13 September 2018

எவன் பாத்த வேல டா இது?

Posted by Vinoth Subramanian | Thursday, September 13, 2018 Categories: , , , ,


கடந்த ஆகஸ்டு பதிநேழாம்தேதி முன்னால் பிரதமர் திரு வாஜ்பாயின் மறைவை ஒட்டி விடுமுறை விடலாமா வேண்டாமா என்று வங்கிகள் குழம்பிக்கொண்டிருந்த நேரத்தில் நான் ஃப்லிப்கார்டில் ஆர்டர் செய்த ஒரு விவகாரமான பொருள் எனது கைக்கு வந்து சேர்ந்தது.

முதலில் அதை அமேசானில்தான் தேடினேன். ஆனால் அந்த பொருள் எங்கள் இருப்பிடத்திற்கு அனுப்ப இயலாது என்று அந்த நிருவனத்தின் வலைதலத்தில் போட்டிருந்ததால் ஃப்லிப்கார்டிற்கு தாவினேன்.

அமேசானைவிட ஃப்லிப்கார்டில் ஆர்டர் செய்யும் பொருட்கள் தாமதமாகத்தான் வந்து சேருகின்றன. ஆனால் எங்கள் வங்கியின் அன்றைய சுற்றறிக்கைக்கு அது கொஞ்சம் தேவலாம். ஒருவழியாக அன்று அறைநாள் என்று எங்களுக்கு உறுதியான தகவல் வந்தவுடன் ஆர்டர் செய்த அந்த பார்சலை முற்றிலுமாக ஆர்வத்தில் பிரித்துவிட்டு பொருளை மட்டும் மிக பத்திரமாக பையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினேன். வீடு வந்ததும் அதைத் திரந்து அப்பாவிடம் காட்ட, அவர் என்ன என்று கேட்டு பிறகு இது எதுக்கு இப்போ என்றார். “சேஃப்டிக்குஎன்றேன் நான். பிறகு அண்ணி பார்த்துவிட்டார். எதற்கு இப்போது இது என்று கேட்டதற்குசேஃப்டிக்குஎன்றேன் அவரிடமும். பிறகு மிக கவனமாக அதைப்பிரித்து, உள்ளிருக்கும் பொருளை மட்டும் ஒளித்துவைக்க இடம் தேடினேன்.

வீட்டின் கடைசியில் இருக்கும் ஒரு அறைதான் சரியான இடம் என்று நானே முடிவுசெய்துகொண்டு ஒளித்துவைத்தேன்.  அட்டைகளை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு வந்திருந்த உரவினர்களிடம் சகஜமாக வேறொரு அறையில் பேசிக்கொண்டிருந்தேன். கொஞ்சம் நெருக்கமானவர்கள் என்பதால் அவர்களிடம் விவாதிப்பதற்கும் தெரிந்துகொள்வதற்கும் பகிர்ந்துகொள்வதற்கும் நிறைய விஷையங்கள் இருந்தன.  கொஞ்சம் நேரம் கழிந்தது. வந்திருந்தவர்களெல்லாம் தொலைக்காட்சிப் பார்க்க ஹாலில் சென்று அமர்ந்தார்கள். அண்ணன் மட்டும் நாங்கள் பேசிக்கொண்டிருந்த அறையிலேயே தூங்கிவிட்டார்ன். நானும் கொஞ்சநேரம் படுத்துவிட்டு பிறகு ஆர்வம் தலைத்தூக்க எழுந்தேன்.

அதில் மேல்மூடி இருக்கிறதா இல்லையா என்பதுதான் குழப்பம். மேல்மூடி இல்லாதது போலவே இருந்தது எனக்கு. ஏதேனும் ஆகிவிட்டால்? என்ற அந்த அச்சம் பொருளைப்பிரித்ததிலிருந்தே இருந்தது எனக்கு. மீண்டும் அதைப்பார்க்கவேண்டும் என்று தோன்றியது. ஹாலிலிருந்த உரவினர்கள் யாரையும் தொந்தரவு செய்யாமல் அமைதியாக அந்த கடைசி அறைக்கு சென்றேன். நான் வைத்தது வைத்த இடத்திலேயே இருந்தது. மெதுவாக எடுத்தேன். அந்த பாட்டிலை மேலும் பார்த்தேன். மேல் மூடி என்று தனியாக ஒன்று இல்லை என்பது புரிந்தது. உபையோகப்படுத்துபவர்களுக்கு எளிதாக இருக்கும்வகையில் அமைக்கப்பட்டிருக்கக்கூடும் என்று எண்ணிக்கொண்டேன்.

அதுதான் முதல் அணுபவம் என்பதால் மிகவும் கவணமாக இருக்கவேண்டும் எனத்தோன்றியது. சில நொடிகள் யோசித்தேன். அறையின் கதவை மூடித்தாழிட்டேன். நான் கையில் வைத்திருந்ததை முதல்முறையாக பயன்படுத்தியவர்களின் அனுபவங்கள் நினைவுக்கு வந்தது. அமேசானிலும் ஃப்லிப்கார்டிலும் விமர்சனங்களாக எழுதி இருந்தார்கள். அதுதான் ஆர்வத்தைத்தூண்டியும் விட்டது. இல்லையென்றால் வாங்கிவைத்திருப்பேனே தவிற பரிசோதித்துப்பார்க்க எண்ணியிருக்கமாட்டேனோ என்னமோ.

கதவு தாழிடப்பட்டிருக்கிறதா என்று மருபடியும் பார்த்துக்கொண்டு கட்டிலுக்கும் பீரோவிற்கும் இடையில் இருக்கும் பகுதிக்கு சென்றேன். இன்னும் கொஞ்சம் நகர்ந்து மூலைக்கு சென்றேன். அந்த பாட்டிலை பத்திரமாகப்பிடித்துக்கொண்டு மேலே முக்கோண வடிவில் இருந்த அந்த அமைப்பை பார்த்துவிட்டு அதில் கட்டைவிரல் மட்டும் நுழையும் அளவிற்கு இருந்த சிறு வாயிலுக்குள் விரலை வைத்தேன். அழுத்தவேண்டிய இடம் இதுதான் என்பது நன்றாக தெரிந்தது. முகத்தைக்கொஞ்சம் பக்கத்தில் கொண்டு சென்று ஒரு நொடி யோசித்தேன். மெதுவாகவும் மிக கவணமாகவும் அதிக அழுத்தம் கொடுக்காமலும் அழுத்தினேன்.

புஸ்என்று ஒரு சத்தம். மிக சிறிய அலவிலான சத்தம். உள்ளிருந்து வெளிவந்த நெடி எனது மூக்கை நான் நினைத்ததுமாதிரியே பதம் பார்த்தது. ”சக்சஸ்!” என்று எண்ணிய தருவாயில் நெடி தொண்டைக்குள் சென்று நெஞ்சிக்குள்ளும் செல்ல இருமலும் கண்ணீரும் ஒன்று சேர்ந்துவரசூப்பர்என்று நினைத்துக்கொண்டேன். ”என்னதான் இருந்தாலும் அட்டாச்சிடு கேப்(attached cap) ஆச்சும் இருந்திருக்கலாம்.” என்று தோன்றியது. ஒரு மூன்று நான்கு முறைதான் இருமி இருப்பேண்.  மிகுந்த பயத்துடன் அதை ஒளித்துவைத்துவிட்டு, கதவை திறந்துகொண்டு சமையலறைக்கு சென்று செம்பில் தண்ணீர் எடுத்து தொண்டைக்குள் சரித்துக்கொண்டேன். பிரச்சினை தீர்ந்தது. நான் மிகவும் லேசாக அழுத்தியதால் லேசாக தொண்டைக்குள் ஒரு கார உணர்வு மற்றும் கொஞ்சம் கண்ணீர் வந்ததே தவிற வேறேதும் செய்யவில்லை.

எனது போதாத காலம். உரவினர்களில் ஒருவர் (மாமன்மகள்) எதற்காகவோ ஃப்ரிட்ஜை திறக்க, திடீரென்று இரும ஆரம்பித்துவிட்டார். ஏதோ சாதாரன இருமல் என்று நினைத்தேன். அவர் தொடர்ந்து இரும, பயத்தில் திரந்து இருந்த அந்த அறையின் கதவை வேகமாக சென்று அடைத்தேன்.

சில வினாடிகள்தான் தாமதம். ஹாலில் இருந்தவர்கள் இரும ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு பயமாகிவிட்டது. பயத்தைவிட குழப்பம்தான் அதிகமாக இருந்தது. ”வாய்ப்பில்லையே.” என நினைக்கும்போதே இருமல் சத்தம் அதிகமாக கேட்டது. ஃப்ரிட்ஜுக்கு வந்த மாமாவின் முதல்மகள், இரண்டாவது மகள், மாமி, அம்மா, எதிர்வீட்டு அக்கா என்று அவரவர் பங்குக்கு இரும அண்ணியும் சேர்ந்துகொண்டார். அங்கிருந்த பெரியம்மா பையனும் (தம்பிமுறை) இருமினான். அண்ணன் மட்டும் எந்த அசைவும் இன்றி இன்னொரு அறையில் உறங்கிக்கொண்டிருந்தான். அதுவும் திரந்துதான் இருந்தது. நல்லவேளை அப்பா அங்கு இல்லை.

எதுக்கு எல்லாரும் இப்பிடி இருமுரீங்க?” என்று நான் கேட்க ஒருவராலும் பதில் சொல்லமுடியாமல் இருமினர். அண்ணி மட்டும்என்னாச்சு மாமாஎன்றார் என்னிடம். அத்தை மகள் என்பதால் என்னையும் மாமா என்றுதான் அழைக்கிறார். நான் அண்ணியென்றெல்லாம் அழைக்க்மாட்டேன். ஃப்ரிட்ஜைத்திறந்த முதல் மாமன் மகள்அந்த ரூம் கதவ நீ எதுக்கு சாத்துன?” என்று கேட்டுக்கொண்டே பின்னால் வந்தார். நான் அந்த அறைக்குதான் சென்றேன்.
இங்கிருந்துதான் டா வருது!”
இங்கிருந்துதான் வருது. ஆனா நீங்க இருமினதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?” என்றேன். அந்த நெடியின் வாசம் அந்த அறையில் இருந்தது எனக்கும் தெரிந்தது. ஆனாள் அது ஹாலிலோ மற்ற அறைகளிலோ இல்லை.

பிறகு நாங்கள் வெளியே வந்ததைப் பார்த்தும், அடிக்கடி நான் உள்ளே போனதைப் பார்த்தும் அனைவருக்கும் என்மீது சந்தேகம் வந்தது. பேசாமல் யாருமில்லாத நேரத்தில் பரிசோதித்திருக்கலாமோ என்று கூட தோன்றியது.
எங்கேயோ வெளிய எதையோ கொளுத்துராங்க.” என்று சொன்ன எனது மாமி கூட, “இவந்தான் ஏதோ பண்ணியிருக்கான்மா.” என்று முடிக்க மொத்த கூட்டமும் அறைக்குள் வந்தது. “இங்கதான் ஏதோ.” என்று எல்லோரும் முடிவுக்கு வர. “நான் இல்லனு சொல்லல, ஆனா உங்களுடைய இருமலுக்கு இது காரனமா இருக்க முடியாது.” என்றாலும் யாரும் நம்பவில்லை. அதில் உச்சகட்டமாக எனது பெரியம்மா பையன் நான் ஒளித்துவைத்திருந்த அந்த பாட்டிலை எடுத்து மூக்கில் ஒரு உரி உரிஞ்சினான். அவ்வளவுதான். அவனுக்குவேறு காது கேட்காது வாய் பேசவும் இயலாது. இருமினான் பாரு ஒரு இருமல்ஒரு பக்கம் பாவமாகவும் ஒரு பக்கம் சிரிப்பாகவும் இருந்தது எனக்கு.
இவரு பெரிய சைண்டிஸ்டு. தேவையா?” என்று நினைத்துக்கொண்டேன்.
ஏதோ மருந்த அடிச்சிட்டான் மா இவன்.” என்றார் மாமி.
நான் அடிச்சேந்தான். ஆனா உங்க இருமலுக்கும் இதுக்கும்என்று நிருத்திக்கொண்டேன். யார் நம்பப்போகிறார்? அறையின் கதவை அடைத்துவிட்டு வெளியே வந்தேன்.

எங்களது ஹால் வடகிழக்கில் இருக்கிறது. நான் பரிசோதித்த அறை தென் மேற்கில் இருக்கிறது. அதுவும் கடைசியில். ஆர்வக்கோலாறில் பாட்டிலை மூக்கில் வைத்து உருஞ்சிய எனது தம்பியிடம்ரெண்டு வாசனையும் ஒரே வாசனையா?” என்று கேட்கலாம் என்று நினைத்தால் அவனுக்கு காது கேட்காது வாயும் பேச இயலாது. எனக்கு பார்வை தெரியாது. எப்படி கேட்பது? சில நேரம் கழித்து இருமல் நின்றது. ஒருவர் பின் ஒருவராக சாந்தமாகினர். ஒருகட்டத்தில் என் தாய் உச்ச ஸ்தாயில் இருமியதுதான் மிகுந்த பயத்தை ஏற்படுத்தியது.

அந்த ஃப்ரிட்ஜைத்திரந்த மாமன் மகள் வந்து கொஞ்சம் கூலாகவே என்னிடம் கேட்டார்என்னது டா அது?” என்று.
பெப்பர் ஸ்பிரே.” என்றோம் நானும் அண்ணியும். பெரும்பாலானோர்க்கு தெரிந்ததுதான் என்றாலும் சிலருக்கு அதைப்பற்றி தெரியாமலும் இருந்தது என்பது புரிந்தது. யாரேனும் நம்மைத்தாக்கவந்தால் அவர்களின்மீது இதை அடித்துவிட்டு தப்பித்துக்கொள்ளலாம் என்று  விளக்கினேன்.
சரி இத எதுக்கு வாங்குன?” என்றார் அவர்.
சும்மா. ஒரு சேஃப்டிக்குஎன்றேன். ”ஆனா அதுக்கு அவ்வளவு பவர் இருக்க வாய்ப்பில்ல பா. நான் என்னைய வெச்சிதான் டெஸ்ட் பண்ணேன். அதுவும் ரொம்ப க்லோஸ்ல. அப்பிடினா நாந்தானே அதிகமா இருமி இருக்கனும்? இந்த ஹால் எங்க இருக்கு அந்த பெட்ரூம் எங்க இருக்கு? பெப்பர் ஸ்பிரே எப்பிடி அவ்வளவு டிஸ்டன்ச கவர் பண்ணும்? அப்பிடினா அதயூஸ் பண்ணுரதுல அர்த்தமே இல்லையே?” என்று கேட்டுக்கொண்டே வெளியே நடந்தேன். ஆனால் பெப்பர் ஸ்பிரேவை வாங்கியதன் காரனத்தை மட்டும் யாரிடமும் முழுதாய் சொல்லவில்லை. சொன்னால் பயந்துவிடுவார்கள். அது எனக்கே கூட ஆபத்தாய்ப்போய்விடலாம் என்று தோன்றியது.

ஆனால் இங்கு சொல்லவேண்டும். சொல்லியே ஆகவேண்டும். சிலநாட்களுக்கு முன்பு பார்வையற்றவர்கள் மட்டும் இருக்கும் ஒரு வாட்ஸப் குழுவில் ஒரு சம்பவத்தைப்பற்றிய உரையாடல் ஒன்று நடந்து கொண்டிருந்தது. நான் பாதியில்தான் சென்றேன். அனைத்து குறள் பதிவுகளையும் கேட்ட பிறகுதான் விஷையம் புரிந்தது. ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் ஒரு பார்வையற்றவர் சேலத்திலிருந்து சென்னைக்கு பயணம் செய்து இருக்கிறார். சென்னையில் வந்து இரங்கியதும் ஒருவர் உதவி செய்வதாக கூறி தனியே அழைத்துச்சென்று கத்தியைக்காட்டி அந்த பார்வையற்றவரை மிரட்டி கையிலிருந்த செல்ஃபோன் பணம் அனைத்தையும் பரித்துக்கொண்டு சென்றிருக்கிறார். காப்பாற்ற ஆளில்லாததாலும் பார்வையில்லாததாலும் இவரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. பயத்தைத்தவிற அந்த பார்வையற்றவருக்கு துணையேதுமில்லை. அனைத்தையும் கொடுத்துவிட்டார். அந்த சம்பவத்தைப்பற்றிதான் அனைவரும் விவாதித்து கொண்டிருந்தார்கள். பாதுகாப்புமுறைகளைப்பற்றியும் விவாதித்துக்கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொருவராக தனது அனுபவத்தை பகிரும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. நிறைய பார்வையற்றவர்களிடம் செல்ஃபோன் களவு போன கதை இருந்தது. அவர்களுக்கே தெரியாமல் திருடப்பட்டது ஒருரகம் என்றால், மிரட்டப்பட்டது இன்னொரு ரகம். எனக்கு நெருக்கமான ஒரு பார்வையற்ற நண்பர் வேலச்சேரியில் ரயில்நிலையம் செல்ல உதவிகேட்டபோது ஒருவர் அழைத்துச்சென்று இருக்கிறார். அவரை விரட்டிவிட்டு இன்னொருவர் தான் உதவி செய்வதாக கூறி எனது நண்பரின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு கொஞ்சதூரம் நடந்திருக்கிறார்.

திடீரென்று பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார். எனது நண்பர் தான் பயிற்சிக்கு சென்று வருவதாகவும் தன்னிடம் பணமில்லை என்றும் கூற, தான் வாயில் வைத்திருக்கும் பிலேடை முகத்தில் உமிழ்ந்துவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்  அந்த மனிதர். எனது நண்பர் தானே ஒரு பார்வையற்றவர் என்றும் தன்னை ஏன் மிரட்டுகிறீர்கள் என்றும் தவிற தன்னிடம் பணமில்லை என்று கூற ஆத்திரம் அடைந்த கொள்ளையர், நடைமேடையின் சரிவிலிருந்து எனது நண்பரை தரதரவென்று இழுத்திருக்கிறார். நல்லவேளை யாரோ வந்து காப்பாற்றியிருக்கிறார்கள். உதவியும் செய்திருக்கிறார்கள்.

இன்னொரு இடத்தில் சுரங்கப்பாதையில் யாசித்துக்கொண்டிருந்த பார்வையற்றவரிடம் கொள்ளையடிக்கவந்த ஒருவர் அந்த பார்வையற்றவர் யாசித்து சேர்த்துவைத்த மொத்தப்பணத்தையும் கேட்டு மிரட்டி இருக்கிறார். இவர் தரமாட்டேன் என்று பிடிவாதமாய் சொன்னதால் அந்த கொள்ளையர் பார்வையற்றவர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி அவரிடமிருந்த மொத்த பணத்தையும் பறித்துச்சென்றிருக்கிறார். மிளகாய்ப்பொடி கண்ணில் தூவப்பட்டதால் துடித்திருக்கிறார் அந்த பார்வையற்ற யாசகர். பிறகு அங்கு சென்று கொண்டிருந்த மனிதர்கள் அந்த பார்வையற்றவரின் முகத்தை கழுவிவிட்டிருக்கிறார்கள். பார்வையற்றவரிடம் திருடுவது சரி மிளகாய்ப்பொடியை ஏன் தூவவேண்டும்? அதனால் என்ன பயன்? என்ற கேள்வியை அந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட அந்த பார்வையற்ற யாசகரே கேட்டு புலம்பியிருக்கிறார்.

மனிதநேயம் மங்கிக்கொண்டிருக்கிறது. ரயில்களில் அச்சுருத்திக்கொண்டிருக்கும் திருநங்கைகள் கூட பார்வையற்றவர்களிடம் கணிவாகத்தான் நடந்து கொள்கிறார்கள். ஆனால் உதவி செய்கிறேன் என்று வருபவர்கள்தான் பயமுருத்துகிறார்கள். யார் நல்லவர் யார் கெட்டவர் என்று கண்டறிவதில் கடினத்தன்மை ஏற்பட்டிருக்கிறது. அதுவும் கண் பார்வை இல்லாதவர்களின் நிலைமை இன்னும் மோசம். பயணம் செய்யும் பார்வையற்ற பெண்களை நினைத்தால் வரும் பயத்தை தவிர்க்க இயலவில்லை. இதுபோன்ற விஷையங்களை அந்த வாட்ஸப் குழுவில் விவாதித்து கொண்டிருக்கும்போதுதான் எனக்குத்தோன்றிய யோசனை பெப்பர் ஸ்பிரே. ஆனால் அதுகூட திடீரென்று பறித்துக்கொண்டு ஓடுபவனிடம் வேலைக்காகாது. ஒரு பாதுகாப்புக்காகவேண்டுமென்றால் வைத்துக்கொள்ளலாம் என்று தோன்றியது. வாங்கிவிட்டேன். அது என்னடா என்றால் முதல் பரிசோதனையிலேயே என்னைக் குழப்பி விட்டது.
உண்மையிலேயே அத்தனைப்பேரின் இருமலுக்கும் அந்த ஸ்பிரேவின் நெடிதான் காரனமா? இல்லையென்றால் அதே நேரத்தில் வெளியிலிருந்து யாரேனும் எதையாவது பற்றவைத்துவிட்டார்களா? தெரியவில்லை
அன்று வந்த அத்தனை உரவினர்களும் அடுத்தமுறை வீட்டிற்கு வரட்டும். இன்னொருமுறை அந்த பெப்பர் ஸ்பிரேவை வைத்து பரிசோதித்துவிடுவோம்.

0 comments:

Post a Comment

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube