19 May 2020



ஜூலை இருவது இரண்டாயிரத்து பத்தன்பொதில் அர்ச்சனா வெளிப்படையாக சம்மதம் சொன்னதன் அடிப்படையில் திருமணத்தேதியையும் அதன் பிறகான வரவேற்பு தேதியையும் முடிவு செய்யும் நிலைக்கு வந்திருந்தோம்.

அக்டோபர் முப்பது நவம்பர் ஒன்று அல்லது நவம்பர் மூன்று ஆகிய மூன்று தேதிகளில் ஏதோ ஒன்றில் எங்களது திருமணம் சுருட்டப்பள்ளியில் நடத்தப்படவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டிருந்தது. நவம்பர் மூன்றாம் தேதி நிறாகரிக்கப்பட மீதம் உள்ள இரண்டு தேதிகளில் எந்த தேதி என்பதை இரண்டு குடும்பத்தாரும் செப்டம்பர் நான்காம் தேதி பேசி முடிவெடுத்துக்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்தோம்.

அப்படி என்றால் வரவேற்பு நிகழ்ச்சியை மட்டும் நவம்பர் மூன்றாம் தேதியில் வைத்துக்கொள்ளலாம் என்று எங்கள் வீட்டில் இருந்தோரிடம் சொன்னேன் நான். இதற்கு இரண்டு குடும்பங்களின் சம்மதம் தேவை இல்லை என்று தோன்றியது. ஏனென்றால் திருமணம் நடைபெறும் இடம் சுருட்டப்பள்ளி என்பதால் அர்ச்சனாவின் உரவினர்களும் ஊர் காரர்களும் முடிந்த அளவு திருமணத்திற்குதாண் வருவர். ரிசப்ஷனுக்கு  அதிகம் பேர் வர வாய்ப்பில்லை.

தவிர திருமணத்தேதியை கணக்கிட்டுப் பார்த்தால் ஞாயிற்றுக் கிழமையான நவம்பர் மூன்றாம் தேதியைத் தவிர வேறொரு பொருத்தமான தேதி இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

திருமணம் கோயிலில்தான் என்று முடிவு  செய்யப்பட்டதால் அதற்கு பதிவு செய்யவேண்டிய அவசரம் இல்லை. பெரும்பாலான கோவில்களில் பத்து நாட்களுக்குமுன்பு கூட இந்த தேதியில் திருமணத்தை நடத்திக்கொள்கிறோம் என்று சொல்லி அணுமதி பெற்றுக்கொள்ளலாம். மணமக்கள் மற்றும் அவர்களது பெற்றொர்களின் ஆதார் அட்டைகளும் புகைப்படங்களும் ரெஷன் அட்டைகளும் இருந்தால் போதும். பதிவு செய்து கொள்வார்கள்.

ஆனால் சத்திரங்களும் விழா அரங்குகளும் அதற்கு நேர் எதிரானவை. முன்பே பதிவு செய்துவிடவேண்டும். சிலரெல்லாம் ஆறு மாதத்திற்கு முன்பே பதிவு செய்துவிடுவர். கொஞ்சம் தாமதித்தாலும் சத்திரம் கிடைக்காது.

அதுவும் ரயில் நிலையங்களுக்கும் பேருந்து நிலையங்களுக்கும் அருகில் உள்ள சத்திரங்களும் பார்ட்டி ஹால்களும்தான் திருமண வீட்டாரின்  முதல் இலக்கு. அது கிடைக்கவில்லை என்றால் அவ்வளவுதாண். ஆட்டோவில் ஏறி அவர்களின் நிகழ்ச்சிக்கு செல்லும் ஏதோ ஒரு சொந்தக்காரர்,
”ஃபங்ஷன வைங்கடான்னா ஏதோ ஒரு சந்துக்குள்ள வெச்சிருக்கான் வெலங்காதவன்.” என்று திட்டிக்கொண்டே ஆட்டோவில் ஏறுவார். இங்கு மண்டபங்களில் திருமண நிகழ்ச்சிகளை பதிவு செய்யும் பாதி பேருக்கு அதுதான் நிலைமை.

நவம்பர் மூன்றாம் தேதி முகூர்த்தநாள். கொஞ்சம் தாமதித்தாலும் வேறு யாராவது பதிவு செய்துவிடுவார்கள் என்பதால் ஆகஸ்ட் பத்தொன்பதாம் தேதியே வேப்பம்பட்டில் உள்ள டி.கே.சி. மஹால் (DKC Mahall) உரிமையாளரை சந்தித்து தேதியை வாய்மொழியாக சொல்லிவிட்டுவந்தோம் நானும் அப்பாவும். ஒரு நல்லநாள் பார்த்து பதிவேட்டில் குறித்துக்கொள்ளலாம் என்றார் அவர்.

அன்று மாலையே அப்பாவை அலைபேசியில் அழைத்து இன்னொருவரும் அதே நாளில் பதிவு செய்ய வந்திருக்கிறார் என்று சொன்னார். நாங்கள் வாய்மொழியாக சொன்னதால்தான் அவர் அழைத்திருக்கிறார். அப்பா யோசித்துவிட்டு சரி வேறு யாரேனும் வந்தால் அவர்களுக்கே கூட கொடுத்துவிடுங்கள் பரவாயில்லை என்று சொல்லியிருக்கிறார். ஏனென்றால் அன்றைய தேதியில் நாங்கள் யாரையும் கலந்து பேசவில்லை.
”வேணாம் பா. நான் உங்களுக்கே குடுக்குரேன். நவம்பர் மூனு உங்களுடையது.” என்று உறுதியாக சொல்லி பதிவு செய்ய வந்தவரை திருப்பி அனுப்பினார் அந்த உரிமையாளர்.

உரிமையாளர் மிகவும் நல்ல மனிதர். நல்ல பண்பாலர். அண்ணனுக்கும் அதே விழா அரங்கில்தான் வரவேற்பை வைத்திருந்தோம். எங்களுக்கு அப்போழுதிலிருந்தே அவருடன் நல்ல பழக்கம் இருந்தது.

அவர் அவ்வளவு உறுதியாக சொன்னதால் அப்பாவும் சரி என்று சொல்லிவிட்டார். நாங்கள் பதிவேட்டில் எழுதாமலேயே அது எங்களுடைய தேதி என்று ஆகிப்போயிருந்தது. நம்பிக்கையுடன் அடுத்தவேலைகளை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தோம்.

அதில் மிக முக்கியமானது புகைப்படக்காரரிடம் தேதி வாங்குவது. அன்று முகூர்த்தநாள் என்பதால் அவர்களுக்கும் கிராக்கி அதிகம். அதனால் முதலிலேயே பதிவு செய்வது நல்லது என்று தோன்றியது.

எனது தேர்வு நண்பர் நிஷாந்த். ஜீனஸ் ஃபோட்டோகிராஃபி என்ற பெயரில் ஒரு குழுவுடன் இயங்கி கொண்டிருக்கிறார். அண்ணனுக்கும் அவரைத்தான் புகைப்படம் எடுக்க நியமித்தோம். சுமார் ஆறு லட்சம் வரை விலை நிருநைத்து நிகழ்ச்சிகளில் புகைப்படம் எடுத்து தருகிறார்கள்.

விலை என்பது அந்தந்த நிகழ்ச்சி மற்றும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் பேக்கேஜ்களை பொருத்தது. நான் கேட்டவுடனேயே சரி என்று சொன்னார் நிஷாந்த். ”உங்க மேரேஜ்க்கும் பண்ணித்தரேன் ப்ரோ.  ரேட் எல்லாம் பாத்துக்கலாம்.” என்றார். திருமணத் தேதி அன்று முடிவாகாததால் அதைப்பற்றி பிறகு சொல்கிறேன் என்று சொன்னேன்.
”ப்ரோ டேட் கன்ஃபார்ம் தான.” என்றார். நான் அப்பாவிடம் ஒருமுறை கேட்டுவிட்டு ”கன்ஃபார்ம்தான்.” என்றேன்.

அதன் பிறகு செப்டம்பர் நான்காம்தேதி சென்று நிச்சயம் செய்து நவம்பர் ஒன்றாம் தேதியை திருமணத்தேதியாக முடிவு செய்ய வரவேற்பு மூன்றாம்தேதி என்பதில் எந்த மாற்றமும் இருக்கவில்லை.

அன்று இரவே நண்பர் லியோவிடமும் அடுத்தநாள் எனது உடன் பணிபுரிபவர்களிடமும் நவம்பர் ஒன்றாம் தேதி திருமணம் மூன்றாம் தேதி ரிசப்ஷன் என்று சொல்லி இருந்தேன். அன்று மாலையே வரவேற்பு தேதியை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய டி.கே.சி. மகாலை அணுகினார் அப்பா. அவர் சென்றுவிட்டு வந்தடும் அன்று இரவு சாப்பிட்டு முடித்து அமர்ந்தோம்.

யாரும் எதுவும் கேட்கவில்லை. அவராகவே சொன்னார்.
”மண்டபம் கிடைக்கல. யாரோ புக் பண்ணிட்டாங்க.”
இடியை இறக்கியதுபோல் இருந்தது எனக்கு. முதலில் நம்பமுடியவில்லை.
”அவர்தான் அன்னைக்கு ஃபோன்ல அவ்வளவு ஸ்ட்ராங்கா சொன்னாரே! அப்புரம் எப்பிடி வேற யாராச்சும் புக் பண்ணி இருப்பாங்க?” என்ற என்னுடைய அந்த ஆச்சர்யமும் அதிர்ச்சியும் தோய்ந்த கேள்விக்கு முதல் சில நிமிடங்களுக்கு எந்த பதிலும் இல்லை.
”எங்கேயோ கேர்லசா இருந்திருக்கேன் பா. என்னுடைய பையன்தான் புக் பண்ணிட்டான் னு நெனைக்குறேன். அவன் வந்தா என்ன ஏதுனு கேட்டு சொல்லுரேன்.” என்று உரிமையாளர் சொன்னதாக அப்பா சொன்னார்.
”என்ன ஃபங்ஷனுக்கு புக் பண்ணி இருக்காங்களாம்?” என்று நான் அப்பாவிடம் கேட்க அந்த கேள்வியைத்தான் அவர் அந்த உரிமையாளரிடமும் கேட்டிருக்கிறார். நான் அப்பாவிடம் கேட்காமல் இருந்தாலும் மொத்த கதையையும் சொல்லி இருப்பார். ஆனால் எனக்குத்தான் அந்த நேரத்தில் பொருமை இல்லை.

அவர்கள் வலைகாப்புக்காக பதிவு செய்திருக்கின்றனர். பதிவு செய்தவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது ஒரு பெண் எடுத்திருக்கிறார்.
”அவரு எதுக்கு இந்த ஹால புக் பண்ணாருனு தெரியல. எங்க கிட்ட கேக்காம கொள்ளாம அவரு பாட்டுக்கு வந்து புக் பண்ணிட்டிருக்காறு. எங்களுக்கு ஆளுங்க அதிகம். எங்களுக்கு எடம் பத்தாது. நாங்க எதுக்கோ நாளைக்கு வீட்டுல இன்னொருவாட்டி கலந்து பேசிட்டு சொல்லுரோம்.” என்று சொல்லியிருக்கிறார் அந்தப் பெண். இதையெல்லாம் அப்பா எங்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். “அது சரி இதுல இந்த பஞ்சாயத்து வேறயா?” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். இப்போது அவர்கள் பதிவை ரத்து செய்தால் அரங்கம் எங்களுக்கு.

பொதுவாக இந்த மாதிரி நேரங்களில் பெண்கள் எடுக்கும் முடிவுகள் எல்லோர் வீட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். லேசாக ஒரு நம்பிக்கை பிறந்தது. இருந்தாலும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல்,
”சரி அவங்களுடைய டைமிங் என்ன? எத்தன மனிக்கு அவங்களுக்கு ஃபங்ஷன்?” என்றேன்.
அது உறுதியாக தெரியவில்லை என்றார் அப்பா.
”இப்போ என்ன பண்ணுரது?” என்று கேட்க.
”இப்போதைக்கு ஒன்னும் பண்ண முடியாது. நாளைக்கு வரைக்கும் வெய்ட் பண்ணிதான் ஆகனும்.” என்று சொன்னார்.
அவர்களின் பதில் வரும்வரை காத்திருக்கவேண்டாம். வேறேதாவது மண்டபம் கிடைக்கிறதா என்றும் தேட சொல்லி இருந்தேன் அப்பாவிடம்.

அன்றைய இரவு மிக நீண்டதாக இருந்தது. வாட்ஸப்பை திறந்தபோது சிக்கினாள் சுவேதா. குறள் பதிவுகள் வாட்ஸப் வாயிலாக ஆலங்குடிக்கு பறந்தன. புலம்பி தீர்த்துவிட்டேன்.
”வளகாப்பெல்லாம் ஜென்றலா ஈவினிங் வைக்கமாட்டாங்க. மேக்சிமம் காலைலதான் வைப்பாங்க.” என்றாள். அதையேதான் அம்மாவும் சொன்னார்.

அடுத்தநாள் அங்கிருந்து பதில் வரவில்லை. அப்பாவும் ஒவ்வொரு மண்டபமாகஏறி இறங்கிக்கொண்டிருந்தார். கல்யான மண்டபங்கள் என்றால் என்பதாயிரம்வரை போகும். அதுவே விழா அரங்குகள் என்றால்  முப்பதாயிரத்துக்குள் முடித்துக்கொள்ளலாம். தவிர வெரும் வரவேற்பு நிகழ்ச்சி என்றால் விழா அரங்கே போதும். ஆனால் பந்திகளையும் கூட்டங்களை ஒழுங்கு படுத்தும் விதத்தையும் சரியாக திட்டமிடவேண்டும். இல்லையென்றால் சிக்கிக்கொள்வோம்.

சனிக் கிழமை செப்டம்பர் ஏழாம் தேதி மாலை நாங்கள் அந்த அரங்கின் உரிமையாளரை மீண்டும் சந்தித்தோம். நான் வெளியில் நின்று கொண்டிருந்தேன்.

அந்த பதிவாளர்கள் ரத்து செய்யும் எண்ணத்தை ரத்து செய்திருந்தனர் என்று அவர் சொன்னதிலிருந்து புரிந்தது.
”அவங்க காலைல ஃபங்ஷன் வெச்சிருக்காங்க. மதியத்துக்குள்ள முடிஞ்சிரும். சாயுங்காலம் நீங்க வழக்கம் போல எடுத்துக்கோங்க.” என்றார். ஆனால் சமைப்பதுதான் கஷ்டம். அவர்கள் முடித்து கிளம்பி அரங்கை ஒப்படைத்து சமையலை தொடங்கி மாலை ஏழு மனிக்குள் பந்தி பறிமாறுவதுதான் சிக்கல். இது அனைவருக்கும் புரிந்தது.
”நாலாந்தேதி வேணும்னா எடுத்துக்கோ பா. இப்போவே குடுத்துடுரேன். நீ முன்னாடியே சொன்ன. நான் மறந்துட்டேன். இதுல பொய் சொல்லுரதுக்கெல்லாம் ஒன்னுமில்ல.” என்று அந்த உரிமையாளர் சொன்னது காதில் விழுந்தது.
அவர் நினைத்திருந்தால்
’சொல்லிட்டு இவ்வளவு நாள் கழிச்சு வந்தா எப்புடி பா ஞாபகம் இருக்கும்?’ ’நீங்க சொன்ன அப்பஓவே ஒரு ரெண்டு மூனு நாளுக்குள்ள வந்து புக் பண்ணிட்டு போயிருக்கனும்.’ என்று சொல்ல எவ்வளவு நேரம் ஆகி இருக்கும்?
ஆனால் அந்த மனிதர் அதை எல்லாம் சொல்லாமல் வெட்ட வெளியில்
‘நான் மறந்துட்டேன். இதுல பொய் சொல்லுரதுக்கு ஒன்னுமில்ல.’ என்று சொல்லும் பண்பு கொண்டவராக இருக்கிறார் என்றால் அதைவிட அவரின் உயர்ந்த குனத்திற்கு வேறு சாட்சி தேவை இல்லை என்று தோன்றியது.

உண்மையிலேயே எங்கள்மீது தவறு இருந்தது. வாய்மொழியாக சொல்லிவிட்டு பதிநைந்து நாட்கள் கழித்து போனால் அவர் மறந்திருக்கத்தானே செய்வார்? என்னதான் அன்று மாலையே அலைபேசியில் அழைத்து உறுதியாக சொன்னாலும் சரி நாங்கள் கூடுதல் கவனமாக இருந்திருக்கவேண்டும் என்று தோன்றியது.

அந்த தர்ம சங்கடமான நிலையிலும் யாரையும் புண் படுத்திவிடக்கூடாது என்பதில் அவர் எவ்வளவு கவனமாக இருந்திருக்கிறார். இத்தனைக்கும் அவ்வளவு பெரிய கோடீச்வரன் அவர். இது மாதிரியான குணத்தில் உயரிய மனிதர்களைப் பற்றி குறிப்பிடவேண்டிதான் இந்த பதிவை தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

எந்த ஒரு உறுதியான முடிவும் எடுக்கமுடியாமல் அந்த மனிதரிடம் விடைபெற்றுக்கொண்டு விழா அரங்கைத்தேடி விரைந்து இருதியாக ஒரு விழா அரங்கை கண்டுபிடித்தோம். கிட்டத்தட்ட அதையாவது உறுதி செய்து கொள்ளலாம் என்ற நிலைதான். அடுத்தநாளான செப்டம்பர் எட்டு ஞாயிறன்று உரிமையாளரை பார்த்து திரும்பினார் அப்பா. ஆனால் அவர்களின் நிபந்தனைகள் ஒத்துவரவில்லை. அம்மாவுக்கு அறவே பிடிக்கவில்லை.
”இப்போ நீங்க புக் பண்ணனும்நு நெனைக்குற ஓனருக்கு இன்னொரு மண்டபம் கூட இருக்குதான? இந்த ஹால் அவருடையது தான?” என்று அந்த உரிமையாளரின் பெயரை சொல்லி கேட்டார் அம்மா. ”இம்.” என்றோம் நானும் அப்பாவும்.
”அந்த ஓனருடைய மண்டபத்துல கல்யாணம் பண்ணவங்க யாருமே நிம்மதியா வெளிய வரல. முடியும்போதெல்லாம் ஏதோ ஒரு சண்டவரும். அவங்க சொல்லுர ஆள வெச்சிதான் சமைக்கனும்னு சொல்லுவாங்க. சாப்பாடு கூட நல்லா இருக்காது.” என்றார் அம்மா.
அந்த நிபந்தனைதான் அப்பாவிடமும் விதித்து இருந்தனர்.
”பேசாம டி.கே.சி யையே புக் பண்ணிடுங்க. நமக்கு சாப்பாடு நல்லா இருக்கனும். ஒருவாட்டிதான் பண்ணுறோம். நல்லா பண்ணனும். அந்த மனிஷனும் நல்ல மனிஷன்.”
”பேசாம நவம்பர் நாலாந்தேதியே வெச்சிக்கலாமா?” என்றார் அப்பா என்னிடம்.
”மூனாம்தேதி தரமாட்டாரா? காலைலதான சீமந்தம்?” என்று கேட்ட அம்மாவிடம்,
”அவரென்னமோ தரேன்னுதான் சொல்லுராரு. ஆனா சமையல் லேட் ஆயிடுச்சுனா பந்தி லேட் ஆயிடும். அப்புரம் எல்லாரையும் தேவையில்லாம வெய்ட் பண்ண வைக்கனும். அதுவும் அங்க ஒரு பந்தியில என்பது பேருதான் உட்கார முடியும். கொஞ்சம் லேட் ஆனாலும் கூட்டம் தேங்கிடும்.” என்றார் அப்பா.

இனி இதை எவ்வளவு விவாதித்தாலும் ஒரு முடிவுக்கு வரமுடியாது என்று விளங்கியது. யாரோ ஒருவர் கீழிறங்கியே ஆகவேண்டும்.
”சரி நவம்பர் நாலாம் தேதியே புக் பண்ணிடுங்க. வேற என்ன செய்யுரது. திங்கட் கிழமதான். வரனும் நு நெனைக்குறவங்க வரட்டும்.” என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தேன்.

ஏற்கனவே மூன்றாம்தேதி என்று நான் சொல்லியிருந்தவர்கள் எல்லாம் என்னை என்ன நினைப்பார்கள்? அதாவது பரவாயில்லை. இப்போது நிஷாந்திடம் என்ன சொல்வது? தேதி மாறிவிட்டது என்று சொன்னால் அதை எப்படி எடுத்துக்கொள்வார்? நான் மட்டும் கேட்காமல் இருந்திருந்தால் வேறெங்காவது அதிகவிலைக்கு ஒப்பந்தம் போட்டிருப்பார். இப்போது என்னால் புகைப்படக்காரர் நிஷாந்துக்கும் சிக்கல் என்று தோன்றியது. அலைபேசியில் அழைத்து விஷையத்தை சொல்லலாமா என்று கூட நினைத்தேன். இருந்தாலும் அவர்கள் வரட்டும் எனக் காத்திருந்தேன்.

போனவர்கள் திரும்பி வந்தனர்.
”புக் பண்ணியாச்சா .” என்றேன் நான்.
”பண்ணியாச்சு.” என்றார் அப்பா.
”என்னைக்கு நாலாந்தேதியா?”
”இல்ல நவம்பர் மூனு.”
”எப்பிடி! அவங்க கேன்சல் பண்ணிட்டாங்களா?”
”இல்ல. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஹால நமக்கு வாங்கித்தந்துடிரேன் னு சொன்னாரு அவரு. காலைலயே வேலைய ஆரம்பிச்சிட சொல்லிடுரேன்நும் சொல்லிட்டாரு. அதனால அன்னைக்கே புக் பண்ணிட்டோம்.” என்றார் அப்பா.

அழைப்பிதழ் அச்சிடப்பட்டு உரவினர்களுக்கு கொண்டு போய் கொடுத்துக்கொண்டிருந்தனர் அப்பாவும் அம்மாவும்.
”நாங்க எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலயா? ஒரே வீட்டுல இருந்து எதுக்கு அக்கா தங்கச்சி ரெண்டு பேரையும் எடுக்குறீங்க? கேட்டு இருந்தா நான் குடுத்து இருக்க மாட்டனா?” என்று அழைப்பிதழ் கொடுக்க சென்ற எனது பெற்றோரிடம் சண்டை பிடித்திருக்கிறார் மாமா முறை கொண்ட தூரத்து உரவினர் ஒருவர்.
”பெரியவனுக்கு அந்த பக்கம் போயிட்டீங்க. சின்னவனுக்கு என் கிட்ட ஒருவார்த்த கேட்டு இருக்கலாம்ல. உங்க வீட்டுல என் பொண்ண குடுத்து நான் சம்மந்தம் வெச்சி இருப்பேனே.” என்று கண்ணீருடன் கேட்டு இருக்கிறார் அம்மாவின் சிறு வயது தோழியான அத்தை முறை கொண்ட ஒருவர். இதை எல்லாம் அப்பாவும் அம்மாவும்தாண் அன்று இரவு வந்து சொன்னார்கள்.
”எல்லாம் பிட்டு.” என்றேன் நான் அப்பாவிடம்.
”அப்படி இருந்தா அழவேண்டிய அவசியம் இல்லையே.” என்றார் அப்பா.

அந்த பெயர் குறிப்பிட விரும்பாத பெண்ணும் அவரது அம்மாவும் இரண்டு வருடங்களுக்குமுன் செய்துவிட்டு போன காரியம் எந்த அளவிற்கு மன வலியை அப்பாவிற்கு ஏற்படுத்தி இருக்கிறது என்பது அவரது அன்றைய சந்தோஷத்திலிருந்து தெளிவாக தெரிந்தது.
”அவங்க எல்லாம் உனக்கு குடுக்கனும்னுதாண்டா நெனச்சி இருக்காங்க. நமக்குதான் தெரியாம போயிடுச்சு. நெருக்கமான சொந்தமே இப்பிடி பண்ணிட்டாங்களே. இனி மத்த சொந்தக்காரங்கள போயி எப்பிடி கேக்குரதுனு யோசிச்சேன்.” என்று சொல்லிக்கொண்டிருந்தார் அப்பா. அவர்களுக்கெல்லாம் எனக்கு பார்வை இல்லை என்று தெரியும். இருந்தும் அப்படி சொன்னது எனக்கே கொஞ்சம் ஆச்சர்யம்தான்.
அம்மாவை அன்று இரவு கையிலேயே பிடிக்க முடியவில்லை.

அடுத்தடுத்த நாட்களில் மீதம் இருந்த அழைப்பிதழ்களையும் கொடுத்திருந்தனர். நானும் வரவேற்பையே முக்கியமான இலக்காக எண்ணி எனது நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் முடிந்த அளவுக்கு நேரில் சென்றே கொடுத்தேன். அப்படியாவது வருவார்கள் என்ற நம்பிக்கைதான்.

என்னதான் வெளியில் சந்தோஷமாக அழைப்பிதழ்களை கொடுத்துக்கொண்டிருந்தாலும் திருமணத்தைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் வரவேற்பு நிகழ்ச்சியைப் பற்றிய பதட்டம் இருந்து கொண்டேதாண் இருந்தது.

அந்த முன்பின் தெரியாத பெண் வலைகாப்புக்கு முன்பே குழந்தைப் பெற்றுவிட்டால்கூட நாம் இந்த சிக்கலில் இருந்து வெளிவந்துவிடலாம் என்று தோன்றியது. சுயநலம்தான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் நடக்கவில்லை.
”என்ன டா உங்க பேரு இருக்கவேண்டிய எடத்துல வேற யாரு பேரோ இருக்கு?” என்று கேட்ட விமலா அங்கு வலைகாப்பு நடப்பதைக் கண்டு நான் சொல்லும் முன்னே ஒரு முடிவுக்கு வந்திருந்தார். நாங்களும் அங்கிருந்து எண்ணி மூன்றாவது நிமிடம் வீட்டிற்கு வந்திருந்தோம்.

வீட்டில் மதிய உணவை முடித்துவிட்டு கடைக்கு சென்று வரவேற்பு நிகழ்ச்சிக்கான பொருட்களை வாங்கிக்கொண்டு மறுபடியும் வீட்டிற்கு வந்து தயாறாகி அழகு நிலையம் சென்று பின் விழா அரங்கை அடைந்தோம்.

இருக்கும் நிலைமையை கருத்தில் கொண்டு இரண்டு மணிக்கெல்லாம் அப்பா விழா அரங்குக்கு சென்றிருந்தார். அவர்களை அனுப்பிவிட்டு பின் அரங்கை முழுவதும் காலி செய்து சமையல் வேலைகள் மூன்று மணிக்கு தொடங்கி இருந்ததாம். நான் மாலை ஐந்தறை மணிக்கு சென்றிருந்தேன்.
உள்ளே சென்றால் மணமகள் அறையில் மணமகள் அலங்காரம். மணமகன் அறையில் மற்ற பெண்கள் எல்லாம் அலங்காரம். எப்படியோ உள்ளே இருப்பவர்களை எல்லாம் துரத்தி தயாராகுவதற்குள் போதும் போதும் என்றாகிப்போயிருந்தது. வழக்கம்போல பாலாஜி அண்ணாதாண் என்னை கோட் டை எல்லாம் போட்டு தயார் செய்தார்.
வெளியே வந்து மேடையில் நின்றோம்.
தாய் மாமா விஜயகுமார்தான் மாலை அணிவிக்கவேண்டும். அவரது மணைவி அந்த நேரத்திற்கு வராததால் நந்தா மாமாவிடமும் அவரது மணைவி தேவி அக்காவிடமும் மாலை கொடுக்கப்பட்டது. அம்மாதான் அவர்களை சென்று அணிவிக்க சொல்லியிருக்கிறார்.

நல்லவேளை நந்தா மாமா சமயோஜிதமாக செயற்பட்டு விஜி மாமாவையும் உடன் அழைத்துக்கொண்டே மேடை ஏறிவிட்டார். இல்லை என்றால் மனக்கஷ்டம் வந்திருக்கும். தானிருக்கும்போதே தனக்கு கிடைக்கவேண்டிய அங்கீகாரம் பிறருக்கு கிடைக்கும்போது ஏற்படும் வலியானது அனுபவத்தால் மட்டுமே உணரக்கூடியது.

மூவருமாய் சேர்ந்து மாலை அணிவித்து விழாவை தொடங்கி வைத்தனர். நான் இடப்புரமாக நிற்க அர்ச்சனா எனது வலப்புரமாக நின்றுகொண்டிருந்தாள்.

வந்தவர்களெல்லாம் ஒருவர் பின் ஒருவராக மேடை ஏறி அன்பளிப்பை அளித்துவிட்டு சென்றனர். எல்லாம் நல்லபடியாகத் தான் போய்க்கொண்டிருந்தது. திடீரென்று மேடையில் ஒரு சலசலப்பு. எல்லோரும் அர்ச்சனாவை சூழ்ந்துகொண்டனர். என்னவென்று பார்த்தால் மேடையில் நின்றபடி அழுதுகொண்டிருக்கிறாள். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. எல்லாரும் காரணம் கேட்க ஆரம்பித்திருந்தனர்.

0 comments:

Post a Comment

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube