09 August 2018

இதுதான் காரனம்.

Posted by Vinoth Subramanian | Thursday, August 09, 2018 Categories: , , ,


கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. நான் சந்தித்த பெரும்பாலானோர் கேட்ட ஒரே கேள்விஏன்என்பதுதான். அடுத்த கேள்விஎப்படிஎன்பதாகத்தான் இருந்தது. என்னை எழுதவைத்ததும் இந்த தொடர் கேள்விதான்.

எதைப்பற்றி பேசுகிறேன் என்று நீங்கள் யோசிக்கக்கூடும். சொல்லிவிடுகிறேன். அசைவம் சாப்பிடுவதைப்பற்றிதான். நான் முழுவதுமாய் அசைவம் சாப்பிடுவதை விட்டு கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஆகின்றன. இப்போது வீட்டில் நானும் அப்பாவும் மட்டும்தான் முழு சைவம்.  ஆனால் சிறுவயதில் அப்படி இல்லை. எல்லாவகையான அசைவ உணவுகளை சாப்பிடாவிட்டாலும் முட்டை மற்றும் ஆட்டுக்கரியை சாப்பிட்டுக்கொண்டுதான் இருந்தேன். ஆனால் அதுவும் வீட்டில் மட்டும்தான். விடுதியில் சேர்ந்தவுடன்நான் முட்டை மட்டும்தான் சாப்பிடுவேன்என்று சொல்லியதால் மற்ற அசைவ உணவுகளை எனக்கு வராமல் பார்த்துக்கொண்டார்கள் அங்கே உணவு பரிமாறும் அக்காக்கள். ஆனால் பிரியாணியில் இருந்த இரைச்சியை மட்டும் எப்படி சாப்பிட்டேன் என்று நினைவில்லை.

எனக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றுதான். அப்பா எதைஎல்லாம் சாப்பிடுவாரோ அதைஎல்லாம்தான் சாப்பிடவேண்டும். மற்றவையெல்லாம் இயல்பாகவே பிடிக்காமல் போனது. குறிப்பாக மீனும் கருவாடும். வாசனையைக்கண்டாலே வீட்டைவிட்டு வெளியேறிவிடுவேன். அது ஏனோ அவ்விரண்டின்மீதும் அவ்வளவு வெருப்பு. சாப்பிடுபவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம். சிறுவயதில் அத்தை ஒருவர் பெரியப்பாலையத்தில் மீன் வருத்து தந்தார். அது மீன்மாதிரியே இல்லை. அவ்வளவு அருமையாக இருந்தது. முள்ளெல்லாம் எடுக்கப்பட்டு சீரும் சிறப்புமாக உள்ளே சென்றது. ஆனால் அதன் பிறகு அதேமாதிரி வருக்கப்பட்ட எந்த மீனும் அதுபோல் இல்லை. அதே அத்தைதான் வருத்துக்கொடுத்தார். ஆனாலும் பிடிக்கவில்லை. பிறகு விட்டுவிட்டேன்.

ஆறாம் வகுப்பில் வேறொரு பள்ளியில் சேர்ந்தேன். அங்கேயும் விடுதிதான். செவ்வாய் கிழமை முட்டை தருவார்கள். ஆனால் ஓட்டை நாம்தான் பிரித்துக்கொள்ளவேண்டும். அவித்த முட்டைக்கு ஓடு இருக்கும் என்பதே எனக்கு ஆறாம் வகுப்பில்தான் தெரியும். அப்படியே பச்சையாக வேண்டுமென்றால் குடித்திருக்கிறேன். வியாழ கிழமை மாட்டு இரைச்சி தருவார்கள். ’இதுல எலும்பே இருக்காதுஎன்றான் ஒருவன். ’நல்லா இருக்கும்டாஎன்றான் இன்னொருவன். அந்தப்பள்ளியில் ஒருசில நாட்கள்தான் உணவு சுமாராக இருக்கும். ’வேனாம்னா எனக்கு வாங்கிக்கொடுத்துடேன்என்றான் எதிரிலிருந்த இன்னொருவன். அவ்வளவு நல்லா இருக்குமா?  சரியென்று மாட்டு இரைச்சியை வாங்கி வாய்க்குள் போட்டேன். அருமையாக இருந்தது. ’எவனுக்கும் கிடையாது போங்கடாஎன்று மனதில் நினைத்துக்கொண்டே நானே வாங்கி சாப்பிட்டுக்கொண்டேன்.
ஆனால் வெள்ளிக்கிழமை எனது தட்டை எடுத்தால் எனக்கே பிடிக்கவில்லை. இனிமேல் சாப்பிடக்கூடாது என்று நினைப்பேன். அடுத்த வியாழக்கிழமை வரும். பக்கெட்டில் மாட்டு இரைச்சியும் வரும். இன்னைக்கு மட்டும் வாங்கீக்கலாம் என்று வாங்கி சாப்பிட்டுவிடுவேன். எவ்வளவுதான் கழுவினாலும் அடுத்தநால் அந்த தட்டை கையில் எடுக்க முடியாது. ஒரு மூன்று முறை சாப்பிட்டிருப்பேன். ஒரு கட்டத்தில் இனிமேல் மாட்டு இரைச்சியே சாப்பிடக்கூடாது என்று முடிவெடுத்தேன். ’எனக்காச்சும் வாங்கிக்கொடேண்டாஎன்பார்கள் சிலர். அந்த பள்ளியில் ஒரு விதிமுறை உண்டு. ஒவ்வொருவரும் ஒரு தட்டு, ஒரு டம்லர் மற்றும் ஒரு சாசர் வைத்திருக்கவேண்டும். நான் வெரும் தட்டும் டம்லரும்தான் வைத்திருப்பேன். ’உனக்கு வேணும்னா ஒரு சாசர் வாங்கிட்டு வா அதுல வேணும்னா வாங்கித்தரேன். என் தட்டுலயெல்லாம் வாங்க முடியாது.’ என்று சொல்லிவிடுவேன்.

