பாஷை எதுவெனப்
புரியவில்லை
ஓசை மட்டும்
கேட்கிறது
ஆசையின்
ஓசையென அதை அறிந்ததும்,
அன்னார்ந்து
பார்த்தால் நீ,.
செல்லும்
இடமெது சொல்லாயோ?
என் பேச்சுக்கு
செவி மடுத்து நில்லாயோ?
உனக்கென
ஒருவன் கத்துவதை
கடைசிவரை
நீ அறியாயோ?
எனைக்
கடந்துப் போவது உன் உரிமை
என்றாலும்
எழுதுவது என் கடமை
ஈரம் இருப்பினும்
இக்கடல் மணலில்
நான் இருக்கும்வரை
இருக்கும் என் கவிதை
நீ கடலை
கடக்க கிளம்பிவிட்டாய்
காத தூரம்
போகின்றாய்
சமுத்திரம்
பெரிது பறவையே
உன் சாவிற்கும்
சாதனைக்கும் சாட்சி இல்லை
என்னிடம்
மட்டும் சொல்லிவிட்டு போ
எழுதிவைக்கிறேன்
உரைத்துவிட்டு போ
இந்த கடற்கரை
மணலைத் தவிற
வேறுகதியற்ற
என்னிடம் கத்திவிட்டு போ.
கூச்சல்
மட்டும்தான் உன்னுடையது
குழப்பங்கள்
எல்லாம் என்னுடையது
உனைப்
பார்த்ததும் பற்பல கேள்விகளென்னில்
பதித்துவைக்கிறேன்
இக்கடல் மண்ணில்
கூட்டத்திலிருந்து
செல்கின்றாயா?
இல்லைக்
கூட்டம் தேடிச் செல்கின்றாயா?
துணையைத்
தேடிச் செல்கின்றாயா?
இல்லைத்
துணையைத் தொலைத்து செல்கின்றாயா?
வாழ்வைத்
தேடி செல்கின்றாயா?
இல்லை
வாழ்க்கையை இழந்து செல்கின்றாயா?
இலக்கை
நோக்கிச் செல்கின்றாயா?
இல்லை
இலக்கே இன்றிச் செல்கின்றாயா?
எதையும்
எளிதில் அறியேன் நான்
ஏதாவது
சொல்லிவிட்டு போ.
எதுவும்
சொல்ல விரும்பாவிடினும்
நான் சொல்வதையாவதுக்
கேட்டுவிட்டு போ.
உன் கலைப்புக்கு
கிளைகள் இருக்காது
பசிக்கு
பழங்கள் கிடைக்காது
தீவுகள்
தெரிந்தால் நின்றுவிடு
தீவனம்
கிடைத்தால் தின்றுவிடு
நீளக்கடலைக்
கடக்கும் உனக்கு
நீரும்
கிடைக்காது குடிப்பதற்கு
கடக்கையில்
கலைப்பில் கண்ணீர் வரும்
அது கடலில்விழுமுன்
குடித்துவிடு, காலம்வரும்.
குளிர்தான்
போர்வை போர்த்திக்கொள்
மழைதான்
குடை அதை ஏற்றுக்கொள்
உடல் உலராது
கதிரவன் வரும்வரை
காற்றுதான்
உனக்கு கடைசிவரை.
இலக்கை
அடைந்து வந்தாலும் சரி
எதுவும்
இன்றி வந்தாலும் சரி
எழுகடல்
சுற்றிவந்தாலும் சரி
இல்லைஎல்லாம்
துலைத்து திரும்பிவந்தாலும் சரி
உனைப்பற்றிக்
கிருக்க இக்கிருக்கன் இருப்பான்
என எண்ணி
என்றாவது என்னிடம் வந்து சேர்.
எங்கோ
எனைவிட்டுப் போகும் பறவை நீ.
எப்பெயருனக்கிட்டு
வளர்ப்பேனிவ்வுரவைஇனி?
உருவமில்லாப்
பறவையே உனக்கு
என் உள்ளம்
என்றுப் பெயரிடவா?
சிறகே
இல்லாச் சிறுபறவையே உனக்கு
என் சிந்தனை
என்றுப் பெயரிடவா!