்கள்
என்று உளவியல் நிபுநர் சங்கீதா சொன்னதை வைத்து, அங்கிருந்தவர்களிடமே அது எப்படி என்று
கேட்டு அதை பயண்படுத்திக்காட்ட சொல்லி விழிப்புணர்வை உருவாக்கியிருக்கலாம். தவற விட்டுவிட்டார்கள்.
இருதியாக அறிமுகம் செய்துவைக்கப்பட்ட திரு ஜான் அவர்கள் பகிர்ந்த கவிதை நன்றாக இருந்தது.
பார்வையற்றவர்களைப்பற்றிய ஒரு எதார்த்த கவிதையாகவும் இருந்தது.
நிகழ்ச்சியின்
இருதி பகுதிதான் நீயா நானாவை நீயா நானாவாக அடையாளப்படுத்தியது. சுமார் 44 நிமிடங்கள்
16 வினாடிகள் ஒளிபரப்ப பட்ட நிகழ்ச்சியில் கடைசி நான்கு நிமிடங்கள்தான் ஹைலைட். ஒருவேளை இந்த நிகழ்ச்சி ஏதாவது ஒரு சமூக மாற்றத்தை பார்வை
சவால் கொண்டவர்கள் வாழ்வில் நிகழ்த்துமே ஆனால் அதற்கு திரு கோபிநாத் அவர்களின் கடைசி
கேள்வியும், அதற்கு திரு கனேஷ் மற்றும் சிலர் அளித்த பதிலும்தான் காரனமாக இருக்க முடியும்.
’நீங்கள் மக்களிடமும் அரசாங்கத்திடமும் வைக்க விரும்பும் கோரிக்கைகளை வைக்கலாம்’ என்று
திரு கோபிநாத் சொன்னதும் சிலர் பேசினார்கள். இருதியாக பேசிய திரு கனேஷ், ‘அரசாங்கம்
தன்னால் இயன்றவற்றை செய்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் தனியார் நிருவனங்கள்தான் எங்கள்
திறமையை சிறிதளவு கூட கருத்தில் கொள்ளாமல் பார்வை இல்லை என்ற ஒரே காரனத்திற்காக எங்களுக்கு
வேலை தர மறுக்கின்றன. வேலை கொடுத்துவிட்டு நாங்கள் சரிவர செய்யவில்லையென்றால் கூட எங்களை
பணி நீக்கம் செய்யலாம். அதை இதே மேடையில் வெளிபடுத்தியும் கொள்ளலாம். ஆனால் எங்களுக்கு
என்ன திறமை இருக்கிறது என்று கூட ஆராயாமல் எங்களின் குறையை காட்டி புறக்கணிப்பது செருப்பால்
அடிப்பது போல் உள்ளது.’ என்று தன் பாணியில் உரைத்தார். பரிசும் அவருக்குதான் கிடைத்தது.
திரு கனேஷ் எனது நண்பர். முதுகளை பட்டப்படிப்பு முடித்தவர். தவிற ஆசிரியர் பணிக்காகவும்
படித்திருக்கிறார். நிகழ்ச்சியின் கடைசி நேரத்தில் ஒட்டுமொத்த பார்வை திறன் குறையுடைய
சமூதாயத்திற்காகவும் குரல் கொடுத்திருக்கிறார்.
இது மாதிரி
கேள்விகளை ஆரம்ப முதலே கேட்டிருந்தால் நிகழ்ச்சி நிச்சையம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி
இருக்கும். ஆனாள் ‘பார்வை சவால் கொண்டவர்களின் உலகம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்’
என்று நிகழ்ச்சியை ஆரம்பித்துவிட்டு, ’பார்வை சவால் கொண்டவர்களும் இசையும்’ என்று இடையில்
இடைவேளிக்குபின் இடரியதுதான் இது நீயா நானாதானா என்று குழம்ப வைத்தது. பெரிதாக ஒன்றும்
வேண்டாம். ‘நீங்கள் எந்த மாதிரியான சவால்களை எல்லாம் எதிர்கொள்கிறீர்கள்?’ என்று கேட்டிருந்தாலே
ஒரு பெரிய மாற்றத்தை அவர்களின் பதில்களின் மூலம் உருவாக்க முயற்சி செய்திருக்கலாம்.
அதை வைத்து பல கிளை கேள்விகளை எழுப்பியிருக்கலாம்.
யாராவது ஒரு
பார்வையாலரிடம் சென்றூ இந்த நிகழ்ச்சியை பற்றி கருத்து கேட்டு, அதற்கு அந்த சாமான்ய
பார்வையாலர் ‘கண்ணு தெரியாதவங்க எல்லாம் நல்லா அருமையா பாடுனாங்க பா.’ என்று சொன்னால்
எந்த ஒரு மாற்றத்தையும் சமூகத்திலும், பார்வை சவால் கொண்டவர்களின் வாழ்விலும் இந்த
நீயா நானா ஏற்படுத்தவில்லை என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும்.
நிகழ்ச்சியில்
பங்குபெற்ற ஒருவரை தொடர்பு கொண்டு பேசினேன். எந்த அளவுக்கு நிகழ்ச்சியைக் கத்தரி போட்டார்கள்
என்று கேட்டேன். ’பெரிதாக எல்லாம் ஒன்றும் எடிட் செய்யவில்லை. அதே சமையம் இரண்டு முக்கியமான
பதிவுகளை கத்தரி போட்டுவிட்டார்கள். ரயில்களில் மாற்றுத்திறனாலிகளின் பெட்டியில் மற்றவர்கள்
வந்து ஏறிக்கொள்கிறார்கள், தவிற சில ரயில்களில் மாற்றுத்திறனாலிகளுக்கான பெட்டியே இல்லை
என்று ஒருவர் சொன்னதையும், பேருந்தில் இரவு இரண்டு மணிக்கு சிறப்பு சலுகை வழங்கப்படாமல்
ஒரு பார்வையற்ற பெண் தன்னை நடத்துனர் இறக்கிவிட்டார் என்று கூறியதையும் எடிட் செய்துவிட்டார்கள்.
அதுதான் கொஞ்சம் நெருடலாக இருந்தது’ என்றார் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்.
தவிற, ‘நிறைய
பேர் சமூக வலைதலங்களில் நிகழ்ச்சியை முழுதாய் பார்க்காமலேயே சாடுகிறார்கள். முழூதாய்
பார்த்தால் நன்றாய் இருக்கும்.’ என்றவர், ‘இந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு, ஒரு தனியார்
நிருவனம் நமக்கு (பார்வை சவால் கொண்டவர்களுக்கு) வேலை கொடுக்க முன் வந்ததாக கேள்வி
பட்டேன். அதை உறுதி செய்யவேண்டும்.’ என்று சொல்லி மகிழ்ந்தார். அப்படி நடந்தால் அது
நீயா நானாவின் மூலம் பார்வை சவால் கொண்டவர்களுக்கு ஒரு வெற்றிதான். இல்லாத பட்சத்தில்
தலைப்பில் சொன்னதுபோல் இது வெரும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் வழங்கிய நீயா நானாதான்.
இந்தப் பதிவை படிக்கும்போது நான் அந்த நிகழ்ச்சியை காணும்போது எனக்கு என்ன எண்ணங்கள் ஏற்பட்டதோ அவை அனைத்தும் இங்கே பதிவிடப்பட்டிருப்பதாக உணர்கிறேன் Anna.
ReplyDeleteமேலும், பதிவின் தலைப்பு உங்களுக்கே உண்டான பானியிலிருப்பது மிகப் பொருத்தம்.
This comment has been removed by the author.
ReplyDelete