அப்படி சாசர் எடுத்துவந்து தந்தவர்களும் இருக்கிறார்கள். எனக்கு வாங்குவது பொல் வாங்கி இரைச்சி பரிமாறுபவர் அந்த டேபிலிற்கு போனவுடன் சாசர் தந்தவனிடம் மாட்டு இரைச்சியை சாசருடன் தந்துவிடுவேன். கொஞ்சநாளில் மாட்டு இரைச்சியை விட்டு கோழிக்கு விடுதியின் வியாழக்கிழமைகள் மாறின. அதுவரை கோழிக்கரியை சாப்பிட்டதில்லை. வீட்டில் எப்போதும் ஆடுதான். சாப்பிட்டுதான் பார்ப்போமே என்று சாப்பிட்டேன். ஆஹா! ஆஹா! என்ன சுவை. வாரவாரம் ஞாயிற்று கிழமை வீட்டிலிருந்து என்னை பார்க்க சாப்பாட்டுடன் பெற்றோர் வந்ததால் நாக்கு ஞாயிற்றுக்கிழமைகளை தேடியது. அதில் அப்போது வியாழனும் சேர்ந்துகொண்டது. கோழிக்கரி குருமாவை பரிமாறும் அண்ணன் பக்கெட்டை கொண்டுவந்தவுடன் கோழிகளைப் போல் தட்டுகளுக்கு ரெக்கை முளைத்துவிடும். எல்லோரும் ஒருசேர எழுந்து பக்கெட்டையே மூடும் அளவிற்கு தட்டுகளை ஏந்தி நின்றுவிடுவோம்.

கோழிக்கரி மட்டுமல்ல. நல்ல உணவுவரும்போதெல்லாம் தட்டுகளை ஏந்தி நிற்கும் கூட்டத்தை இரண்டுவகையாக பிரிக்கலாம். முதல்வகை மானவர்கள்அண்ணா அண்ணா இன்னும் கொஞ்சம் போடுணா. கொஞ்சம்தான் அண்ணா போட்டிருக்கீங்க. இன்னும் கொஞ்சம் போடுணா. கொழம்பு இல்லவே இல்ல அண்ணா.’ என்று சொல்லிக்கொண்டே தட்டை இரக்காமல் வைத்திருப்பார்கள். இன்னொருவகை மாணவர்கள் வாயையே திரக்காமல் பரிமாறுபவரையே பரிதாபமாக பார்த்துக்கொண்டு தட்டை இரக்காமல் அவர் போகும்வரை வைத்திருப்பார்கள். நான் இரண்டாம் வகை. சில நேரங்களில் சில துண்டுகள் வந்து விழும். ஒரு கட்டத்தில் குழம்பைமட்டும் தனியே வைத்தார்கள். எவ்வளவு வேண்டுமென்றாலும் ஊற்றிக்கொள்ளலாம்.  அப்போதெல்லாம் வியாழக்கிழமைகளில் அப்பா ராகவேந்திரரை கும்பிடுவதால் எங்கள் வீட்டில் அசைவம் சாப்பிட மாட்டார்கள். ஆறாம் வகுப்பில் நான் கூட அதையெல்லாம் பின்பற்றினேன். போக போக அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

ராகவேந்திரரை அடுத்த நாளுக்கு மாற்ற முடியாது. விடுதியின் அட்டவணையையும் மாற்றமுடியாது. நாம் மாறிக்கொள்வோம். மாறினேன். முற்றிலுமாக மாறினேன். இரண்டு சாக்லேட் கொடுத்தால் செவ்வாய் கிழமைகளில் வரும் தனது முட்டையை தனக்குப் பிடிக்காததால் எனக்கே கொடுத்துவிடுவதாக நண்பன் சொன்னான். பண்டமாற்றுமுறையை ஏற்றுக்கொண்டு மாறினேன். அம்மாவாசைகளில் ஆம்லட் சாப்பிட வாய்ப்புக்கிடைத்தது சாப்பிட்டேன். கிருத்திகைகளில் கிறுஸ்துவ நண்பர்களிடம் இருந்து பிரியாணி கிடைத்தது சாப்பிட்டேன். நான் சாப்பிடுகிறேன் என்பதால் எனது அம்மாவும் பிரியாணி செய்யக்கற்றுக்கொண்டு விதவிதமாக செய்தார். சாப்பிட்டேன். இராள் மீது எப்போதும் ஒரு ஆசை. சாப்பிட்டேன். செவ்வாய் கிழமை முருகனுக்கு உகந்த நாள் என்றார்கள். இருக்கட்டும் என எண்ணி சாப்பிட்டேன். வியாழக்கிழமைகளை ராகவேந்திரா என்றார்கள். விதிமுறைகளை கண்டுகொள்ளாமல் சாப்பிட்டேன். வெள்ளிக்கிழமைகளை அம்மனுக்கு என்றார்கள். அதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் சாப்பிட்டேன். சனிக்கிழமைகளை பெருமாலுக்கு உகந்தநாள் என்றார்கள். பெரிதாய் எடுத்துக்கொள்ளாமல் சாப்பிட்டேன். ப்ரதோஷம் அன்று சாப்பிடுவது நல்லதல்ல என்றார்கள். அதைப்பற்றியெல்லாம் பிரச்சினையில்லை என்று சாப்பிட்டேன்.

ஆனால் கருவாடு மீண் நண்டு மட்டும் கடைசி வரை பிடிக்கவே இல்லை. நான் பதிநொன்றாம் வகுப்பு படிக்கும்போது கருவாடை விடுதியில் அறிமுகப் படுத்தினார்கள். ”Don’t you eat dryfish?” என்றார் எமது தலைமை ஆசிரியர். கருவாட்டிற்கு ஆங்கில வார்த்தையைக் கற்றுக்கொண்டதைத் தவிற வேறு எந்த பலனையும் தரவில்லை. எமது விடுதியின் செவ்வாய் கிழமைகள் முட்டையிலிருந்து கருவாட்டிற்கு மாறியதை கோழிகள் வேண்டுமென்றால் சந்தோஷமாக கொண்டாடி இருக்கும். ஆனால் மீண்களுக்கு அடுத்தபடியாக அதிகம் வருந்தியதுஎன்னமோ நாந்தான். ’எனக்கு மீணும் கருவாடும் சுத்தமா பிடிக்காது. அந்த வாசனையே பிடிக்காது.’ என்று சொன்னதற்கு நண்பன் ஒருவன்உனக்கு நல்லா மீன் சாப்புடுரவ இல்லனா ஒரு மீண் காரிதான் வந்து சிக்குவா.’ என்று சபித்ததெல்லாம் சொல்ல முடியாத வரலாற்றுச் சோகம்.

கல்லூரி சேர்ந்தபோது சைவ உணவகத்திலேயே சேர்ந்துகொண்டேன். அதில் முட்டை மட்டும் இருக்கும். வீட்டிற்கு வரும்போது மட்டும் அசைவம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டேன். ஒரு கால கட்டத்தில் முட்டையின் உள்ளிருக்கும் மஞ்சள் கருவும் பிடிக்காமல் போனது. திடீரென்று ஒருநாள் அப்பா இனிமேல் அசைவம் சாப்பிட போவதில்லை என வீட்டில் சொல்ல நாங்கள் அதிர்ந்தோம். நானாவது கோழிவரை போவேன். அவர் சாப்பிட்டதே முட்டையும் ஆடும்தான். விட்டுவிட்டார். பிறகு விஷையம் புரிந்தது. யாரோ ஒருவர் மெகா தொலைக்காட்சியில் காலை ஏழறை மணிக்கு வெற்றி நிச்சையம் என்ற நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தார். அவர்தான் அசைவத்திற்கு எதிராக பேசிக்கொண்டிருந்தார். அவரின் நிகழ்ச்சிக்கு நேரில் அப்பா சென்றுவந்தார். அதன் பிறகுதான் இந்த மாற்றமெல்லாம். நானும் அந்த மனிதரின் நிகழ்ச்சியைப் பார்த்தேன். நிகழ்ச்சிக்கு நேரிலும் சென்றுவந்தேன். இனிமேல் எந்த அசைவத்தையும் தொடக்கூடாது என்று முடிவெடுத்தேன். பிறர் சொல்லுவதையெல்லாம் எளிதில் கேட்டு பின்பற்றுபவன் அல்ல நான். ஆனால் அவரின் பேச்சில் ஒரு உண்மை இருந்தது. ’ஒரு ஊசி போட்டாலே நமக்கு வலிக்குதுனு சொல்லுரோமே. வெட்டும்போது அதுகளுக்கு எப்படி வலிக்கும்?’ என்ற கேள்வியில் ஞாயம் இருந்தது. இனிமேல் முட்டை முதற்கொண்டு எந்த அசைவத்தையும் சாப்பிடமாட்டேன் என்று முடிவெடுத்தேன். அதன் பிறகு வந்த கேள்விகள்தான் வேடிக்கையாக இருந்தன. ’மரத்துல இருந்து பழம் பறிக்குரோமே, மரத்துக்கு வலிக்காதா?’ என்றார் ஒருவர். வலிக்குமா வலிக்காதா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அந்த மரம் திரும்பவும் கணி கொடுக்கும். ஆட்டைவெட்டினால் அது மூன்றாவதுநாள் உயிர்த்தெழும் என்று யாராவது சொன்னால் அது உண்மையாக இருந்தால் மீண்டும் சாப்பிடலாம். அதற்காக நான் மஹான் என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஒரு கொசு கடித்தால் அடிப்பேன். எறும்பு கடித்தால் கொல்வேன். இதுதான் எனது சித்தாந்தம். வலிய போய் எந்த உயிரையும் துன்பப்படுத்த கூடாது என்பது மட்டும்தான் எனது நிலைப்பாடு. என்னைப்பொருத்தவரை அவைகளும் ஒரு உயிர். ஒரு மனிதனை மனிதனாகவும் விலங்கை விலங்காகவும் பாவிக்காமல் இரண்டையும் ஒரு உயிராக பாவிக்க நினைத்ததின் விளைவுதான் இந்த மாற்றம். நான் அசைவம் சாப்பிடுவதை முழுமையாக விட்ட பிறகு ஒருவர் ஆங்கிலத்தில் என்னிடம் கேட்டார், ‘Why don’t you eat chicken? Don’t you like it?’ என்று, அதற்குநான் ‘I don’t eat chicken because I like it a lot.’ என்றேன். இதுதான் காரனம்.

அதற்காகப் பிறரை மூளைச் சலவை செய்யும் பழக்கமெல்லாம் இல்லை. ஒருபோதும் இல்லை. தான் என்ன சாப்பிடவேண்டும், என்ன உடுத்தவேண்டும், யாருடன் பழக வேண்டும், யாரை வெறுக்கவேண்டும், என்ன செய்யவேண்டும், என்ன படிக்கவேண்டும், யாரைக் காதலிக்கவேண்டும், யாரைத்திருமனம் செய்துகொள்ளவேண்டும், எங்குவாழவேண்டும் என்பதெல்லாம் தனிமனித சுதந்திரம். அதில் தலையிடவேண்டிய உரிமை ஒருபோதும் பிறருக்கு இல்லை. ஆலோசனைகளையும், ஒரு தனிப்பட்ட செயலால் ஏர்படும் விளைவுகளையும் வேண்டுமென்றால் நம்முடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு அறிவுருத்தலாமே தவிற, நம்முடன் நெருக்கமாக இருக்கிறாரே என்பதற்காக அவரைக் கட்டாயப்படுத்துவதோ, அல்லது நமக்குப்பிடித்த செயல்களை அவரின்மீது தினிப்பதோக்கூடாது என்பதுதான் எனது நிலைப்பாடு. நான் தினிக்கவும் மாட்டேன். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு காரனம் இருக்கிறது. அந்த காரனம்தான் இந்த முடிவில் நிலையாக என்னை இருக்கவைத்தது. இன்று எல்லோராலும் போற்றப்படும் திருவள்ளுவரே அசைவம் சாப்பிடுவதற்கு எதிராக எழுதியிருக்கிறார் என்று படித்தேன். தெளிவானேன்.

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.

கலைஞர் உரை:
எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

கலைஞர் உரை:
புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்.

2 comments:

  1. திருவள்ளுவர் வாக்கு தப்பாகாது, இக்குறள் துறவறவியலில் முற்றும் துறந்து துறவிகள் எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னது.

    ReplyDelete
  2. சூப்பர் சூப்பர்

    எப்படி அர்ச்சனா மீன் கருவாடு சாப்பிடுவாங்களா அந்த பையன் சாபம் விட்ட மாதிரி

    ReplyDelete

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube