12 February 2020

திருமணம் என்னும் அத்தியாயம்.

Posted by Vinoth Subramanian | Wednesday, February 12, 2020 Categories: , , ,


வணக்கம். எனது திருமணத்திற்குப்பின் இந்த வலைதலத்தில் நான் எழுதும் முதல் பதிவு. பிடித்திருந்தால் பகிருங்கள்.


திருமணமாகி நூறு நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. நினைத்துப்பார்த்தால் சில நேரங்களில் எனக்கே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. சில நேரங்களில் உண்மைகள் கூட ஆச்சர்யங்களாகிப்பொய்விடுகின்றன.
சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு ஒருவர் என்னிடம்திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இருக்கிறதா? Do you have any idea to get married?” என்று கேட்டார். அதற்கு நான் “I have a desire to get married but I don’t have an idea to get into that.” என்றேன். ”ஆசை இருக்கிறது ஆனால் திட்டமில்லை.” என்றேன் அவரிடம். ஆசை இருந்ததற்கு காரனம் நானும் சராசரி மனிதன் என்பதால். திட்டமில்லை என்றதன் காரனம் எனக்கு பார்வையில்லை என்பதால்.
காலப்போக்கில் அந்த வாக்கியம் அப்படியே தலைகீழாகிப்போனது. பார்வையில்லை என்பதாலேயே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது. ஆனால் இந்தமுறை அது ஆசையாக அல்லாமல் அடைந்தே தீரவேண்டிய இலக்காகிப்போனது. ஒரு மனிதன் தன் வாழ்வில் அடுத்தக்கட்டத்தை அடையவேண்டுமென்றால் ஒன்று அவன் அதன்மீது ஆசைப்பட்டிருக்கவேண்டும்  இல்லையென்றால் அதனை மையமாகக்கொண்டு யாரிடமாவது அவமானப்பட்டிருக்கவேண்டும்.
2019 அக்டோபர்தான் டார்கெட். குருபெயர்ச்சி முடிவதற்குள் திருமணத்தை முடித்துவிடவேண்டும் என்பதுதான் திட்டம்.
அந்த இலக்கைத்தான் எட்டிப்பிடிக்க போராடிக்கொண்டிருந்தோம். அக்டோபர் மாதத்திற்குள் முடித்துவிடவேண்டும் என்ற திட்டத்தில் ஒருநாள் தள்ளிப்போய்விட்டது. இன்னும் சரியாக சொல்லவேண்டும் என்றால் 6 மணிநேரம் 27 நிமிடங்கள் தாமதமாகிவிட்டது. சரியாக நவம்பர் 1, 6 மணி 27 நிமிடங்களுக்கு எங்களது வாழ்வில் திருமணம் என்னும் அத்தியாயம் இறைவனால் அல்லது இயற்கையால் எழுதப்பட்டது.

பொதுவாக திருமணம் என்று சொன்னால் முதல் எழும் கேள்விபொண்ணு என்ன பண்ணுராங்க?” என்பதுதான். ஆனால் பார்வையற்றவர் வாழ்வில் திருமணம் என்று யாரிடமாவது சொன்னால் பிறரின் மனதில் எழும் முதல் கேள்விபொண்ணு கண்ணு தெரிஞ்சவங்களா இல்ல . . . .” என்பதுதான். பார்வை உள்ளவர்தான் என்று சொன்னால் அதற்குபின் சுவாரசியமான கதை அநேகர் வாழ்வில் இருக்கும். ஆனால் எனது வாழ்வில் அப்படி ஒன்றும் இல்லை. பெண்ணின் அம்மா அப்பாவிற்கு தூரத்து சொந்தம் என்பதால் என்னை சிறுவயதிலிருந்தே நன்றாக தெரியும். தன் பெண்ணை தருவதாக கூட சொல்லிக்கொண்டிருந்தார். நான் விளையாட்டாக எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் அது உண்மையாகும் என்றெல்லாம் நினைக்கவில்லை. அண்ணனுக்கு தன் முதல் மகளை கொடுத்தவுடனேயே தனது இரண்டாவது மகளை எனக்குத் தருவதாக சொல்லிக்கொண்டிருந்தார். என்னதான் சொந்தக்காரப் பெண்ணாக இருந்தாலும் அவளுக்கும் ஏதாவது எண்ணமோ திட்டமோ ஆசையோ இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். பார்வையற்ற என்னை ஏற்றுக்கொள்வதில் அவளுக்கு தயக்கம் இருக்கும் என நினைத்துக்கொண்டிருந்தேன். சிறுவயதிலிருந்தே பழகும் பெண்கள் கூட தயக்கம் காட்டும்போது வெரும் நான்காண்டுகள் மட்டுமே என்னைப்பார்த்து பழகிக்கொண்டிருந்தவள் எப்படி ஏற்றுக்கொள்வாள் என்றுதான் யோசனை.  ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளவேண்டுமென்றால் அந்த பெண்ணின் சம்மதமும் அவளது பெற்றோரின் சம்மதமும் மிக அவசியம். அத்தைக்கும் மாமாவுக்கும் இதில் சம்மதம் என்று ஓரளவு உறுதியாக தெரிந்தது. ஒரு கட்டத்தில் பெண்ணும் சம்மதம் சொன்னதாக கேள்விப்பட்டேன். ஆனால் மாமாவின் சொந்தக்காரர்களுக்கு இதில் துளியும் விருப்பமில்லை. அவளை ஊருக்கழைத்துச்சென்று சுமார் பதிநைந்து நாட்கள் வகுப்பெடுத்திருப்பார்கள். என்னைத் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று சொல்லி மூளைச்சலவை செய்திருந்தார்கள். என்னை திருமணம் செய்துகொண்டால் என்னென்ன சிக்கல் எல்லாம் வருமென்று நான் சொல்ல எண்ணினேனோ அத்தனையும் மாமாவின் உரவினர்களால் சொல்லப்பட்டது. ஊரிலிருந்து அவள் தனது வீட்டுக்குவந்தவுடன் முடிவை மாற்றி இருப்பாள் என்றுதான் நினைத்தேன். அவள் விருப்பத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று கேள்வி பட்டேன். இருந்தாளும் எனது வாய்ப்புக்காக காத்திருந்தேன். முடிந்தளவிற்கு குழப்புவதுதான் திட்டம். 2019 ஜூலை மாதம் எனது வீட்டிற்கு வந்திருந்தபோது என்னைத் திருமனம் செய்துகொண்டால் வரும் சாதக பாதகங்களை அப்பா அவளிடம் எடுத்து சொன்னார். இவற்றையெல்லாம் மீறி சம்மதம் என்றால் திருமனத்திற்கு தயாராகலாம் என்று சொன்னார் அப்பா அவளிடம். மாமாவும் உடனிருந்தார். அர்ச்சனாவுக்கு தமிழில் பேசத்தெரியாது. எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அவள் சொன்ன ஒரு வார்த்தைநேனு சேஸ்குண்டானு மாமா.” என்பதுதான். அந்த வார்த்தையில் வெட்கம் இல்லை. உறுதிதான் இருந்தது. இரண்டாவது முறையும்நேனு கச்சிதங்கா சேஸ்குண்டானு.” என்று தீர்கமாக வந்து விழுந்த அந்த வார்த்தைக்கு முன்னால் நான் எதுவும் செய்ய முற்படவில்லை. இருந்தாலும் இரண்டு நாள் கழித்து அவளை தனியாக அழைத்து அத்தையின் ஆசைக்காகவும் மாமாவின் விருப்பத்திற்காகவெல்லாம் சம்மதம் சொல்லவேண்டாம் என்றேன். மேலும் ஒரு பார்வையுள்ள பெண் ஒரு பார்வையற்றவனை திருமணம் செய்துகொண்டால் சின்னச்சின்ன சந்தோஷங்களையெல்லாம் அந்தப்பெண் இழக்கவேண்டியிருக்கும் என்பதையும் சொன்னேன். எல்லாத்தையும் கேட்டுக்கொண்டுவிட்டு அவள் இருதியாக சொன்ன அந்த ஒரு வார்த்தையின் விளைவுதான் நவம்பர் ஒன்றாம் தேதி நடந்த சம்பவம்.

ஒரு திருமணத்திற்குள் எத்தனை உரவுகள்? எத்தனை உணர்வுகள்? யோசித்துப்பார்த்தால் வியப்பாகவும் விந்தையாகவும் இருக்கிறது. அக்டோபர் மாதம் முப்பதாம்தேதி முகுர்த்த கால் நடுவதற்காக அதற்கு முந்தினம் நான் அப்பாவுடன் சென்று மூங்கில் கொம்புகளை வண்டியில் பின்னால் அமர்ந்துகொண்டு பிடித்துக்கொண்டுவரும்போது மூன்று மாதங்களாக எதைத்தூக்கினாலும் வலித்துக்கொண்டிருந்த வலது தோல்பட்டை எதற்காக வலிக்கிறது என்பதை மூன்று மாதம் கழித்து கண்டுபிடித்தேன். கடந்த 2019 ஆகஸ்டு மாதம் நான்காம்தேதி ரயிலில் உள்ளே செல்லும்போது வழியில் ஒருவர் அமர்ந்திருந்தபோது, என் கால் இடரி  நான் விழும்போது, கீழே முழுவதும் விழாமல் கையை ஊனும்போது எற்பட்ட ஒரு உள் காயம். அதற்கு அன்று மட்டும் மருந்து போட்டுக்கொண்டு மறந்துவிட்டேன். அது வலிக்கும்போதெல்லாம் எதற்காக வலிக்கிறது என்று யோசித்து யோசித்து அன்றுதான் நினைவுக்கு வந்தது. நான் விழுந்த அதேநாளில் பயணத்தின்போது ஒருவர் சொன்ன ஒரு வித்தியாசமான அறிவுரையும் நினைவுக்கு வந்தது. ”கல்யானம் ஆகலையா இன்னும்?” என்று கேட்டவர், “அதுவும் நல்லதுதான். இப்படியே இருந்திடுங்க சார். நாம பாட்டுக்கு இருக்கலாம். வரவங்க எப்படி இருப்பாங்களோ தெரியாது. இப்போவெல்லாம் எல்லாரும் ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணுராங்க. உங்களுக்கும் இன்ஃபீரியாரிட்டி காம்ப்லெக்ஸ் வந்திடும்.” என்று சொன்னவர் தாம்பரத்திற்கு தன் மகளை பார்க்கச் செல்வதாக சொன்னார். நமது தகுதிக்கு இந்த சுமையை சுமக்க முடியுமா என்று நினைத்துக்கொண்டிருந்தபோதே வீடு வந்தது. மூங்கில் கொம்புகளை இரக்கிவைத்த பிறகும் ஏதோ தோளின்மீது இருப்பது போன்றே இருந்தது. அதன் பிறகு நடந்தவையெல்லாம் கனவுகள்தான். அவையெல்லாம் நல்ல கனவா அல்லது கெட்ட கனவா என்பதெல்லாம் வாழும் வாழ்க்கையில்தான் தெரியும். கடந்த பிப்ரவரி ஒன்பதாம் தேதி இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டுடன் நூறு நாட்கள் முடிந்து விட்டது. ஒரே பதிவில் எழுதிவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் படிப்பவர்களுக்கு சலிப்பு தட்டிவிடும் என்பதால் பகுதிகளாகப் பிரித்து வெளியிடலாம் என்றூ நினைக்கிறேன். மிகப்பெரிய சுவாரசியங்கள் இல்லையென்றாலும் என்னால் முடிந்த அளவிற்கு நடந்த நிகழ்ச்சிகளுக்கு மெருகு ஊட்ட முயல்கிறேன்.

முகுர்த்த கால் அன்று முன்னமே எழுந்திருக்க வேண்டுமென்பதுதான் எனக்கு முன் இருந்த முதல் சவால். ஒருவனுக்கு திருமணம் ஆகப்போகிறதென்றால் அந்த நாட்களில் அவன் சந்திக்கும் முதல் இழப்பு தூக்கம். திருமணத்திற்கு பிறகு அந்த தூக்கமென்பது அவனது துணையை பொருத்தது. ஆறு மணிக்கெல்லாம் எழுந்துவிட்டேன். எனக்குமுன் முகுர்த்த கால் நடுவதற்காக மற்றவர்களெல்லாம் எழுந்துவிட்டார்கள். எழுந்து வந்து வெளியே பாற்த்ததும் ஒரு சிறிய அதிர்ச்சி காத்திருந்தது.

2 comments:

  1. வாழ்க்கை என்னும் நெடுங்கதையில் திருமணம் என்கிற தவிர்க்கமுடியாத அத்தியாயத்தை எழுதத் தொடங்கிய விதம் அருமை

    ReplyDelete

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube